விமர்சனம்

மனிதன் தெய்வமாகலாம் – திரைப்பட விமர்சனம்

ஒரு மலைகிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் செல்வராகவன்,குஷி ரவி.சிறிய உணவகம் நடத்திக் கொண்டு மிக மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.திடீரென ஒருநாள் மனைவி குஷி ரவி தற்கொலை செய்துகொள்கிறார்.அதனால் நிலைகுலைந்து போகும் செல்வராகவன்,அதன்பின் என்ன செய்கிறார்? அதன் விளைவென்ன? என்பனவற்றைச் சொல்லியிருக்கும் படம் மனிதன் தெய்வமாகலாம்.

அன்பான,அமைதியான குடும்பத்தலைவன்,அடிபட்ட புலி, சமுதாயப் பொறுப்பு மிக்க மனிதன் ஆகிய பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட வேடமேற்று அதற்கேற்ப நடிக்க முனைந்திருக்கிறார் செல்வராகவன்.பல இடங்களில் பொருத்தமாக இருக்கிறது.சில இடங்களில் தடுமாறியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் குஷிரவி அழகான புதுவரவு. ஏற்றுக்கொண்ட வேடத்துக்கேற்ப நடித்து கவர்வதோடு கலங்கவும் வைத்துவிடுகிறார்.

செல்வராகவனின் அக்காவாக நடித்திருக்கிறார் கெளசல்யா.ஒரு இடைவெளிக்குப் பின் வந்தாலும் நடிப்பில் அது தெரியவில்லை.கெளசல்யாவின் கணவராக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சதீஷ் பாத்திரமும் நடிப்பும் நன்று.

கந்துவட்டிக்காரராக நடித்திருக்கும் மைம்கோபி, அமைச்சராக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் வழக்கம்போல நடித்திருக்கிறார்கள்.

இந்தக்காலத்திலும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத மலை கிராமங்களை, அங்கு வசிக்கும் மக்களை, அவர்கள் மனநிலைகளை, தன்னுடைய ஒளிப்பதிவில் அப்படியே காட்டி அதிர வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மா.

ஏ.கே.பிரியனின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசை, திரைக்கதையில் இருக்கும் மக்களின் வலியை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் தீபக்.எஸ், இயக்குநரின் எண்ணத்தை அப்படியே மக்களிடம் கொண்டுவென்றுவிட வேண்டுமென எண்ணித் தொகுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் டென்னிஸ் மஞ்சுநாத்.ஒரு கணவன்-மனைவி உறவின் பின்னணியில் உள்ள அழகான காதல்கதையையும்,திருமணத்திற்குப் பிறகும் காதல் இருக்கிறது என்பதையும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத மக்கள்,அவர்களுடைய வாழ்வியல்,அந்த மக்களையும் சுரண்டிப் பிழைக்கும் கூட்டம்,அதற்கான அதிரடி முடிவு ஆகியனவற்றைச் சமரசமின்றி கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார்.

– இளையவன்

Related Posts