வெள்ளையா இருக்கிறார் அதனால் பணக்காரர் – அசோக்செல்வனின் சிக்கல்
அசோக் செல்வன்,ப்ரீத்தி முகுந்தன்,சபுமோன் அப்துசமத்,கதிர் பாலு,மஹா டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’.ஆர்.கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்தின் கதையை ‘போர்த்தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.கோவிந்த் வசந்தா இசையமைக்க,கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய,ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு செய்ய, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.
ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே.கருணாமூர்த்தி,அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் ராசி சிதம்பரம் வெளியிடுகிறார்.
இப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில்,படத்திற்கான முன்வெளியீட்டு விழா சென்னையில் செப்டம்பர் 21 அன்று நடைபெற்றது.
இவ்விழாவில் ஹேப்பி ஹை பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிநயா பேசும்போது…
இந்தப்படம் எடுக்க முடிவு செய்வதற்குக் காரணம் கதைதான்.கதை பிடித்துப்போய்தான் இந்தப்படத்தை எடுக்க முடிவுசெய்தோம்.அந்த அளவுக்குத் தரமாக இருந்தது.பிறகு நல்லதொரு ஒரு புத்திசாலித்தனமான குழுவினர் அமைந்தார்கள்.கனவுப்படம் போலவே இந்தப்படக்குழுவையும் கனவுப்படக்குழு என்று கூறலாம்.
என் தம்பிக்கும் எனக்கும் எப்போதும் ஒரு நல்லிணக்கம் இருக்கும்.நான்தான் அதிகமாக ஏதாவது பேசிக்கொண்டிருப்பேன்.செய்து கொண்டிருப்பேன்.நாங்கள் இருவரும் எப்போதும் பேசிக்கொண்டே இருப்போம்.எந்த விசயத்திலாவது எனக்குச் சந்தேகம் வந்தால் தம்பிதான் ஓகே சொல்வார்.அசோக் நடித்திருக்கும் கதை,பாத்திரங்களை வைத்து அவர் சீரியஸான ஆள் என்று நினைக்கவேண்டாம். நாங்கள் எப்போதும் பேசி சிரித்துக்கொண்டே இருப்போம்.நான் எதையும் இரண்டுமுறை சொன்னால் அவர் கேட்டுக்கொள்வார்.நானும் அப்படித்தான்.அசோக் எனது சகோதரன் மட்டுமல்ல நல்ல நண்பனும் கூட.’அன்பில் அவன்’ படத்தின் கதை அன்புள்ள தம்பதிகள் சிக்கலிலிருந்து எப்படி போராடி மீள்கிறார்கள் என்பதுதான்.நமக்கு இப்படி ஒருவர் கணவராகக் கிடைக்கமாட்டாரா என்று நிறையபேர் ஆசைப்படும்படியாக அந்தப் பாத்திரம் இருக்கும் என்றார்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் சார்பில் அதன் விளம்பர இயக்குநர் கவிதா பாண்டியன் பேசும்போது….
இந்தப்படம் எனது மனதுக்கு நெருக்கமான படம்.இந்தப்படத்தில் நடித்தவர்கள்,படக்குழுவினர்,அவர்கள் செய்கிற முயற்சிகள் எல்லாம் பார்த்து வியப்பாக இருந்தது.நான் எங்கள் கருணாமூர்த்தி சார் சார்பில் வந்தேன்.அசோக் செல்வன் இப்படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்.அவர் என் சகோதரனாக மட்டுமல்ல நண்பராகவும் இருப்பவர்.நாங்கள் இரட்டையர் போல் இருப்போம்.அனைவரும் திரையரங்கு சென்று இந்தப்படத்தைப் பாருங்கள் என்றார்.
நட்புக்காக வந்திருந்த நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசும்போது….
இந்தப்படத்தின் டிரெய்லர்,டீசர் எல்லாமும் பார்த்து மகிழ்ந்தேன்.எல்லாம் பிரமாதமாக இருக்கின்றன.என்னுடைய நண்பன் அசோக் செல்வன்.கனவுக்காதலன் என்று சொல்வதுபோல அவரைக் கனவுநண்பன் என்று சொல்லவேண்டும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் மிகவும் நெருக்கமாகி விட்டோம்.அவரிடம் பேசினாலே நமது பிரச்சினைகளை மறக்கச் செய்துவிடுவார்.அவரது நட்பை நினைத்து,நான் பாக்கியம் செய்ததாக நினைக்கின்றேன்.இந்தப்படம் பிரமாதமாக வந்திருக்கிறது.அதில் ஒரு மேஜிக் இருக்கிறது. இதில் ஒலி அமைப்புகள் கூட நன்றாக இருக்கின்றன என்றார்.
திங்க் மியூசிக் சந்தோஷ் பேசும்போது…
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.அசோக் செல்வனுடன் அவரது முதல்படத்தில் இருந்து பெரும்பாலான படங்களில் நாங்கள் இணைந்திருக்கிறோம்.இந்தப்படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி.கோவிந்த் வசந்தா எங்கள் கலைஞரைப் போன்றவர்.இதில் அவரது ஐந்தாறு பாடல்கள் வந்துள்ளன.அதில் ‘ஆசை வரமே’,’கல்லா நிக்கிறியே’ பிரமாதமான வெற்றி பெற்றுள்ளன.
