November 14, 2026
விமர்சனம்

பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

கடத்தல் தொழில் செய்யும் தாதாவான ஏ.வெங்கடேஷிடம் வேலை செய்கிறார் லிவிங்ஸ்டன்.ஒருகட்டத்தில் ஏ.வெங்கடேஷின் பலகோடி மதிப்புள்ள பொருளை லிவிங்ஸ்டன் கடத்திவிட்டார் என்று குற்றச்சாட்டு எழுகிறது.லிவிங்ஸ்டனின் மகனான நாயகன் வெற்றி அதை ஏற்க மறுத்து லிவிங்ஸ்டனைத் தேடிப்போகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம்.

பாசமிகு மகன்,அன்பான காதலன்,ஆவேச வீரன் என்கிற பலவித உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வேடமேற்றிருக்கிறார் நாயகன் வெற்றி,எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கிறார்.அதிலும் சுயமரியாதை உணர்வுடன் அவர் செய்யும் செயல்கள் ஈர்க்கின்றன.

நாயகியாக நடித்திருக்கும் பிரியாலயா,அழகாக இருக்கிறார்.அவருடைய புன்னகை அவருக்கு இன்னொரு அடையாளமாக மாறியிருக்கிறது

நேர்மையானவர் அதேநேரம் அப்பாவி ஆனால் அவர் வேலை செய்வது கடத்தல்காரரிடம் என்பது முரண்.அதை தன் நடிப்பால் மறக்கச் செய்கிறார் லிவிங்ஸ்டன்.லிவிங்ஸ்டனின் மனைவியாக நடித்திருக்கும் துளசி அனுபவ நடிப்பில் கலங்க வைக்கிறார்.

தாதாக்களாக நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷ் மற்றும் அரோல் டி சங்கர் ஆகியோர் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

காவ்லதிகாரியாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் மூர்த்தி கவனம் ஈர்க்கிறார்.இன்னொரு காவலதிகாரி அபிராமியும் நன்று.

கராத்தே வெங்கடேசனும் அவருடைய குழுவும் செய்யும் வேலைகள் பதற வைக்கின்றன.இதுபோன்ற வேடங்களுக்கெனவே படைக்கப்பட்டவன் நான் என்று நிரூபித்திருக்கிறார் கராத்தே வெங்கடேசன்.

ஜீவாரவியின் கதாபாத்திரம் கதையில் முக்கியப் பங்காற்றுகிறது.அதற்கேற்ப நடித்திருக்கிறார்.

சந்தோஷ்குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.காட்சிகளில் நேர்த்தி.இரவுக்காட்சிகள் மற்றும் பல காட்சிகளில் அவருடைய ஒளியமைப்பு இரசிக்க வைக்கிறது.

கவாஸ்கர் அவிநாஷின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் படத்துக்குப் பெரும்பலம் சேர்த்திருக்கிறார்.

சண்டைப்பயிற்சி இயக்குநர் மெட்ரோ மகேஷ்,நாயகன் வெற்றிக்கு அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் வெற்றிக்கு நற்பெயர் பெற்றுத்தரும் வண்ணம் அமைந்திருக்கின்றன.நாயகனுக்கு மட்டுமின்றி எதிர்மறை நாயகனுக்கு சுருள்பட்டா சண்டையைக் கொடுத்து அதை சரியாகக் காட்சிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் தீரன் அருண்குமார்.கடத்தல்காரர்களுக்குள் சண்டை,அவர்களிடம் பணம் பறிக்கும் காவலதிகாரி,தாதாக்களிடம் மாட்டிக்கொள்ளும் அப்பாவி ஆகியவை ஒரு பக்கம்,இன்னொரு பக்கம்,நாயகன் நாயகியின் காதல் அதற்கு வரும் எதிர்ப்பு,அதை நாயகன் எதிர்கொள்ளும் நாயகன் ஆகிய வழக்கமான விசயங்கள் மட்டுமே போதாதென முதன்முதலாக தலைமுடி வணிகம் என்கிற புத்தம்புதிய விசயத்தைச் சேர்த்து படத்தை இரசிக்க வைத்திருக்கிறார்.

– குமரன்

Related Posts