செய்திக் குறிப்புகள்

தமிழீழ மக்களின் மரணபயத்தைச் சொல்லும் படம் – விவரம்

சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் மார்ச் 20 அன்று நடைபெற்றது.

‘நீளிரா’ திரைப்படத்தில் நவீன்சந்திரா,சனந்த்,ரூபா கொடுவாயூர்,கபிலா வேணு,’கயல்’வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே,நவயுகா,சிது குமரேசன்,ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை மார்ட்டின் கவனிக்க படத்தொகுப்புப் பணிகளை ராதா ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர்ச் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார்,உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களைப் பின்னணியாக கொண்டு சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமும்,வெளிநாடுகளில் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் வழங்குகின்றன.

ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை விளம்பரப்படுத்த சென்னையில் நடைபெற்ற நிகழ்வில்…

இயக்குநர் சோமீதரன் பேசுகையில்….

சின்னவயதில் போர் நடந்துகொண்டிருக்கும் போது தமிழகத்திலிருந்து திரைப்படங்கள் வெளியாகும்.அந்தப்படங்களைப் பார்க்கும்போது எனக்குள் ஒரு ஆசை இருந்தது.எனக்கு மட்டுமல்ல,என்னைப் போன்ற ஏராளமான ஈழத்துக்கலைஞர்களுக்கும் இருந்தது.என்றைக்காவது ஒருநாள் இந்த பெரியதிரையில் எங்களுடைய மொழியைக் கேட்கமுடியாதா…!என்னுடைய ஊரின்..என்னுடைய வீட்டின்..ஏதேனும் ஒரு காட்சியை திரையில் பார்த்துவிட இயலாதா..!என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது.அந்த ஏக்கம் இன்று சாத்தியப்பட்டிருக்கிறது.இத்தனை ஆண்டுகால தமிழ்சினிமாவில் ஈழத்திலிருந்து பாலுமகேந்திரா தொடங்கி ஏராளமான கலைஞர்கள் பலர் முயற்சி செய்திருக்கிறார்கள்.அந்தமுயற்சியின் ஒரு தொடர்ச்சியாக இது சாத்தியப்பட்டிருக்கிறது.அதனை சாத்தியப்படுத்துவதற்கான முதல்புள்ளியை வைத்த இயக்குநர்- நண்பர் கார்த்திக்சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்களுக்கு எங்களுடைய வீட்டில் சமைக்கும் புட்டு உணவு பண்டத்தை பெரியதிரையில் பார்த்திடமாட்டோமா என்ற எண்ணம் இருந்தது,அது இன்று சாத்தியமாகி இருக்கிறது.
இந்தகதையை நான் சொல்லும்போது ஈழத்தில் நடைபெற்ற போரைப்பற்றிச் செவிவழியாக கேட்டு ஓரளவிற்குத் தெரிந்து வைத்திருந்த எங்களுடைய தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்கள் இந்தக்கதையைப் படமாக உருவாக்குவதற்கான முடிவை மேற்கொண்ட தருணம் முக்கியமானது.இதுபோன்ற ஒரு கதையைப் படமாக்குவதற்காக முயற்சியை மேற்கொண்டிருந்தபோது,இந்தகதைக்குள் ஒரு வாழ்வியல் இருக்கிறது,அந்த வாழ்க்கை தமிழ்சினிமாவிற்கு புதிதாக இருக்கும்,தமிழ்சினிமா புதிதான வாழ்க்கையை கொண்டாடி இருக்கிறது,இந்தபடத்தையும் அந்தவகையில் கொண்டாடும் என்று நம்பிக்கையுடன் தயாரித்த கார்த்திகேயன் சந்தானத்திற்கு என் நன்றி.‌
நான் எழுதிய திரைக்கதைக்குள் கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறது என்று ஊக்கப்படுத்திய கல்யாண் அவர்களுக்கும் நன்றி.இந்தப்படம் ஆர்ட்ஃபிலிம் ஆகவோ அல்லது சீரியஸ்ஃபிலிம் ஆகவோ இல்லாமல் நாம் காலம்காலமாக பார்த்த போர்ப்படங்களில் இருந்து அந்த வாழ்க்கையைச் சொல்லும் படமாக இது இருக்கிறது.
இந்தப்படத்தை இணைந்து தயாரித்த ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணா அவர்களுக்கும்,தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும்,வெளிநாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கும் என் நன்றி.