கோவிந்த் வசந்தா ஓராண்டுக்கு முன்பே சொன்னார்.இந்த ஆல்பம் பெரிய வெற்றி அடையும் என்று,அதுபோலவே வெற்றியடைந்திருக்கிறது.படத்தில் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளார்கள்.அசோக் செல்வன்,பிரீத்தி முகுந்தன் நன்றாக நடனமாடி நடித்துள்ளார்கள்.கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத விதமாக இருக்கும்.திங்க் மியூசிக்கிற்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி என்றார்.
படத்தொகுப்பாளர் ஆர் கே செல்வா பேசும்போது….,
நான் அசோக்செல்வன் மூலம்தான் இந்தப்படத்திற்குள் வந்தேன்.நாங்கள் இருவரும் கல்லூரித் தோழர்கள்.இந்தப் படம் இரண்டு பேர் சம்பந்தப்பட்ட கதை கொண்ட படம்.அசோக்செல்வனைப்போல ப்ரீத்திக்கும் சமமான பாத்திர வாய்ப்பு உள்ளது.கதையை விக்னேஷ் ராஜா பிரமாதமாக எழுதியிருக்கிறார்.கோவிந்த் வசந்தா இசை நன்றாக உள்ளது.முதலில் மூன்று பாடல்கள் என்று இருந்தது இப்போது ஆறாக மாறி உள்ளது.அசோக்செல்வனுடன் இணைந்து குறும்படம் செய்தோம்.இன்று அவர் பெரிய நடிகராக வளர்ந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.பெருமையாக இருக்கிறது.பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளார் என்றார்.
ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன் பேசும்போது….
முதலில் அபி அக்காவுக்கு நன்றி.என்னை நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்காக இயக்குநர் கார்த்திக்கிற்கு நன்றி.என்னைப் பல்வேறு சோதனை முயற்சிகளில் ஈடுபட சுதந்திரம் கொடுத்ததற்காக நன்றி.அசோக் அண்ணாவிடம் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.அவர் கொடுத்த நம்பிக்கைதான் என்னைச் சிறப்பாகப் பணியாற்றி வைத்தது என்றார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசும்போது…..
அசோக் ஒரு நடிகராக நடித்து நிறைய படங்கள் நமக்குக் கொடுத்திருக்கிறார்.நிறைய வெற்றியும் பெற்றுள்ளன.இப்போது பெரிய நடிகராக வளர்ந்திருக்கிறார்.அவரது எல்லா முயற்சிக்கும் எனது வாழ்த்துகள்.சண்டைக்காட்சியில் 70 அடி உயரத்தில் இருந்து குதித்தேன் என்றார். அதற்கு ஆதாரமாக ஆவணப்படுத்தி இருக்கிறீர்களா? என்று நான் கேட்டேன்.அவர் அப்படிக் குதித்ததில் ஆச்சரியம் இல்லை.ஏனென்றால் அவ்வளவு துணிவு மிக்கவர்.அவர் பலருக்கும் தூண்டுதலாக இருப்பவர்.நிஜமான சாதனை நிஜமான சாகசங்கள் செய்பவர்.
பிரீத்தி முகுந்தன் நல்லகதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம் என்று மூன்று மொழிகளில் நடித்து வருகிறார்.அர்ப்பணிப்புள்ள நடிகை.அபி அக்கா திறமையானவர்.திறமைசாலிகளை இணைத்து இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.இந்தப்படத்தை வாழ்த்துபவர்கள் பட்டியலில் நானும் இருப்பதில் மகிழ்ச்சி.கோவிந்த் வசந்தாவின் இசை பெரியவெற்றி பெற்றுள்ளது.அனைவரும் இந்தப்படத்தை ஆதரிக்கவேண்டும்.இன்னும் ஐந்து ஆண்டுகளில் பான் இந்தியா நட்சத்திரமாக அசோக் செல்வன் வருவார் என்று நம்புகிறேன் என்றார்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசும்போது,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இரசித்து செய்த படம் என்று இதைச் சொல்லலாம்.இந்தப்படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.நான் பணியாற்றியதில் 99 சதவீதப் படங்கள் முதல்முறை படம் இயக்கும் இயக்குநர்களுடன்தான்.அவற்றில்நான் பல பாடல்களைத் தந்திருக்கிறேன் என்றாலும் பலரும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞராக வந்திருக்கிறார்கள்.இந்தப்படத்தில் பலரும் சிறந்த தொழில்நுட்பத் திறமைசாலிகள்.நம்பிக்கை அளிக்கும் தரத்தில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது என்றார்.
கதாசிரியரும் போர்த்தொழில் இயக்குநருமான விக்னேஷ் ராஜா பேசும்போது….
ஓர் எழுத்தாளராக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நான் கார்ப்பரேட் பிலிம்ஸ் படங்கள் எடுத்திருக்கிறேன்.அந்தசமயத்தில் நாங்கள் வடஇந்தியாவில் ஜெய்ப்பூர் பக்கம் காரில் சென்று கொண்டிருந்தோம்.அப்போது நல்லமழை பெய்தது.காரின் மேல் உள்ள சாதனங்கள் எல்லாம் நனைந்துவிடப் போகிறது என்று அந்த இன்னோவா காரை ஓரம்கட்டிவிட்டு அருகில் கிடைத்த பிளக்ஸ் பேனரை உடைத்து வைத்துக் கட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்தோம்.அந்த பிளக்ஸ் பேனரில் இருந்தது யார் என்று நாங்கள் பார்க்கவில்லை.அதனால் நாங்கள் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டோம்.அதுதான் இந்தக் கதையின் முதல் விதை.இது ஒரு காதல் கதை.கனவு கண்ட வாழ்க்கை வாழநினைக்கும் தம்பதியினர் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைச் சொல்லும் கதை.
