2.ஓ படக்குழு கோரிக்கை – ரஜினி மறுப்பு
ரஜினி நடித்த 2.ஓ படம் இந்தியாவின் பெரிய பட்ஜெட் படம் என்கிற பெருமையைப் பெற்றது.
அப்படத்தின் பட்ஜெட் சுமார் அறுநூறு கோடி என்று சொல்லப்பட்டது.
இவ்வளவு பணம் வசூலாகுமா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. அந்த சந்தேகத்தை முறியடித்து படம் பெரிய வசூல் செய்கிறது என்று சொல்கிறார்கள்.
படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் செய்திகளில், உலகம் முழுவதும் 5 நாட்களில் 500 கோடி வசூல் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இது மிகப்பெரிய சாதனை என்றும் இதைக் கொண்டாடும் விதமாக, சென்னையில் ஒரு வெற்றி விழா நடத்தலாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் எண்ணியதாம்.
அவ்விழாவில் ரஜினி கலந்துகொண்டால்தான் சிறப்பாக இருக்கும் என்றெண்ணி அவரிடம் நீங்கள் சொல்லும் நாளில் சக்ஸஸ் பார்ட்டி வைக்கலாம் என்று கேட்டார்களாம்.
ஆனால் அவரோ சக்ஸஸ் பார்ட்டியே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அதன்பின், நீங்கள் நடத்த விரும்பினால் நடத்திக்கொள்ளுங்கள் நான் அதற்கு வர இயலாது என்று சொல்லிவிட்டாராம்.
இதனால் அப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தலாமா? அல்லது ரஜினியின் கருத்துப்படி நடத்தாமல் விட்டுவிடலாமா? என்று தயாரிப்பு நிறுவனம் யோசித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.











