துணைதேடிக் கொடுப்பவர்களின் காதல் – லவ் இணையத்தொடர் சுவாரசியம்
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இணையத் தொடர் லவ்.இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிற படமாக உருவாகியிருக்கிறது.
இத்தொடரின் கதை FOUND மற்றும் Find My Bae எனும் இரண்டு டேட்டிங் ஆப்களைச் சுற்றி நகர்கிறது.மற்றவர்களுக்கான சரியான துணையைத் தேடிக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இந்த இரண்டு டேட்டிங் ஆப்களின் நிறுவனர்களான தாரா மற்றும் மேத்யூ, தங்களுக்கான காதலை மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றனர்.போட்டியாளர்களாக இருக்கும் இருவருக்கிடையே உருவாகும் உறவு, காதல் மற்றும் கருத்து மோதல்கள்தான் கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
இத்தொடரை,காதலில் சொதப்புவது எப்படி?,வாயை மூடி பேசவும்,மாரி,மாரி 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய
பாலாஜி மோகன் இயக்கியிருக்கிறார்.நிர்மல் வில்லியம்ஸ் எழுதியுள்ளார்.ஷரதா சுப்ரமணியன் மற்றும் ஸ்வேதா சக்ரவர்த்தி இணை எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.மே6 எண்டர்டெயின்மெண்ட் ஃபேக்டரி (May6 Entertainment Factory) நிறுவனம் தொடரைத் தயாரித்துள்ளது.சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
அக்டோபர் 2 அன்று வெளியாகவிருக்கும் இத்தொடரின் முன்னோட்டம் வெளியீட்டுவிழா செப்டம்பர் 25 அன்று சென்னையில் நடைபெற்றது.இவ்விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு தொடரைப் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில்
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ் பேசியதாவது..,
நெட்ஃப்ளிக்ஸின் முதல் தமிழ் காதல் டிராமா தொடராக லவ் உருவாகியுள்ளது.தென்னிந்தியக் கதைகளில் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்ந்து அதிககவனம் செலுத்தி வருகிறது.குறிப்பாக தமிழ்படைப்புகளில் வித்தியாசமான கதைக்களங்கள்,தனித்துவமான குரல்கள் மற்றும் புதிய அணுகுமுறைகளை வழங்க விரும்புகிறோம்.அந்தவகையில் காதல் கதையை நவீனமான மற்றும் விளையாட்டுத்தனமான பார்வையில் சொல்லும் படைப்பாக அமைந்துள்ளது.
இத்தொடரில் இரண்டு போட்டியாளர்களான டேட்டிங் ஆப் நிறுவனர்கள் இடம்பெறுகின்றனர்.ஒருவர் காதல் என்பது பொருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது என நம்புகிறார்;மற்றொருவர் கெமிஸ்ட்ரிதான் முக்கியம் என்கிறார்.தங்களது கருத்து சரி என்பதை நிரூபிக்க இருவரும் போட்டியில் இறங்கும் நிலையில்,காதல் அவர்களது திட்டங்களையே மாற்றுகிறது.டேட்டிங் ஆப்களை பயன்படுத்தியிருக்கிறோமா இல்லையா என்பதைத் தாண்டி,காதல் குறித்த நம்முடைய எண்ணங்களை சில நேரங்களில் காதலே மாற்றிவிடும் என்பதை இந்தத்தொடர் பேசுகிறது.
இந்தத்தொடரை உருவாக்கிய இயக்குநர் பாலாஜி மோகன்,அன்றாட உறவுகளில் இருக்கும் உண்மையான விசயங்களை தனக்கே உரிய நகைச்சுவையான பார்வையில் சொல்லும் திறமை கொண்டவர்.