அபிநயா,அசோக் செல்வன் என்று வந்து பிறகு கார்த்திக் வந்தார்.நான் கற்பனை செய்ததைவிடப் படம் பிரமாதமாக வந்திருக்கிறது. அசோக்செல்வன் எனக்கு 15 ஆண்டுகாலப் பழக்கம்.அப்போது நாங்கள்’மிஷன் இம்பாசிபிள்’படம் பார்த்துவிட்டு அதைப்போல பேசிப்பார்ப்போம்.எனது முதல்படத்தில் முதல் கதாநாயகன் அவர்தான்.இப்போது குடும்பம் போல் ஆகி இருக்கிறோம்.நானும் அவரும் தெருத்தெருவாக ஓடி அலைந்திருக்கிறோம்.அவரை நினைத்தால் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்றார்.
வில்லனாக நடித்திருக்கும் கதிர்பாலு பேசும்போது….
இந்தப்படம் எடுக்கும்போதே தெரிந்தது படம் எவ்வளவு நன்றாக வரும் என்று.கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் நன்றாக அமைந்துள்ளன.இதில் ஒரே ஷாட்டில் காட்சி எடுத்து பல படங்கள் வந்துள்ளன.ஆனால் எல்லாம் பயிற்சி அளிக்கப்பட்ட சண்டைக்கலைஞர்களை வைத்து எடுத்திருப்பார்கள்.ஆனால் இதில் அப்படி அல்ல.ஆனாலும் அந்தக்காட்சியை எடுத்திருக்கிறார்கள்.அது பாராட்டும்படி இருக்கும்.என்னைத் தேர்வு செய்ததற்கு அசோக்செல்வன்,அபிநயா,இயக்குநர் மூன்று பேருக்கும் நன்றி என்றார்.
மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் டெல்லிகணேஷின் மகன் மஹா டெல்லி கணேஷ் பேசும்போது….
முதலில் வாய்ப்புக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.படத்தில் சிரமமான நெருக்கடியான காட்சிகளை எடுக்கும்போதுகூட அந்த அசௌகரியத்தை பொருட்படுத்தாமல் முகம் சுளிக்காமல் ப்ரீத்திமுகுந்தன் நடித்தார்,அவருக்கும் நன்றி.சந்தேகம் வரும்போதெல்லாம் இயக்குநர் வந்து எங்களுக்கு தெளிவுபடுத்தினார்.அதற்குப் பக்கபலமாக படக்குழு இருந்தது.பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் சண்டைக்காட்சிகள் பிரமாதமாக வந்திருக்கிறது.அவர் இயக்கத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது என்றார்.
இன்னொரு வில்லன் நடிகர் சபுமோன் பேசும்போது….
நான் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வந்திருக்கிறேன்.இங்கு நான் மலையாளம் பேசக்கூடாது என நினைத்தேன்.கேரளாவில் பிறந்தாலும் சிறுவயதில் எல்லைப்பகுதியில் இருந்தேன்.அதனால் எனக்குக் கொஞ்சம் தமிழ் தெரியும்.எனக்குத் தமிழ் பிடிக்கும்.தமிழ் கலாச்சாரம்,தமிழ் மக்கள்,தமிழ் சினிமா எல்லாமே எனக்குப் பிடிக்கும்.இந்தப்படத்தில் குடும்பம்போல நாங்கள் பணியாற்றி இருக்கிறோம்.முன்பே தமிழ்ப்படத்தில் நடித்திருந்தாலும் இது முக்கியமான மறக்கமுடியாத அனுபவம்.அசோக் செல்வன்,கார்த்திக் என்று எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும்.
நான் சாதுவான ஆள்.ஆனால் கொடூரமானவனாக நடித்திருக்கிறேன்.அதைவிட படப்பிடிப்பின்போது என்னை மோசமாக நடத்தினார்கள். மைனஸ் டிகிரி குளிரில் கூட சாதாரணமாக என்னை நடிக்கவைத்தார்கள்.என்னை ஓட ஓட விரட்டி அடித்து வேலை வாங்கினார்கள்.மூச்சுவிடக்கூட நேரம் கொடுக்கவில்லை.அந்த அளவிற்கு வேலை வாங்கினார்கள்.அப்போது வருத்தமாகத் தெரிந்தது. வலியாக இருந்தது எல்லாம் படத்தைப் பார்க்கும்போது காணாமல் போய்விட்டது.இந்தவிழாவில் இப்போது என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை.என் மனைவியிடம் சாட் ஜிபிடியில் தமிழில் என்ன பேசுவது என்று எழுதிக் கொடுக்கும்படிக் கேட்டேன். ஆனால் எனக்குப் படிக்க முடியவில்லை.எல்லாம் மறந்துவிட்டது.உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும்.
இந்தப் படத்தில் எனக்குத் தயாரிப்பாளர் மட்டும் கிடைக்கவில்லை.நண்பராகவும் கிடைத்தார்.இதயத்துக்கு நெருக்கமாக நண்பர்கள் இதில் எனக்குக் கிடைத்தார்கள்.அனைவருக்கும் நன்றி என்றார்.
சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் பேசும்போது….
இந்தப்படம் எனக்குத் தனிப்பட்ட முறையில் முக்கியமான படம்.இது வழக்கமாகச் சொல்வது போன்றதில்லை.முதலில் விக்னேஷ் ராஜாவுடன் பணியாற்றி இருக்கிறேன்.நண்பர்களாகிவிட்டோம்.தயாரிப்பாளர் அபிநயா இந்தத் திரைக்கதையைக் கொடுத்துப் படித்துப்பாருங்கள்,பிடித்தால் செய்யுங்கள் என்றார்.நான் அப்போது 17 படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.இயக்குநர் பார்வையில் சண்டைக்காட்சிகள் எப்படி இருக்கும் என்று அறிய விரும்பினேன்.அவரது கோணத்தில் காட்சி எப்படி எப்படி இருக்கவேண்டும் என்றேன்.இந்தப்படத்திற்கு வந்த பிறகு எனது போக்கே மாறியது.ஒரு குடும்ப உறுப்பினர்போல் நான் ஆகிவிட்டேன்.அசோக் செல்வன் எனக்குச் சகோதரர் போல் ஆகிவிட்டார்.நான் ஒரு மூத்தஅண்ணன் போல் பெரியண்ணன் போல இந்தப்படத்துடன் இருந்தேன்.எனது 34 ஆண்டுகால அனுபவத்தில் இந்தமாதிரி உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை.இதை எனது சொந்தக் கம்பெனி போல உணர்ந்தேன்.இது எனது சொந்தப்பட நிறுவனம் போல உணரவைத்தது.நான் சொந்த சகோதரன் போல் ஆகிவிட்டேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் எனது தனிப்பட்ட சூழலால் படப்பிடிப்பு இடத்தில் நான் தனியாக உட்கார்ந்து அழுதிருக்கிறேன்.அழுதுவிட்டு உடனே இந்தப்படத்தின் சண்டைக் காட்சிகளை அமைப்பேன்.இந்தப்படம் சார்ந்து நான் மிகவும் அக்கறையாக இருந்தேன்.இயக்குநர், அசோக்செல்வன் அனைவரிடமும் விவாதிப்போம்.அப்படித்தான் எடுத்தோம்.
அது எனக்குப் புது அனுபவமாக இருந்தது.இதில் மூன்று வில்லன்கள் நடித்திருந்தார்கள்.பிரமாதமாக செய்து இருக்கிறார்கள்.இது ஒரு என்டர்டெய்ன்மென்ட் படம் தான்,இருந்தாலும் சீரியஸாக எடுத்தோம்.
இந்தப்படத்தில் பிளேடு,ஆணிகள் நடுவில் இருக்கும் ரோஜா போல ப்ரீத்தி முகுந்தன் இருந்தார்.இந்தப்படத்தில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன.’மண்டாடி’ அப்போதுதான் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.நிறையப்படங்கள் கையில் இருந்தாலும் நான் எனது செயலாளரிடம் சொன்னேன்,45 நாட்கள் வேறு வேலை செய்யவில்லை,யாருக்கும் தேதிகள் கொடுக்கவேண்டாம்,இதை விட்டுவிட்டு இடையில் எல்லாம் போகமுடியாது என்று கூறி இருந்தேன்.
இந்த ஒருபடத்திற்காக பலவற்றையும் அனுசரித்தேன்.ஏனென்றால் இதை ஒரு குடும்பப்படம் போல் நினைத்து நான் ஈடுபாட்டுடன் இருந்தேன்.இந்தப்படத்தின் இசை நன்றாக இருந்தது.ஒளிப்பதிவாளர் கௌதம் நன்றாக வருவார் அசோக் செல்வன்,அபிநயா எப்போதும் நான் உங்கள் பின்னால் இருப்பேன்.இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் எதிர்பாராத விருந்தாக இருக்கும்.
இப்போது ஒரு வீடியோ வைரலாக போய்க்கொண்டிருக்கிறது.20 வயது 25 வயது பெண் எனக்கு இரண்டு இலட்சம் வேண்டும் ஐந்து இலட்சம் வேண்டும் என் கணவர் யாஷ் போல் இருக்கவேண்டும் என்றெல்லாம் கூறுகிற வீடியோ அது.இந்தப்படத்தை பார்த்திருந்தால் இந்தப்படம் முன்பே வந்திருந்தால் அசோக்செல்வன் மாதிரி எனக்கு கணவர் வேண்டும் என்றுதான் கூறுவார்கள் என்றார்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசும்போது….
நான் இப்போது படப்பிடிப்பில் இருந்து வந்தேன்.இந்த விழாவுக்கு வரவேண்டும் என்பதற்காகவே 2 மணி நேரம் முன்னதாக படப்பிடிப்பினைத் தொடங்கி இரண்டு மணி நேரம் முன்பே முடித்துவிட்டு வந்திருக்கிறேன்.எனக்கு இங்கிருந்துதான் எல்லாம் கிடைத்தது. முதல்படம்’ஓ மை கடவுளே’.படம் நன்றாக வர,கதைதான் காரணம்,அதில் விக்னேஷ்ராஜாவுக்கு முக்கியபங்கு உண்டு.நாங்கள் ஒரே குழுவாக இருப்போம்,விவாதிப்போம் இந்தப்படத்தில் சண்டைக்காட்சிகள்தான் அடிப்படை.அதனால் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் பெரிய பலமாக இருக்கிறார்.அடுத்து இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பெரிய பலமாக இருக்கிறார்.இவர்கள் வெற்றி பெறுவது எனக்கு முக்கியம்.ஒரு படத்திற்கு அடிப்படை சரியாக இருந்தால் படம் நன்றாக இருக்கும் என்பதற்கு இந்தப்படமே சிறந்த உதாரணம்.
