ஹபீபி – திரைப்பட விமர்சனம்
தமிழ்த்திரையுலகில் மட்டுமின்றி இந்தியத் திரையுலகிலேயும் இஸ்லாமியர்கள் என்றால் வன்முறையாளர்கள்,பயங்கரவாதிகள்,மாந்தநேயமற்றவர்கள் என்பது போன்ற சித்தரிப்புகள்தாம் 99.99 விழுக்காடு இருக்கின்றன.அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவர்கள் சகமனிதர்கள் என்று சொல்லும் படங்கள் வரும்.
அந்த வரிசையில் வந்திருக்கும் படம் ஹபீபி.ஹபீபி என்பது அரபுச்சொல்.இதன் தமிழ்ப்பொருள் அன்பு,காதல் எனப்படும்.
1980 களில் திருநெல்வேலியில் ஒரு நெசவுக் குடும்பத்துக்குள் நடக்கிற கதை.விசைத்தறிகள் வருகையால் கைத்தறிகள் நலிந்த காலம்.அதனால் பொருளீட்ட வெளிநாடுகளுக்குப் பயணிக்கிற குடும்பத்தின் இளையதலைமுறை இளைஞருக்கு ஒரு காதல்.அதனால் சிக்கல்.அது என்ன? அதன் முடிவென்ன? என்பதுதான் கதை.
முகமது யூசுப் என்கிற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் கஸ்தூரிராஜா.அவருடைய தோற்றம் அந்த வேடத்துக்கு மிகப்பொருத்தமாக அமைந்திருக்கிறது.நடிப்பினாலும் கலங்க வைத்துவிடுகிறார்.
நாயகன் ஈஷா,இளமைத்துடிப்புடன் இருக்கிறார்.குடும்பச் சூழலில் காதல் எனும்போது ஏற்படும் நிலைகளை நடிப்பில் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
மாளவிகா மனோஜ்,தனஸ்ரீ ஆகிய நாயகிகள், இந்தக் கதைக்குள் தங்களைப் பொருத்திக் கொள்வதோடு இளைஞர்களை ஈர்க்கும் காந்தசக்தியாக இருக்கிறார்கள்.
அனுஸ்ரேயா ராஜன்,ஜெயஸ்ரீ பினுராஜ்,ரேகா குமணன்,மலர் கைசின்,ஸ்மத் பானு,அருள்குமார்,சன்சாகுல்,சிறுவன் தீனன் மற்றும் சிறுமி தீக்ஷாஸ்ரீ ஆகிய அனைவரும் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களுக்கேற்ப மிக இயல்பாக நடித்து வியப்பேற்படுத்தியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி,திரையில் வரைந்திருக்கும் சித்திரங்கள் காலத்துக்கும் நிலைக்கக்கூடியவை.ஒவ்வொரு காட்சியையும் அவர் வடிவமைத்திருக்கும் விதத்தால் படத்துக்கு ஒரு காவியத்தன்மை வந்திருக்கிறது.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் இஸ்லாமிய வாழ்வியலுக்கு வளம் சேர்த்திருக்கின்றன.
படத்தொகுப்பாளர் வி.எஸ்.மதி,காட்சிகளை இரசித்து கைவைக்காமல் விட்டுவிட்டிருக்கிறார்.அது சில இடங்களில் பலவீனமாக இருக்கிறது.
வி.எஸ்.முகமதுஅமீனின் எழுத்தின் மூலம்,இதுவரை கூடவே இருந்தாலும் கவனிக்கத்தவறிய பல நுட்பமான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது.
இயக்குநர் மீராகதிரவன்,இது ஒரு திரைப்படம் என்று நினைக்காமல்,ஒட்டுமொத்த மக்களுக்கும் இஸ்லாமிய வாழ்வியலை எடுத்துச் சொல்லிவிடவேண்டும் என்கிற தவிப்பில் இயங்கியிருக்கிறார்.பல காட்சிகள் கலங்க வைக்கின்றன,சில காட்சிகள் கண்ணீர் விட வைக்கின்றன.ஒரு பொதுவான காதல்கதை போலத் தொடங்கி இஸ்லாமிய வாழ்வியலை அப்படியே வெளிப்படுத்தி வியக்கவைக்கும் திரைக்கதை அமைத்திருப்பது அவர் ஒரு தேர்ந்த திரைக்கலைஞர் என்பதன் வெளிப்பாடு.
கிராமங்களை விரும்புவோரும்,காதலைக் காதலிப்போரும்,நல்ல படைப்புகளை நாடுவோரும் தவறாமல் பார்க்க வேண்டிய படைப்பு.
– கதிரோன்.