ஷோ-ரன்னரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த்,ஆரம்பம் முதலே தெளிவான பார்வையுடன் தொடரின் உலகத்தை உருவாக்கியுள்ளார்.எழுத்தாளர் நிர்மல் வில்லியம்ஸ்,இணை எழுத்தாளர்கள் ஷரதா சுப்ரமணியன்,ஸ்வேதா சக்கரவர்த்தி, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்,எடிட்டர்கள் சாய் முத்துராமன்,சிவா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
மேத்யூ மற்றும் தாரா கதாபாத்திரங்களில் நடித்துள்ள அர்ஜுன்தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரின் கெமிஸ்ட்ரி இந்தத்தொடரின் முக்கிய பலமாக அமைந்துள்ளது.ஒவ்வொரு முறையும் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உலகம் மற்றும் உணர்வை வழங்கவேண்டும் என்பதே நெட்ஃப்ளிக்ஸின் நோக்கம்.அந்தவகையில் லவ் சமகால இளைஞர்களின் காதல் மற்றும் உறவுகளை பிரதிபலிக்கும் படைப்பாக இருக்கும் அனைவருக்கும் நன்றி என்றார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது….
இன்று எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பான நாள்.என்னை நம்பி இந்தக்கதையை வழங்கிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கும், குறிப்பாக மோனிகாவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மும்பையில் லவ் தொடருக்கான வாசிப்பு நிகழ்வு நடைபெற்றபோது அவருடன் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானது.என்னை ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும்,சிறந்த கதை சொல்லியாகவும் உருவாக அவர் அளித்த உத்வேகம் மறக்கமுடியாதது.
நான் அதிகமான விசயங்களால் எளிதில் வியப்படைவதில்லை.ஏனென்றால்,நான் தலைவரின் மகள்.அனைவராலும் போற்றப்படும் ஒருவருடன் வாழும்போது,மற்றவர்களைப் பார்த்து வியக்கும் பழக்கம் குறைந்துவிடும்.ஆனால் மோனிகா என்னை மிகவும் வியக்கவைத்தவர்.அவர் ஒரு சிறந்த தலைவர்,மிகப்பெரிய உத்வேகம் தருபவர்.நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரிப்பாளராகவும் ஷோ-ரன்னராகவும் பணியாற்றும் வாய்ப்பை வழங்கியதற்கு அவருக்கு நன்றி.அதேபோல்,ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் பயணித்த அபிஷேக் மற்றும் சுதான்ஷு ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் தொடரின் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு.‘ஸ்பைடர்மேன்’ படத்தில் வரும் ‘With great power comes great responsibility’ என்ற வசனம் உண்மைதான்.ஒரு கதையை ஆரம்பத்திலிருந்து இறுதிக்கட்டம்வரை கொண்டு செல்வது என்னுடைய பொறுப்பாக மாறியது.அந்தப்பயணத்தில் பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பதோடு,தேவையான நேரத்தில் அவற்றை மாற்றிக்கொள்ளவும் கற்றுக்கொண்டேன்.
இறுதியில்,இந்தத்தொடரை நாங்கள் நினைத்த இடத்திற்கு சரியாகக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கமாக இருந்தது.இந்தப்பயணத்தில் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய விசயம்,முடிவுகளை எடுப்பது கடினமாக இருந்தாலும்,சரியான நேரத்தில் அந்தமுடிவுகளை எடுக்கவேண்டும் என்பதுதான்.லவ் தொடரின் டிரெய்லரையும்,தொடர்ந்து முழுத்தொடரையும் இரசிகர்கள் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.
இயக்குநர் பாலாஜி மோகன் பேசியதாவது..,
காதல் என்பது உலகில் யாராலும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஒரு விசயம்.அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் காதலைப் பற்றி கதைகள் சொல்லி வருகிறேன்.ஆண்கள் பெண்களைப் பற்றியும்,பெண்கள் ஆண்களைப் பற்றியும் தெரிந்துகொள்வது என்பது பல தலைமுறைகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பயணம்.இன்னும் பல ஆண்டுகள் சென்றாலும் காதலை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் அதன் சிறப்பு.
காதலைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்பதற்காக நான் தொடர்ந்து அதைப்பற்றி பேசவில்லை.உண்மையில்,எனக்கும் காதலைப் பற்றி முழுமையாக எதுவும் தெரியாது.மற்ற அனைவரையும் போலவே நானும் தொடர்ந்து அதை புரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.அதுதான் காதலை எப்போதும் சுவாரஸ்யமாகவும்,புதுமையாகவும் வைத்திருக்கிறது.அதனால்தான் காதல் கதைகளை தொடர்ந்து திரையில் சொல்லவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது.
என்னுடைய படைப்புகளைப் பார்த்து இரசிகர்கள் காதல் குறித்து பல விசயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள் என்று கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.அதேநேரத்தில்,திரைப்படங்களில் வரும் காதல்கதைகளைப் பார்த்து நிஜவாழ்க்கையிலும் அதேபோன்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.முடிந்தவரை என்னுடைய கதைகளை நிஜவாழ்க்கைக்கு நெருக்கமாகவும்,அதேநேரத்தில் பார்வையாளர்கள் கனவு காணவும்,தங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும் முடியும் வகையிலும் உருவாக்க முயற்சிக்கிறேன்.
அந்தவகையில்தான் இந்தத்தொடரையும் உருவாக்கியுள்ளோம்.காதலைப் பற்றிய சில கனவுகளையும்,நிஜவாழ்க்கைக்கு நெருக்கமான உணர்வுகளையும் இணைத்து இந்தக்கதையைச் சொல்ல முயற்சித்திருக்கிறோம்.பார்வையாளர்கள் இந்தத்தொடரைப் பார்க்கும்போது தங்களது அனுபவங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கமுடியும் என்று நம்புகிறேன் என்றார்.
தொடர்ந்து,இந்தத் தொடரில் காதலுக்கு கெமிஸ்ட்ரியா அல்லது காம்பாட்டிபிலிட்டியா முக்கியம் என்ற தலைப்பில் இருவரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. ‘
இத்தொடரில் மேத்யூ கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸிடம்,மேத்யூ நிஜவாழ்க்கை கதாபாத்திரமாக இருந்தால் அவருடன் நட்பு வைத்திருப்பீர்களா என்று கேட்கப்பட்டபோது,
அவர் செய்யும் சாகசங்கள்,மலை ஏறுவது போன்ற விசயங்களைப் பற்றி பேசுவதற்காக அவருடன் நட்பு வைத்திருக்கலாம்.அதேநேரத்தில்,அவரது சில விசயங்கள் எனக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.மேத்யூ கதாபாத்திரத்தில் என்னை அதிகம் கவர்ந்தது அவரது உணர்வுகளும்,கதையில் அவர் வெளிப்படுத்தும் பலவீனமான பக்கமும்தான் என்றார்.
தாரா கதாபாத்திரம் குறித்து பேசிய ஐஸ்வர்யா லட்சுமி,
தாராவாக நடித்தது எனக்கு மிகவும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.என்னை 80 சதவீதம் தாராவுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.பலநேரங்களில் நான் நடிக்கவே இல்லை,அந்த கதாபாத்திரமாகவே இருந்தேன்.நான் நடித்த சில கதாபாத்திரங்களைப் போல தாரா என்னிடமிருந்து வெகுதொலைவில் இருப்பவர் அல்ல.அதனால் அவரை நடிப்பது மிகவும் இயல்பாக இருந்தது.மேலும்,காதல் கதையில் நடிக்கவேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருந்தது.அதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.இதற்கு முன்பு அர்ஜுனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருந்தோம்;அது நடக்காமல் போனதால் வருத்தப்பட்டேன். ஆனால் தற்போது லவ் உருவாகியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி.நல்ல விசயங்கள் நடக்க சில நேரங்களில் காலம் தேவைப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.