ப்ரீத்தி முகுந்தன் ‘டிராகன்’ படத்தில் நடிக்கக் கேட்டபோது மறுத்துவிட்டார்.பிறகு அவரிடம் அருமையான ஒரு படம் வருகிறது என்று கூறினேன்.அதுதான் இந்தப்படம்.அசோக்செல்வன் 70 அடி உயரத்தில் இருந்து குதித்து இருப்பதாகக் கூறினார்கள்.அது எனக்கு ஆச்சரியமாகத் தெரியவில்லை.ஏனென்றால் அவர் 150 அடி உயரம் இருந்தால் கூட குதிக்கக் கூடியவர்.அவர் ஒரு ஆக்சன் ஹீரோவாக இருக்கிறார்.
அவரை வைத்து நான் படம் இயக்கும்போது ஒருநாளும் அவர் தாமதமாக வந்ததில்லை.இப்போது நான் இயக்கும்’தர்மன்’படத்தில் தலைவர் ரஜினி சாரும் இந்த வயதிலும் ஒருநாளும் தாமதமாக வந்ததில்லை.ஒவ்வொரு நாளும் உற்சாகமாக இருக்கிறார்.
50 ஆண்டு அனுபவத்திற்குப் பிறகும் அவர் இன்று என்ன செய்யப்போகிறோம் என்று ஆர்வத்தோடு கேட்கிறார்.
முதலில் எனக்கு அவரை வைத்து எப்படி இயக்குவது என்று பயமாகத்தான் இருந்தது.ஆனால் தலைவர் எனக்கு ஏற்றபடி சகஜமாகி சௌகரியமாக மாற்றிக்கொண்டார்.அவரது அர்ப்பணிப்பு ஆச்சரியமாக இருக்கும்.
அசோக் செல்வன் சினிமாவை நேசிக்கிறார்.மதிக்கிறார்.இந்ததருணம் எனக்கு மிகவும் முக்கியமானது என்றார்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பேசும்போது….
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.இது எனது குடும்பநிகழ்ச்சி போல இருக்கிறது.முதலில் ’தெகிடி’ படத்தில் அசோக்செல்வனுடன் பணியாற்றியது நினைவுக்கு வருகிறது.அவர் இன்று வளர்ந்து இருப்பது பெருமையாக இருக்கிறது.மேலும் வளர வாழ்த்துகள் மகிழ்ச்சி என்றார்.
இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் பேசும்போது….
முதலில் என்னுடன் பணியாற்றிய எனது உதவி இயக்குநர்களுக்கும் உதவி ஒளிப்பதியாளர்களுக்கும் நன்றி.கடந்த இரண்டு ஆண்டுகளில் எனது மனைவியுடன் பேசியதை விட என் இணைஇயக்குரிடம்தான் நான் அதிகம் பேசியிருக்கிறேன்.அனைவருக்கும் நன்றி.
நான் படம் பற்றிப்பேச ஏதும் இல்லை என்று நினைக்கிறேன்.ஏனென்றால் படம் நன்றாக இருக்கிறது.நம்பிக்கை இருக்கிறது.தணிக்கைத்துறையினர் தொடங்கித் தயாரிப்பாளர்கள்,விநியோகஸ்தர்கள்,ஓடிடி நிறுவனத்தினர்வரை எல்லாரும் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள்.அடுத்து படத்தை உங்களுக்கு எப்போது காட்டுவது என்று ஆசையாக இருக்கிறோம்.
அசோக் செல்வனை எனக்குப் பத்து வருடங்களாகத் தெரியும்.2017 முறை முதல் பலமுறை படங்கள் தொடங்கி தொடங்கி நின்று தொடரமுடியாமல் போயிருக்கிறது.ஒருபடத்தில் தயாரிப்பாளர் எங்களை வேண்டாம் என்றால் இன்னொரு படத்தில் நாங்கள் இந்தத் தயாரிப்பாளர் வேண்டாம் என்போம்.ஒருநாள் படப்பிடிப்பிலிருந்து 13 நாட்கள் படப்பிடிப்பு நடந்ததுவரை பல்வேறு முயற்சி அனுபவங்கள் உண்டு.
அசோக் செல்வன்,அபிநயா இவர்களை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது.ஹேப்பி ஹை பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் என்பதை நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது.தமிழ்சினிமாவில் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தரத் தயாராக இருக்கிறார்கள். நல்லகதையோடு வாருங்கள்.அசோக்செல்வன் கதையைத் தேர்வு செய்வதில் தெகிடி முதல் அவரது திறமையைக் காணலாம்.
