கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த படத்துக்கு தாதாசாகேப் பால்கே விருது – விவரம்
இந்தியத் திரையுலகின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கே பெயரில் நடைபெற்று வரும் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க சுயாதீன திரைப்பட விழாக்களில் ஒன்றான 2026 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்ற படம் என்ன விலை.
மலையாள இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். நிமிஷா சஜயன் நாயகியாக நடித்துள்ளார்.
இவர்களோடு, பூர்ணிமா பாக்யராஜ், ஒய் ஜீ மகேந்திரன், ராஜேந்திரன், விஜயலட்சுமி, ஷாஷா, பிரவீணா, கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ்.கவி, மோகன் ராம், நிழல்கள் ரவி, சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், டி.எஸ்.ஆர்.ஸ்ரீனிவாசன், சுவாமிநாதன், கொட்டாச்சி, தீபா சங்கர், சித்தா தர்சன்,கவி நக்கலைட்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு 2024 டிசம்பரிலேயே முடிவடைந்தது.அதற்குப் பிறகான பணிகள் நிறைவடைந்து படம் முழுமையாகத் தயாரான பிறகு, சமீபகாலமாகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.
அத்தகைய விழாக்களில் ஒன்றான தாதாசாகேப் பால்கே சர்வதேசத் திரைப்பட விழா இப்படத்தை அங்கீகரித்துள்ளது.
இன்னும் வெளியாகாத இந்தப் படம், இந்தியாவின் முதல் திரைப்படத்தை இயக்கிய ராஜா ஹரிச்சந்திராவின் பெயரால் நடைபெறும் விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றுள்ளது. இது இயக்குநர் சஜீவ் பஜூரின் விருதுக் களஞ்சியத்தில் மற்றுமொரு கோப்பையைச் சேர்க்கிறது. முன்னதாக, சஜீவ் ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ படத்திற்காக தேசிய திரைப்பட விருது மற்றும் கேரள மாநில திரைப்பட விருதுகளில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்றவர்.
இந்தப்படம், சமூக-அரசியல் திரில்லர், பார்வையாளர்கள் மீது உணர்ச்சி ரீதியான பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான கதையைக் கொண்டுள்ளது.படக்குழுவினர் இந்த விருதை மிகவும் உயர்வாகக் கருதினாலும், திரையரங்கில் பார்க்கும் அனுபவத்திற்காகவே இந்தப்படத்தை உருவாக்கியுள்ளதாகச் சொல்கின்றனர்.
இப்படம், ஆழமான மற்றும் எதார்த்தமான கதைக்களத்தைக் கொண்ட படம், தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் இதற்கு விருது கிடைத்திருப்பது ஒரு தனித்துவமான சாதனை என்று பெருமிதத்துடன் கூறும் இயக்குநர் சஜீவ், அதேசமயம்,இந்தப்படம் திரையரங்குகளிலும் பெரிய வரவேற்பையும் வசூலையும் என்று உறுதியாகச் சொல்கிறார்.










