ஓடு ராஜா ஓடு – திரைப்பட விமர்சனம்
மனைவி சம்பாதித்த பணத்தில் செட்டாப் பாக்ஸ் வாங்கச் செல்லும் எழுத்தாளர்,
போதை மருந்து விற்ற பணத்தை மொத்தவியாபாரியிடம் கொடுக்க முடியாத சிறுவியாபாரி,
திருட்டு வழக்கில் சிறை சென்று வந்து கடைசியாகப் பெரிதாக ஒரு சம்பவம் செய்து பெரும் பணம் சம்பாதிக்கத் திட்டமிடும் ஒருவன்,
இவர்களோடு தாதாயிசத்தை விட்டுவிட வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு மறைந்துவிட்ட அப்பாவின் சொல்லை மதிக்க வேண்டும் என்கிற அண்ணன், அப்பாவின் பேச்சை மதித்தால் மரியாதை இருக்காது எனும் தம்பி
இப்படி நான்கு விதமான மனிதர்களோடு மிரட்டிப் பிச்சையெடுக்க வைக்கும் ஒருவனை மீறிச் செயல்படும் சிறுமி, சிறுவன் ஆகியோரையும் இணைத்துப் பின்னப்பட்ட திரைக்கதை.
ப்ளாக் காமெடி எனும் அவல நகைச்சுவையை அடிப்படையாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கும் இந்தக்கதையில் பல நல்ல விசயங்களைச் சொல்லியிருக்கிறார்கள் படத்தை இயக்கியிருக்கும் இரட்டையர்கள் நிஷாந்த் ரவீந்திரன், ஜதின் ஷங்கர் ராஜ். ஆகியோர்.
குருசோமசுந்தரம், லட்சுமிபிரியா, ஆனந்த்சாமி, ஆஷிகா சல்வான், நாசர், சோனா உட்பட படத்தில் நடித்திருக்கும் அனைவருமே நன்றாக நடித்துப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
லட்சுமிபிரியா, ஆஷிகா சல்வான், சோனா ஆகிய மூன்று பெண்களையும் வைத்துச் சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கை முறை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஆழமான விசயங்கள்.
புரட்சிகரமானது என்று சொல்லப்படுகிற விசயங்களைப் போகிற போக்கில் சொல்கிறார்கள்.
குருசோமசுந்தரத்துக்கு ஏற்படும் சிக்கல்களில் செயற்கைத்தனம் கலந்திருப்பதால் அதன் தீவிரத்தை உணரமுடியவில்லை.
அங்கங்கே சிரிக்கவும் நிறைய சிந்திக்கவும் வைக்கும் படம்.