என்னை இயக்குநர் ஆக்கியதற்கு நன்றி.விக்னேஷ் ராஜா இல்லையென்றால் இந்தப்படம் உருவாகியிருக்காது.அப்படிப்பட்ட கதை..அபிநயா நல்லகதைகளைத் தேர்வு செய்கிறார்.ஒருமுறை நான் மதுரைக்கு எங்கள் அக்காவுக்கு உடல்நிலை சரி இல்லை என்று போய்க்கொண்டிருந்தபோது எனக்கு ஒரு போன் வந்தது.அப்படித்தான் தொடங்கியது.அவர் நம்பிக்கை அளித்து இந்த படவாய்ப்பு கொடுத்தார்.இந்தப்படத்தில் முழுக்க முழுக்க இந்த நம்பிக்கைதான் இப்படி மாயமாக நடந்திருக்கிறது.
அசோக்செல்வன் கொடுத்த ஊக்கம் ஆதரவு முக்கியமானது.அவர் எனது படத்தில் ஒரு உதவிஇயக்குநரைப் போல ஈடுபாடு காட்டினார். விளம்பர விசயங்களில் கூட அவரது உதவி பெரிது.படத்தைச் சரியாகச் செய்ததாக மகிழ்ச்சியாக இருக்கிறது.ஹாப்பி ஹை நிறுவனம் இன்னும் மேலே உயர்ந்து வளர்ந்து வரவேண்டும்.அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள்.திறமையானவர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள்.நல்ல ஒரு திறமையான குழுவினரை வைத்திருக்கிறார்கள்.நாம் ஒரு யோசனை சொன்னால் திரும்பி பத்து யோசனைகளாகத் தரும் அளவிற்கு இருக்கிறார்கள்.அப்படி இந்தப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்,எடிட்டர்,சவுண்ட் இன்ஜினியர் எல்லாரும் திறமைசாலிகள்.
இந்தப்படத்திற்கு பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் காட்டிய ஈடுபாடு சாதாரணமானதல்ல.அவர் பார்ப்பதற்குத்தான் குழந்தைபோல இருப்பார் வேலை என்று வந்துவிட்டால் வெள்ளைக்காரன் சீனாக்காரன் எல்லாம் தாண்டிவிடுவார்.இந்தப்படத்தில் கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம் என்று கூறலாம்.அவருக்குத் தனிப்பட்ட முறையில் பல பிரச்சினைகள் இருந்தாலும் 40 நாட்களுக்கும் மேல் தொடர்ந்து இந்தப்படத்திற்காகப் பணியாற்றினார்.
கோவிந்த் வந்தா நல்ல இசையில் நல்ல வரிகளையும் தேர்வு செய்பவர்.தமிழ்ப்பாடகர்களைப் பாடவைத்துள்ளார்.அற்புதமான பாடல்கள் அற்புதமான வரிகள்.அவர் வீட்டுக்குக் கொச்சி சென்றபோது அவர் இசையமைக்கும் விதத்தைப் பார்த்து நான் வியந்துபோனேன்.
நான் திருத்தங்கள் சொல்லிக்கொண்டே வந்தபோது வரியை மாற்றச் சொன்னபோது அப்படிச் செய்தால் இது என் பாட்டாக இருக்காது உங்கள் பாட்டாக இருக்கும் என்றார்.அதெல்லாம் மறக்கமுடியாது.சிலருக்கு உதவியாளர்கள் என்று பெரும் கூட்டமே வைத்திருப்பார்கள்.ஆனால் அவர் ஒன்மேன் ஆர்மி.அவரே வயலின் வாசிப்பார்,வீணை வாசிப்பார்,பெயர் தெரியாத கருவிகளையும் வாசிப்பார்.இந்த தலைமுறையில் இப்படி ஒரு இசையமைப்பாளர் புதிதாக தெரிந்தார்.
அபிநயா செல்வம் துணிச்சல்மிக்க பெண்மணிக்கு உதாரணமாக இருக்கிறார்.உதவிஇயக்குநர்கள் அவரிடம் திரைக்கதையை அனுப்பினால் மூன்றுமணி நேரத்தில் பதில் வரும்.அனைவரும் அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.ப்ரீத்தி முகுந்தன் ஒரு காட்சியில் சுமாராக நடித்திருந்தார்.ஆனாலும் என்ன செய்யவேண்டும் என்ன செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.அவ்வளவு உற்சாகமானவர்.எப்போதும் முயற்சி செய்துகொண்டே இருப்பவர்.அவர் நட்சத்திரம் அல்ல நடிப்புக்கலைஞர்.
ஒளிப்பதிவாளர் கௌதம் எனது செல்லப்பிள்ளை.சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவில் முதலீடு செய்பவர்கள் மிகச்சிலரே.கமல் சார்போல் அசோக்செல்வனும் சினிமாவில் சம்பாதித்து எல்லாம் இதிலேயே போடுவார்.இதுமாதிரி தயாரிப்பாளர் கிடைப்பது அரிது. அபிநயா,அசோக்செல்வன் எல்லாம் பெரிய பணக்காரர்கள் இல்லை.நடுத்தரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.சொன்னால் நம்பமாட்டார்கள் சிரமப்பட்டுத்தான் இந்தப்படத்தை எடுத்தார்கள்.அவர் வெள்ளையாக இருப்பதால் அவரைப் பெரியபணக்காரர் என்று நினைக்கிறார்கள் என்றார்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசும்போது…
இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் முக்கியமானது.மகிழ்ச்சி தரக்கூடியது.முதலில் அபிநயா பற்றிச் சொல்லவேண்டும்.அவர் ஒரு பவர் ஹவுஸ்.அதுவே அழகு,அவர் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணி.
