சினிமா செய்திகள்

சர்கார் கதை சிக்கலில் விஜய் என்ன சொன்னார்? பாக்யராஜ் வெளிப்படை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சர்கார். நவம்பர் 6 தீபாவளி வெளியீட்டுக்குத் தயாரான நிலையில் வருண் ராஜேந்திரன் என்ற இணை இயக்குநர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்தார்.

சர்கார் கதையும் தனது செங்கோல் கதையும் ஒன்று எனக் கூறினார். செங்கோல் கதையை தான் 2004-ல் விஜய்யை நாயகனாக வைத்து எழுதியதாகவும் தெரிவித்தார். ஆனால் இதை ஏ.அர்.முருகதாஸ் மறுத்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கட்டும். பார்த்துக்கொள்கிறேன். இது என்னுடைய கதைதான் என்றார்.

மேலும் முருகதாஸ், என்னுடைய கதையை பாக்யராஜ் படிக்கவே இல்லை என்றும் குற்றம் சாட்டினார். அதேசமயம், சர்கார் – செங்கோல் கதை விவகாரத்தை பேட்டி கொடுக்கிறேன் என்று சொல்லி, மொத்தக் கதையையும் பாக்யராஜ் சொல்லிவிட்டார் என்று படக்குழுவினர் புலம்பினார்கள்.

பாக்யராஜ், கதையைப் படிக்கவே இல்லை என்று முருகதாஸ் சொல்ல, படத்தின் கதை மொத்தத்தையும் சொல்லிவிட்டார் என படக்குழுவினர் சொல்ல, ரசிகர்கள் குழம்பினார்கள்.

இந்தநிலையில், எழுத்தாளர் ஜெயமோகன், இந்தப் படத்தின் கதைக்காகவும் திரைக்கதைக்காகவும் முருகதாஸுடன் இணைந்து கடினமாக உழைத்தேன் என்றெல்லாம் சொல்லியிருந்தார். 

இந்த சர்ச்சை நீதிமன்றத்துக்கு வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று இரு தரப்பினரும் சமரசம் எட்டுவதாகக் கூறியதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதாவது, ஏ.ஆர்.முருகதாஸ் சமரசத்துக்கு ஒத்துக்கொண்டார். 

இது குறித்து பாக்யராஜ் அளித்த பேட்டியில்,

“சர்கார் பட பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டுள்ளது. அது என்ன மாதிரியான சமரசம் என்பதை நீங்கள் படத்தின் டைட்டிலைப் பார்த்து தெரிந்து கொள்வீர்கள். வருண் ராஜேந்திரனுக்கு உரிய கிரெடிட் வழங்கப்பட்டுள்ளது. இளம் இயக்குநரான வருணின் போராட்டமும் நோக்கமும் என்னை பெருமை கொள்ளச் செய்கிறது. இனி கதை ஆசிரியர்கள் சங்கத்தின் செயல்பாடு இவரைப் போன்றோரை காப்பாற்றும் அரணாக இருக்கும்.

எனது மகன் தீவிர விஜய் ரசிகர். விஜய்தான் எனது மகனின் திருமணத்தை நடத்தி வைத்தார். அந்த வகையில், விஜய்யிடம் நான் இந்த விவகாரம் குறித்து பேசினேன். அப்போது அவர் என் படம், பார்த்து செய்யுங்கள் என சொல்லவில்லை. சார் உங்கள் மனசுக்கு எது சரி எனத் தோன்றுகிறதோ அதை செய்யுங்கள். ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லிவிட்டாரே என்றார். எனக்கு அந்த அணுகுமுறை ரொம்பவும் பிடித்திருந்தது.

ஆனால், விஜய் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு சமூக வலைதளங்களில் பொங்கிவிட்டனர். இது மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும்போதுதான் நாம் பொறுமை காக்கவேண்டும்” என்றார்.

Related Posts