சினிமா செய்திகள்

மணிரத்னம் படத்தில் வங்காள ஒளிப்பதிவாளர் – ஏன்?

மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.இந்தப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 23 ஆம் தேதி தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியது.அங்கு ஜூலை இறுதிவரை படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

எவ்வித அறிவிப்பும் இல்லாமல் படப்பிடிப்பை மணிரத்னம் தொடங்கிவிட்டார் என்றாலும்,கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடந்தபோது அந்தக்காட்சிகளைப் படம்பிடித்து ஊடகங்கள் வெளியிட்டுவிட்டன.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே இந்தப்படத்தைத் தயாரிக்கிறது என இப்போது சொல்லப்படுகிறது.அதேநேரம், இப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பை லைகா நிறுவனம் ஏற்கவிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.அதுதொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.அவருடைய இசையில் படத்துக்குத் தேவையான பாடல்பதிவு வேலைகள் நடந்து, பாடல்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன என்றும் சொல்கிறார்கள்.அதுமட்டுமில்லை,இன்றைக்கு பல மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் பாடல் உரிமை விற்பனையும் நடந்து முடிந்துவிட்டதாம்.பாடல் உரிமை 15 கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.அதேநேரம் பதினைந்து இல்லை எட்டுகோடி என்றும் ஒரு தகவல் இருக்கிறது.இரண்டில் எது சரி? என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.

படப்பிடிப்பு தொடங்குமுன்பே இப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பின்னரான இணைய ஒளிபரப்பு உரிமை மற்றும் வெளிநாட்டு விநியோக உரிமை ஆகியனவற்றின் விற்பனை முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இப்படத்தின் இணைய வெளியீட்டு உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது என்றும் அதற்கான விலை சுமார் இருபது கோடி என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல்,இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை சஞ்சய் வாத்வா பெற்றிருக்கிறார் என்றும் அதற்கான விலை சுமார் எட்டுகோடி என்றும் சொல்லப்படுகிறது.அவரே வெளியிடுவாரா? அல்லது வேறு யாருக்கேனும் கூடுதல் விலைக்கு விற்பாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

இப்போதெல்லாம் பெரிய கதாநாயகர்கள் என்று சொல்லப்படுகிற பலரின் படங்கள் வெளியான பின்புகூட விற்பனை ஆகாமல் இருக்கின்றன.இப்படியிருக்கும்போது விஜய்சேதுபதி மணிரத்னம் இணையும் படத்தின் வியாபாரம் படம் தொடங்கும் முன்பே நடந்திருக்கிறது.

விஜய்சேதுபதி,சாய்பல்லவி,ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் பெயரைத் தவிர வேறெதுவும் இதுவரை வெளியாகவில்லை.இந்நிலையில் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வங்காளத்தில் புகழ்பெற்ற அவிக் முகோபாத்யாயை ஒப்பந்தம் செய்திருக்கிறார் மணிரத்னம்.

வழக்கமாக மணிரத்னம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம்,ரவிகேசந்திரன்,ரவிவர்மன் உள்ளிட்டோர் இருக்கும்போது வங்காள ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்தது ஏன்?

தமிழ் ஒளிப்பதிவாளர்கள் சம்பளம் எல்லாம் கோடிகளில் இருக்கிறது.அதனால்,அவர்களை ஒப்பந்தம் செய்யாமல் இலட்சங்களில் சம்பளம் வாங்கும் வங்காள ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால்,படக்குழு தரப்பில்,இவர்,மூன்று வங்காளப் படங்கள்,ஒரு இந்திப்படம் ஆகியனவற்றுக்காக நான்கு தேசியவிருதுகள் வாங்கிய சிறந்த ஒளிப்பதிவாளர்,அதோடு,இப்படத்தின் கதையில் கொல்கத்தாவுக்கு முக்கியப்பங்கு இருக்கிறது.அதனால்தான் அங்கு படப்பிடிப்பைத் தொடங்கினார்.கொல்கத்தா கதைக்களத்தில் மட்டுமின்றி காட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கவேண்டும் என்பதற்காகவே கொல்கத்தாவைச் சேர்ந்தவரையே ஒளிப்பதிவாளராக்கிவிட்டார்.அவருடைய பங்களிப்பு காரணமாக கொல்கத்தாவின் பல புதிய பகுதிகளை நாம் காணலாம் என்று சொல்கிறார்கள்.

இரண்டில் எது சரியென்றாலும் இரண்டுமே சரியென்றாலும் ஒரேகல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்துவிட்டார் மணிரத்னம் என்றே சொல்லலாம்.

Related Posts