படம் பார்க்கும்போது படத்தில் நடித்திருப்பவர்கள்தான் பார்வையாளர்களுக்குத் தெரிவார்கள்.அதற்குப்பின்னே இருக்கக்கூடிய சக்திமிக்க மனிதர்களைத் தெரியாது.ஆனால் ஒரு படத்திற்கு அவர்கள்தான் பலம்.அதில் முதன்மையானவர் அபிநயா.எனக்கு அவரே பெரிய தூண்டுதலாக இருந்தார்.அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்.அசோக்செல்வனும் அபிநயாவும் என்னைத் தத்து எடுத்துக்கொண்டது போல் தங்கள் குழுவோடு சேர்த்துக் கொண்டார்கள்.வழிகாட்டினார்கள்.என்னை நம்பி உயர்த்தினார்கள்.ஏன் இவர்கள் இவ்வளவு அன்பாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றும்.அசோக் செல்வன்-அற்புதமான அவருடன் இணைந்து நடித்த இந்தப்படம் ஒரு அற்புதமான பயணம்.முழுபடமும் இப்படிப் பயணம் செய்தது மகிழ்ச்சி.அவர் இந்தப்படத்தில் நடிப்பில் ஒரு பெரிய உயரத்துக்கு நகர்ந்துள்ளார்.அது மட்டுமல்லாமல் எனக்கும் நடிப்பதற்கு இடம் கொடுத்தார்.நடிப்பில் அந்த இடத்திற்கு என்னை நகர்த்திக்கொண்டு போனார்.
கல்லூரி நண்பர்கள் இருப்பார்கள்,பேசிக்கொண்டிருப்போம்,சண்டை போட்டுக்கொண்டிருப்போம் முட்டாள்தனமாக ஏதாவது செய்து கொண்டிருப்போம்.எதுபற்றி வேண்டுமானாலும் விவாதிப்போம் சண்டை போடுவோம் அப்படி ஒரு நண்பராக எனக்கு அசோக்செல்வன் இருந்தார்.இயக்குநர் கார்த்திகேயன் என்னை முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்த வைத்துள்ளார்.அதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். உணர்ச்சிமிக்க காட்சிகளில் டப்பிங் பேசும்போது என் குரலே எனக்குக் கேட்கவில்லை.அப்போதெல்லாம் அவர் என்னைத் தவிர்க்காமல் கற்றுக்கொடுத்து பயன்படுத்தினார்.என் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் பணியாற்ற வைத்தது எனக்கு சக்தியும் பலமும் கொடுத்தது. அதற்குப்பிறகு நல்ல எழுத்தாளர்,நல்ல இயக்குநர் படத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசை வந்தது.எனக்குக் கொடுத்த பலமுள்ள பாத்திரத்திற்கும் அதற்கான வாய்ப்பு கொடுத்ததற்கும் நன்றி.
இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதம் என் வயது உள்ளவர்.இந்த குழுவிலே இளைஞர்.அவர்தான்.ஆனால் பரஸ்பரம் எங்களது உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வோம்.
ஒவ்வொரு காட்சிக்கும் பின்னூட்டம் தந்து எனக்கு நண்பரைப்போல அவர் உதவினார் நன்றி.எனக்கு வண்ணங்களில் ஆர்வம் உண்டு.எனக்குப் பிடித்த வண்ணங்களில் என்னை அழகாகக் காண்பித்திருப்பார்.அதற்கு நன்றி.சேது அவர்கள் எனக்கு பக்கபலமாக உதவினார்.அவருக்கு நிச்சயமாக நன்றி சொல்லவேண்டும் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் இயக்கத்தில் நடித்தது எனக்குப் பெருமையாக இருந்தது.என்னைக் கௌரவப்படுத்தியது போல் இருந்தது.
அவர் எனக்குப் பலவகையில் வழிகாட்டினார் அதற்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.கோவிந்த் வசந்தாவின் மிகப்பெரிய இரசிகை நான்.96 படத்திலிருந்து அவரது பாடல்கள் என்றால் எனக்குப் பிடிக்கும்.இதிலும் பாடல்கள் நன்றாக வந்துள்ளன.படத்தில் நடித்திருக்கும் கதிர்,மகா,சபு அவர்கள் நடிப்பைப் பார்த்து நான் வியந்துபோனேன்.எப்படி இவர்களால் இப்படி நடிக்கமுடிகிறது என்று கேட்டேன்.எல்லா உதவி இயக்குநர்களுக்கும் நன்றி.என்னை இதை ஒரு குடும்பம்போல உணரவைத்தார்கள் என்றார்.
படத்தின் நாயகன் அசோக்செல்வன் பேசும்போது….
இது மகிழ்ச்சியான விழா இதில் பேசுவதற்காக எதுவும் தயாரித்துக் கொண்டு வரவில்லை.அந்த அளவுக்கு சென்சார் தொடங்கிப் படவேலைகள் இருந்து கொண்டே இருந்தன.
நான் நடித்து படம் வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன.சினிமாவில் இரண்டரை ஆண்டுகள் என்பது ஐந்து ஆண்டுகள் போன்றது. ஒரு திரைப்படம் என்பது ஏதோ செய்துவிட்டுச் செல்வதல்ல.சினிமா என்றால் நான் நினைப்பேன் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.அப்படிப்பட்ட படத்தில்தான் நான் நடிக்கவேண்டும் என்று இருக்கிறேன்.நல்லகதைகள்,நல்ல கதாபாத்திரம் பார்த்து நடிக்கவேண்டும்.அனைத்தும் இதில் தேர்ந்தெடுத்து செய்தோம்.இந்தப்படத்தில் எனக்குப் பல நண்பர்கள் கிடைத்தார்கள்.பல அனுபவங்களைக் கற்றுக்கொண்டோம்.
நான் இந்தவிழாவுக்குக் கூப்பிட்ட அனைவரும் இங்கே வந்திருக்கிறார்கள்.அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.ஏதோ ஒரு முயற்சி செய்யவேண்டும் மக்களிடம் ஏதாவது கொடுக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.ஒரு படத்தின் போஸ்டரில் என்னுடைய பெயர் போட்டிருந்தால் 100 சதவீதம் எனது உழைப்பு அதில் இருக்கவேண்டும் என்று நினைப்பேன்.அதற்கான மறுகண்டுபிடிப்பு மறுதேடல் செய்யவேண்டும்.
இந்த முக்கியமான படம் கொடுத்ததற்கு முதலில் என் அக்காவிற்கு நன்றி.மூன்று நான்கு வருடங்களாக அவர் என்னுடன் இருக்கிறார்.பல கடினமான விஷயங்களைக் கடந்து இருக்கிறார்.பல சிரமங்களை நான் கடப்பதற்கு அவர்தான் காரணம்.எனக்கு அக்கா பலமும் அண்ணன் பலமுமாக அவர் இருந்திருக்கிறார்.ஒருகட்டத்தில் பலரும் மாறிவிடுவார்கள்.ஆனால் என் அக்கா அப்படியே இருக்கிறார்.அப்பா அம்மாவுக்கு நன்றி.படத்தின் பட்ஜெட் தாண்டியபோது செலவு அதிகமாகும் வீடு அடமானம் வைப்பதற்காக பத்திரத்தைக் கேட்டபோது அவர்கள் தயங்காமல் கொடுத்தார்கள்.மகன் ஏதோ செய்கிறான் என்று அவனது கனவுக்காக ஆதரவு கொடுத்தார்கள்.
இயக்குநரும் நானும் பத்து ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம்.என் படத்தில் அறிமுகமானவர்கள் இன்று பெரியபடங்களை இயக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
விக்னேஷ் ராஜா தனுஷ் படத்திலும் அஸ்வத்,ரஜினி சார் படத்திலும் இருப்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.இரண்டு பேரும் வளர வாழ்த்துகள்.இங்கே வந்திருக்கும் கௌதம் கார்த்திக் என் தம்பி.அதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.எடிட்டர் செல்வாவும் நானும் கல்லூரிக்காலத்திலிருந்து நண்பர்கள்.அவர் தனது சிறந்த பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்.
பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு நன்றி.இந்தப்படத்தைப் பெரிய படமாக்கியது அவர்தான்.பெரியபடங்களில் தொடர்ந்து பணியாற்றுபவர் இதுமாதிரி சின்னபடத்திற்கு பணியாற்றுவாரா என்று சந்தேகமாக இருந்தது.ஆனால் அவர் சிறந்தவகையில் உருவாக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் கௌதம் நல்லகாட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.
ப்ரீத்தி முகுந்தன் எங்கள் படத்தில் நடித்தபோது அவரது ஒரு படம்தான் வந்திருந்தது.அவர் நான் முதலீடு செய்துள்ள பிட்காயின் என்று சொல்வேன்.இப்போது நான் கல்லூரி விழாக்களுக்கு எங்கு சென்றாலும் ப்ரீத்தி முகுந்தனைக் கேட்டதாகச் சொல்லுங்கள் என்று கத்துகிறார்கள்.இந்தப்படத்தின் இரண்டாம்பாகத்திலும் அவர் நடிக்கலாம்.
சபு சேட்டன் எங்களுக்கு படப்பிடிப்பில் பிரட் சப்ளை செய்தார்.அங்கே ஒரு ஸ்டாலே போட்டு எங்களுக்கெல்லாம் கொடுத்தார்.நான் நூறு இருநூறு ஆடிஷன் போயிருப்பேன்.இந்தப்படத்திலும் அப்படி ஆடிஷன் வைத்துதான் தேர்ந்தெடுத்தோம்.அப்படி ஒரு தங்கம் போல மகா,கதிர் போன்றவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.அவர்கள் பெரிய இடத்துக்குச் செல்வார்கள்.
நல்லகதையைத் தேர்ந்தெடுத்து உருவாகியிருக்கும் இந்தப்படம் மறக்கமுடியாத திரையரங்க அனுபவமாக இருக்கும்.இதை உலகில் சிறந்தபடம் என்று நான் சொல்லமாட்டேன்.ஆனால் நல்ல திரையரங்கு அனுபவமாக இருக்கும்.
இந்தப்படத்தில் ஐங்கரன் இண்டர்நேஷனல் இணைந்தபோது கருணாமூர்த்தி சார் ஒன்று கூறினார்.அவர் கதையை மட்டும் கேட்டார். மற்றபடி என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்றார்.அவர் தந்த ஆதரவுக்கு நன்றி.எனது மனைவி கீர்த்திக்கு நன்றி
இவ்வாறு அவர் பேசினார்.











