November 4, 2026
சினிமா செய்திகள்

கமல் முடிவால் இந்தியன் 3 படத்துக்கு பின்னடைவு – விவரம்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் வெற்றி காரணமாக அப்படத்தின் இரண்டாவது பாகமாக ‘இந்தியன் 2’ தயாரானது.அப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியானது.அப்படத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்தின் முன்னோட்டம் இணைக்கப்பட்டிருந்தது.‘இந்தியன் 3’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘இந்தியன் 2’ படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்தது.அதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படமும் தோல்வி அடைந்ததால் ‘இந்தியன் 3’ படம் சிக்கலைச் சந்தித்தது.

இதனிடையே படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே உண்டான சிக்கலும் இணைந்துகொள்ள, படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன.

நீண்ட நாட்களாக ‘இந்தியன் 3’ படம் குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில்,அக்டோபர் 8 அன்று படம் பற்றிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்,சமரசம் இல்லாத மனநிலையுடன் சேனாதிபதி திரும்பிவிட்டார்.‘இந்தியன் 3:வார் மோட்’ மூலம் அந்த மறுவருகை தொடங்குகிறது எனத் தெரிவித்தது.

இத்துடன் வெளியிட்டுள்ள படத்தில் மூன்று வீரர்கள் புழுதியைக் கிளப்பியபடி வேகமாக பரந்தவெளியில் பயணிக்கிறார்கள். அவர்கள் கிளப்பிய புழுதி, நீளமான மூன்று கோடுகள் போல தெரிகிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 2027 சனவரியில் பொங்கல் திருநாளையொட்டி வெளியாகுமெனச் சொல்லப்பட்டது.

அதற்காக இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டுமென இயக்குநர் ஷங்கர் கேட்டிருக்கிறார்.முதலில் மறுத்த தயாரிப்பு நிறுவனம்,பிறகு சம்மதம் சொல்லியதாம்.

அதன்பின் படப்பிடிப்புக்காக கமல் தேதிகள் ஒதுக்கவேண்டும் என்று கேட்டதாகவும் அவர் தேதிகள் சொல்லாமல் இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

அவர்,இந்தியன் 3 படத்துக்காக தேதிகள் ஒதுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அதற்கு மாறாக,எஸ்.யு.அருண்குமார் இயக்கும் புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார்.

நவம்பர் 7 ஆம் தேதி அவர் பிறந்தநாளையொட்டி அப்படம் குறித்த புதிய புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.அதைத் தொடர்ந்து சிலநாட்கள் கழித்து படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

சென்னையில் சுமார் பதினைந்து நாட்கள் முதல்கட்டப் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதைத் தொடர்ந்து தென்காசியில் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு தொடரும் என்கிறார்கள்.

இதனால்,இந்தியன் 3 படம் கேள்விக்குறியாகியுள்ளது என்று சொல்கிறார்கள்.அப்படம் பொங்கலையொட்டி வெளியாகாது என்றும்,கமல் தேதிகள் ஒதுக்குவதையொட்டியே வெளியீட்டுத்தேதி முடிவாகும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts