பால்கி இயக்கும் நேரடித் தமிழ்ப்படம் – விவரம்
அமிதாப்பச்சன் நடித்த சீனிகம்,பா,ஷமிதாப் உள்ளிட்ட சில இந்திப்படங்களை இயக்கி பெரும்புகழ் பெற்றவர் இயக்குநர் பால்கி.ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் தயாரிப்பாளரும் இவரே.இந்திப்பட இயக்குநர் என்று பெயர் பெற்றிருக்கும் இவர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்தவர்.இசையமைப்பாளர் இளையராஜாவின் தீவிர இரசிகர்.இளையராஜா இசைதான் எனக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருந்தது என்றும் தன்னுடைய திரைத்துறை நுழைவுக்கும் அதில் நீடிப்பதற்கும் அவருடைய இசைதான் ஆர்வத்தை தூண்டியது என பால்கி கூறியிருக்கிறார்.
தனுஷ் நடிப்பில் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட இளையராஜாவின் வாழ்க்கைக்கதை படத்தை பால்கிதான் இயக்குவதாக இருந்தது.தனுஷ் தலையிட்டு பால்கியை மாற்றிவிட்டு அருண்மாதேஸ்வரனை ஒப்பந்தம் செய்தார் என்று சொல்லப்பட்டது.அந்தப்படத்துக்கு பால்கியே இயக்குநராக இருந்திருந்தால் இந்நேரம் படம் தயாராகியிருக்கும் என்று சொல்வோரும் உடு.
பால்கி, இப்போது நேரடித் தமிழ்ப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.மே மாதமே இதுகுறித்து இளையராஜா வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.இளையராஜா இசையமைக்க வந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தபோது,பால்கி அவருடன் இருந்தார்.அப்போது பேட்டியளித்த இளையராஜா,இப்போது எந்தெந்தப் படங்களின் வேலைகள் நடக்கின்றன? என்கிற கேள்விக்கு, பால்கி இயக்கும் தமிழ்ப்படத்திற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று சொன்னார்.
அதுகுறித்து அதற்குமேல் வேறெதுவும் சொல்லப்படவில்லை.இப்போது அந்தப்படம் குறித்த மேலும் சில விவரங்கள் தெரியவந்திருக்கின்றன.
பால்கி இயக்கும் நேரடித் தமிழ்ப்படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.புகழ்பெற்ற இந்திநடிகை வித்யாபாலன் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.
இப்படத்துக்கு பால்கியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவிருக்கிறார்.
இந்தப்படத்தை பால்கியே,தன் சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தப்படத்தைத் தயாரிக்கிறார்.
இது நேரடியாகத் தமிழில் எடுக்கப்படுகிற படமென்றாலும்,இதன் கதை இந்தியாவெங்கும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென்றும் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய படமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
அதற்குத் தகுந்தாற்போலவே மாதவன்,வித்யாபாலன் ஆகிய எல்லா இந்திய மொழிப் படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றிருப்பவர்களை நாயகன்,நாயகியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.பால்கி,ஒரு படத்தை எழுதுவதற்காக நீண்டகாலம் எடுத்துக்கொள்வார்.படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றால் மிக விரைவாக மொத்தப் படப்பிடிப்பையும் நிறைவு செய்துவிடுவார் என்பார்கள்.இந்தப்படத்தின் படப்பிடிப்பையும் மிக வேகமாக நடத்தி முடிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.













