சினிமா செய்திகள் நடிகர்

ரஜினியை கெட்டவார்த்தையில் திட்டிய நடிகர் – படப்பிடிப்பில் பரபரப்பு

Senthil Actor

Senthil Actor

பள்ளிப் படிப்பின் போதே நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய செந்தில், கல்லூரியிலும் நாடகத்தை விடாமல் தொடர்ந்தார். ஆண்டுவிழாக்களில் மட்டுமின்றி அடிக்கடி நாடகங்கள் எழுதி அரங்கேற்றுவதில் முனைப்பாக இருந்தார்.

கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் அன்றாட வாழ்க்கையின் பின்னால் ஓடவேண்டிய கட்டாயம். பெண்டா மீடியா உள்ளிட்ட முன்னணி அனிமேஷன் நிறுவனங்களில் பணியாற்றுகிறார்.

அப்போது கமலின் ஆளவந்தான், ரஜினியின் பாபா ஆகிய படங்கள் உட்பட ஏராளமான படங்களுக்கு வேலை செய்திருக்கிறார்.

மாதம் ஒன்றேகால் இலட்சம் சம்பளம் என்றாலும் அவருக்குள் இருந்த கலைஞன் தீராப்பசியோடு அலைகிறான்.

2008 ஆம் ஆண்டில், ஒருநாள் திடுமென வேலையை உதறிவிட்டு தீவிரமாக நாடகக்கலையில் கவனம் செலுத்துகிறார்.

சுமார் நான்கு வருடங்கள் கடும் போராட்டம். அதன்பின் அக் களம் எனும் பெயரில் கூத்துப்பட்டறையைத் தொடங்கி நடிப்புப் பயிற்சிகள் கொடுக்கிறார்.

சரியான இடம் இல்லாமல், மெரினா கடற்கரையில் பயிற்சி எடுப்பதும், அப்போது பார்வையாளர்கள் பகடி செய்வதும், பரிதாபப்பட்டு காசு போடுவதும் என பல அனுபவங்கள்.

அத்ன்பின் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவருக்கு இடம் கிடைக்கிறது.

இன்றுவரை அவருடைய கலைச்சேவை அங்கே தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அவருடைய கூத்துப்பட்டறைக்கு நிறைய திரைக்கலைஞர்கள் வருவதுண்டு. அவர்களில் பா.இரஞ்சித்தும் ஒருவர்.

மெட்ராஸ், கபாலி ஆகிய படங்கள் எடுக்கும்போதே இவரை நடிக்கக் கேட்டிருக்கிறார். அப்போது மறுத்துவிட்ட செந்திலால் காலா படத்தில் நடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் போது மீற முடியவில்லை.

காலாவில் நடித்த அனுபவங்கள் பற்றி அவரே கூறுகிறார்….

படத்தின் தொடக்கத்திலேயே வண்ணாந்துறையை இடிக்க வரும்போது காலா தடுப்பார். அதோடு நில்லாமல் அங்கிருக்கும் ஒரு பெண்ணைக் கூப்பிட்டு உன்னை அடித்தவனை நீயே திருப்பி அடி என்பார். அந்தப் பெண்ணும் என்னை அடித்துவிடுவார்.

அதனால் கடுங்கோபம் கொண்ட நான், ரஜினியை அடிக்க ஓடிவரும் காட்சி.

ரஞ்சித் என்னிடம் வந்து, அண்ணா கோபமாக வரவேண்டும் கெட்டவார்த்தை சொல்லி திட்டிக்கொண்டே அடிக்க முனையவேண்டும் என்று சொல்லிவிட்டார்.

நானும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு சென்னை மொழியில் புகழ்பெற்ற கெட்டவார்த்தையைச் சத்தமாகச் சொல்லிகொண்டே அடிக்க ஓடிவந்தேன்.

படப்பிடிப்புத் தளமே நிசப்தமாகிவிட்டது. அமைதியைத் தாண்டி இனம் புரியாத பரபரப்பு நிலவுகிறது.

எல்லோரும் என்னை அதிசயமாகப் பார்க்கின்றனர். ஷாட் முடிந்ததும் எல்லோரும் என்னப்பா இப்படி பேசிட்ட என்று துக்கம் விசாரிப்பது போல கேட்கிறார்கள்.

ரஜினிசார் என்ன சொல்வாரோ? என்று எனக்கும் பதட்டம் வந்துவிட்டது.

இருபதடி தூரத்தில் இருந்து, செந்தில் சார் என்ற குரல் கேட்கிறது, திரும்பிப் பார்த்தால் ரஜினி சார்.

என்னை அருகில் அழைத்து, இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க, நீங்க முன்னாடியே சினிமாவுக்கு வந்திருக்கணும் என்றார். ரஞ்சித்திடம் என்னைப் பற்றி விசாரித்துவிட்டு, பக்கத்தில் இருந்த சமுத்திரக்கனியிடம் இவரை எல்லோரும் பயன்படுத்தணும் என்றும் சொன்னார்.

அந்த சில நிமிடங்கள் என் உணர்வுகளைச் சொல்லவே முடியாது. சுமார் நாற்பது வருடங்கள் சினிமாவில் இருக்கும் அனுபவஸ்தர் என்னை மனமாரப் பாராட்டினார் என்பது பெரிய மகிழ்ச்சி.

நாற்பது நாட்கள் நடித்தேன். அவை அனைத்துமே மிகப்பெரிய அனுபவங்கள்.

படம் வெளியானதும் எங்கள் தெருவில் பஞ்சர் கடை வைத்திருக்கும் இஸ்லாமியர், என்னை மிரட்டுவது போல பக்கத்தில் அழைத்து, படத்தில் பார்த்தேன், நல்லா நடிச்சிருந்தீங்க, இதை நீங்கள் சொல்லவே இல்லையே என்றதோடு நில்லாமல் அவருடைய நண்பர்கள் ஏழெட்டுப் பேரை அழைத்து என்னை அறிமுகப்படுத்தி என்னோடு செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள்.

அதன்பின் காய்கறிக்கடையில், காய் விற்கும் பெண்மணி, அறிவுகெட்டவன், பொம்பள கையில அடிவாங்கியும் திருந்தல என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தார். யாரைச் சொல்றீங்க? என்று நான் கேட்டதும் உன்னைத்தான்யா, அவ்வளவு பெரிய மனுஷன கையை ஓங்கிட்டு அடிக்கப்போறியே என்றார்.

என்னை மனிதனாகப் பார்க்காமல் நடிகனாக அங்கீகரித்த கணமாகவே அதைப் போற்றுகிறேன்.

என் பால்ய நண்பர்கள் கூட என்னைத் தேடிக் கண்டுபிடித்து வாழ்த்தினார்கள்.

காலாவுக்குப் பின் முக்கியமான மூன்று படங்களில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது.

தொடர்ந்து படங்களில் நடித்தாலும், நாடகம் எனக்கு முக்கியம். அதை எப்போதும் விடமாட்டேன் என்கிறார்.

பெரிய நடிகராக வளர வாழ்த்துகள்.

Related Posts