லட்சுமிகாந்தன் கொலை வழக்கு – விமர்சனம்
மரணதண்டனை கோரும் குற்றவாளி,கொடுக்க மறுக்கும் நீதிபதி என்று மாறுபட்ட முறையில் தொடங்குகிறது படம்.அந்த குற்றவாளி யார்? அவர் செய்த குற்றம் என்ன? எதற்காக அதைச் செய்தார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம்.
நாயகனாக நடித்திருக்கும் வெற்றி,சின்னச் சின்ன திருட்டுகள் செய்கிறவராகவும் பின்பு பெரிய காரியம் செய்யும் திடமானவராகவும் வேடமேற்றிருக்கிறார்.அந்த வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்.அவருடைய இயல்புக்கு மாறாக நிறைய வசனங்கள் பேசவேண்டிய வேடம்.அதிலும் அவர் குறைவைக்கவில்லை.
நாயகியாக பிரிகிடாசாகா நடித்திருக்கிறார்.கிராமத்துப் பெண் வேடத்துக்குத் தக்க தன்னை மாற்றிக் கொள்ள மெனக்கெட்டிருக்கிறார்.அதற்கேற்ற இயல்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரங்கராஜ் பாண்டேவுக்குப் பொருத்தமான வேடம்.வாதம் என்கிற பெயரில் பிடிவாதம் செய்கிற பாத்திரம்.இலகுவாகச் செய்திருக்கிறார்.
படத்தின் தலைப்பில் இருக்கும் லட்சுமிகாந்தனாக நடித்திருக்கும் கவிதாபாரதிக்கு,அவருடைய நிஜத்துக்கு நேரெதிரான வேடம்.ஆனாலும் நிறைவாகச் செய்து மனதில் பதிகிறார்.
மாறன்,லிஸி ஆண்டனி,சுப்பிரமணிய சிவா,கன்யா பாரதி,அருவி மதன் ஆகிய அனைவரும் நன்று.
பழைய பன்னீர்செல்வம் அதாவது எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.அவருடைய அனுபவ உழைப்பு மூலம் காட்சிகளுக்கு மெருகேற்றியிருக்கிறார்.
தர்புகாசிவா இசையில் பாரதி,பாரதிதாசன் வரிகளைக் கேட்டு இரசிக்கமுடிகிறது.பின்னணி இசையில் திரைக்கதை வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு வலுச்சேர்க்க முனைந்திருக்கிறார்.
காட்சிகளை சுவாரசியமான காட்சிகளாக மாற்றியாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பூபதி வேதகிரி.அது படத்துக்குப் பலமாக மாறியிருக்கிறது.
கவிதாபாரதி மற்றும் தயாள் பத்மநாபன் ஆகிய இருவரும் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளனர்.சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நறுக்குத் தெறித்தாற் போன்ற வசனங்கள் படத்துக்குக் கூடுதல் பலம்.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் தயாள் பத்மநாபன்.ஒரு மரண தண்டனை வழக்கை மையமாகக் கொண்டு மரணதண்டனைக்கு எதிரான கருத்தை விதைக்க முயன்றிருக்கிறார்.சிறைக்குள் இருந்து நாயகன் புத்தகம் எழுதுகிறார் என்பதும் அதில் சொல்லப்படும் கருத்துகளும் கவனிக்கத்தக்கன.நீதிபதிக்கும் குற்றவாளிக்கும் இடையே இருக்கும் முன்கதை திரைக்கதையில் முக்கியப் பங்காற்றுகிறது.
புகழ்பெற்ற ஒரு வழக்கின் பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு அதன்மூலம் முக்கிய கருத்துகளைப் பரப்புரையின்றி சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன்.
– இளைய முத்து











