பாக்யராஜ் செய்வது சரியல்ல கொந்தளிக்கும் இயக்குநர்கள் – புதிய சர்ச்சை
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI – Film Employees Federation of South India) என்பது தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றும் சுமார் 23-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய, 25,000-க்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட கூட்டமைப்பு.
இதன் ஒரு அங்கமாக இருக்கும்,தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (South Indian Film Writers Association), திரைப்படக் கதை, திரைக்கதை மற்றும் வசனகர்த்தாக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு முக்கிய அமைப்பு. இந்தச் சங்கம் கதைகளைப் பதிவு செய்தல், எழுத்துப்பூர்வமான சர்ச்சைகளைத் தீர்த்தல் மற்றும் எழுத்தாளர்களின் நலன் காத்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
மொத்தம் 570 உறுப்பினர்கள் கொண்ட இந்தச் சங்கத்துக்கு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும்.அதன்படி,11.09.2022 அன்று தேர்தல் நடந்தது.
அதில் பதிவான 450 வாக்குகளில், 192 வாக்குகள் பெற்று இயக்குநர் பாக்யராஜ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.
அப்போது பொறுப்பேற்ற பாக்யராஜ் தலைமையிலான குழு இப்போதுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது.
எப்படி?
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் என்றால், 2024 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும்.ஆனால்,அப்போது ஃபெப்சி அமைப்பில், தங்கள் உறுப்பாகச் செயல்படும் எல்லாச் சங்கங்களுக்கும் 2026 ஆம் ஆண்டுமுதல், மூன்றாண்டுகளுக்கொரு முறை தேர்தல் நடத்துவது என்கிற விதியைக் கொண்டுவந்தது.
அதனால், இந்தச் சங்கத்துக்கு 2024 இறுதியில் தேர்தல் நடத்தினால், ஓராண்டும் சில மாதங்களும்தான் இருக்கவேண்டும் என்கிற நிலை.அதனால் அதுவரை பாக்யராஜ் தலைமையிலான அணியே தொடரட்டும் என்று முடிவெடுக்கப்பட்டு அதன்படி அந்தக்குழுவே நிர்வாகம் செய்துவருகிறது.
2026 ஆம் ஆண்டு தொடங்கியதும் இவ்வாண்டு தேர்தல் நடத்தவேண்டும் என்பதற்காகப் பொதுக்குழுக் கூட்டம் குறித்த அறிவிப்பு வரும் என்று அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் காத்திருந்தார்கள்.
ஆனால்,பொதுக்குழு அறிவிப்பு வராமல் இவ்வாண்டு ஜூன் மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது என்கிற தகவலை மட்டும் உறுப்பினர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.
அதைப்பார்த்ததும் உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.ஏனெனில் பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கியமான சில விசயங்களைப் பேசவேண்டும் என்று பெரும்பாலானோர் காத்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் பொதுக்குழு இல்லாமல் நேரடியாகத் தேர்தல் அறிவிக்கிறார்கள் என்பது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி என்ன முக்கிய விசயங்கள் என்றால்?
பாக்யராஜ் தலைமையிலான நிர்வாகம் பொறுப்பேற்றதிலிருந்து வெளிப்படையான நிர்வாகமே நடக்கவில்லை.எடுத்துக்காட்டாக ஒரு செய்தி….
இவ்வாண்டு பொங்கலன்று வெளியான படம் பராசக்தி.அப்படத்தின் கதை, தனது செம்மொழி என்ற கதையைத் திருடி தயாரிக்கப்பட்டுள்ளது.எனவே,அந்தப்படத்தை வெளியிடத் தடை விதிக்கவேண்டும் என இணை இயக்குநர் கே.வி.ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்தவழக்கில்,பராசக்தி படத்தின் கதையையும் செம்மொழி கதையையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்தும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அறிக்கையை இதுவரை தாக்கல் செய்யவில்லை என்பதால் அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யவேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீதிபதி உத்தரவிட்டு, பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 28-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார் என்று செய்தி எல்லா நாளேடுகளிலும் வந்தது.
அதன்பின் வழக்குத் தொடுத்த வருண் ராஜேந்திரன் வெளியிட்ட வேதனை அறிக்கையில்,
எழுத்தாளர்களைக் காக்க உருவான அமைப்புகள், சோதனை நேரத்தில் அந்த மரியாதையைக் கைவிடக்கூடாது.மாண்புமிகு நீதிபதி
திரு.S.K.ராமமூர்த்தி தலைமையிலான மாண்புமிகு நீதிமன்றம்,முன்பே வழங்கிய உத்தரவுகளின் தொடர்ச்சியாக,தென் இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) தனது விசாரணை அறிக்கை / கருத்துக் கடிதத்தை மூடப்பட்ட உறையில் (sealed cover) 28.01.2026 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
SWAN விசாரணை அறிக்கை / கருத்துக் கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை.இதைவிட மேலும் அதிர்ச்சியளிப்பது என்னவென்றால், விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அனுப்பப்பட்ட நீதிமன்ற நோட்டீஸைப் பெறுவதற்கே SWAN மறுத்தது. எழுத்தாளர்களைக் காக்க வேண்டிய ஒரு அமைப்பு நீதிமன்ற நோட்டீஸையே பெறமறுக்கும்போது, அது சாதாரண தாமதமாக இல்லை; அது பொறுப்பு மற்றும் கணக்குப்படுத்தலின் கடுமையான சிதைவாக மாறுகிறது.
என்று வெளிப்படையாகச் சொல்லியிருந்தார்.
அது உறுப்பினர்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியிருந்தது/
அதோடு, ஃபெப்சி அமைப்பு உறுப்பு சங்க உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் உரிமைகள் உள்ளிட்ட சில விசயங்கள் தொடர்பாக புதிய ஒப்பந்தங்களை உருவாக்கி அதில் அனைத்து அமைப்பு நிர்வாகிகளும் கையெழுத்து போடவேண்டும் என்று கேட்டிருந்தார்கள்.அதில் கையெழுத்துப் போடாமல் ஃபெப்சி அமைப்புடனும் மோதல் போக்கைக் கடைபிடிக்கிறார்.
இவ்விரு நிகழ்வுகள் மற்றும் இன்னும் சில முக்கியநிகழ்வுகள் குறித்து பொதுக்குழுவில் பேச அனைவரும் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் பொதுக்குழுவைக் கூட்டாமல் நேரடியாகத் தேர்தல் என்று சொல்லியிருப்பது பாக்யராஜ் நிர்வாகம் கேள்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சி என்றும் தங்கள் மீது குற்றச்சாட்டுகள் வருமெனத் தெரிந்தே இப்படிச் செய்கிறார்கள் என்பதால் தேர்தல் அறிவிப்பு, அச்சங்க உறுப்பினர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.