நாங்கள் நிறைய போர்பப்டங்களை பார்த்திருக்கிறோம். ஹாலிவுட்டிலிருந்து பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.அந்தப்படங்களை நாம் கொண்டாடியிருக்கிறோம்.அந்தப்படங்களில் இருதரப்பினரும் துப்பாக்கியால் சுடுவதையும் சுடப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.இன்றைக்கு உலகம் போர்ச்சூழலில் இருக்கிறது.தினம் நாம் போர் பற்றிய செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்,கேட்டுக் கொண்டிருக்கிறோம்.இந்தச் செய்திகளில்.குண்டுகளின் எண்ணிக்கையை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.‌ஆனால் இதற்குப் பின்னால்,குண்டு விழுகின்ற இடத்தில்,அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி,ஈரானாக இருந்தாலும் சரி…அங்கும்.மக்கள் இருப்பார்கள்.அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கும்.குண்டு விழுகின்ற அந்தநேரத்தில் அவர்கள் ஒரு பிறந்தநாளைக் கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்,அவர்கள் ஒரு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கலாம்,அங்கு ஒரு மரணம் நிகழ்ந்திருக்கலாம்,ஏதோ ஒரு விசயம் நிகழ்ந்திருக்கலாம்.அங்கு குண்டு விழுந்தபிறகு என்னவாகும்?அந்த சூழ்நிலையை எப்படி மாற்றும்? அவர்கள் எப்படிப் பதட்டமடைவார்கள்? அந்தப் பதட்டமான வாழ்க்கை இருக்கிறதல்லவா,அப்படிப்பட்டதொரு வாழ்க்கையைச் சொல்லும் படம்தான் ‘நீளிரா’.
நாம் போர்ப்படங்களைப் பார்க்கும்போது எப்போதும் இருதரப்பினரின் தாக்குதலைப் பற்றிய படங்களாகத்தான் பார்த்திருக்கிறோம்.இந்தப்பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி…அந்தப்பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி…குண்டுகள் முழங்கும்,துப்பாக்கிகள் சுடும் காட்சிகளைத்தான் பார்த்திருக்கிறோம்.இதற்கு நடுவில் மக்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது.போர் என்றால் இருதரப்பிலிருந்து சுடும் துப்பாக்கிகள் என்று மட்டும்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் நிஜம் அதுவல்ல.
போருடன் கூடிய வாழ்க்கைதான் எங்கள் வாழ்க்கை. பிறந்ததிலிருந்து என்னுடைய முழுஇளமைக்கால வாழ்க்கையும் போருக்குள்தான் இருந்தது.அந்த போருக்குள்தான் நாங்கள் படித்தோம்.அந்த போருக்குள்தான் எங்களுடைய சிறுவயது விளையாட்டுகள் இருந்தது.அந்தப் போர்தான் எங்களது விளையாட்டாகவும் இருந்தது.அந்தப் போருக்குள்தான் எங்களின் காதலும் இருந்தது,போருக்குள்தான் திருமணமும் இருந்தது.அந்த போர் வாழ்க்கையைதான் நாங்கள் வாழ்ந்தோம்.வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு போர் என்றால் இருதரப்பினரும் கம்பீரமாக நிற்பதைப் போன்று நினைப்பார்கள்.ஆனால் அதுவல்ல.போர் எங்களுடைய வாழ்க்கையில் ஒருபகுதியாக மாறிவிட்டது.
பகுதியாக மாறிவிட்ட போரில் எங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? அந்த வாழ்க்கையில் நிகழ்வுகள் எப்படி இருந்தது? அதைத்தான் இந்தப்படத்தில் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.
ஒருவிசயம் நடந்துவிடுமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துவதுதான் சினிமா.உலகத்தில் அப்படியான பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம்.’லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ என்றொரு திரைப்படம்.அந்தப்படம் போரைப் பற்றிய வலியைத்தான் சொல்லியது.போரின் வலியை இரத்தமாகவோ அழுகையாகவோ மட்டும் சொல்லாமல் அதற்குள் இருக்கும் வாழ்க்கையைச் சொல்லியது.அந்தத் திரைப்படம்.அப்படியானதொரு வாழ்க்கையைத்தான் நாங்கள் இந்தபடத்தில் சொல்லி இருக்கிறோம்.
இந்தசூழலில் தமிழர்கள் இந்தப்படத்தை இரசிப்பார்கள் என நினைக்கிறேன்.ஏனெனில் ஒரு பரபரப்பான திரில்லரை இரசிக்கக்கூடியவர்களாகவும்,அந்தப்படங்களை வெற்றிபெற வைப்பவர்களாகவும் தமிழ்சினிமா இரசிகர்கள் இருக்கிறார்கள்.‌
என்னைப் பொருத்தவரை மரணத்தைவிட மரணபயம் கொடுமையானது.இந்தப்படம் அந்த மரணபயத்தில் இருந்த வாழ்க்கையைச் சொல்கிறது.இப்படி ஏராளமான இரவுகளில் ஒரு நீண்டஇரவைப் பற்றிய படம்தான் நீளிரா.அந்தஇரவும்,அந்தஇரவின் படபடப்பும்,அந்த மக்களின் பதற்றமும் உங்களுக்கு நெருக்கமாக இருக்கும்.
நாங்கள் தமிழகத்தில் ஈழத்தைப்பற்றி நிறைய கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.எனக்கு கோயம்புத்தூர்,மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களில் உள்ள வீடுகள் எப்படி இருக்கும் என்று தெரியும்.இதில் மேல்தட்டு,நடுத்தர வர்க்கம்,எளிய மக்கள் ஆகியோரின் வீடுகள் எப்படி இருக்கும் என்றும் எனக்குத் தெரியும்.ஆனால் என்னுடைய ஈழமண்ணில் எங்களுடைய வீடுகள் எப்படி இருக்கும் என்பதை தமிழ்இரசிகர்களுக்குக் காட்சிப்படுத்தவேண்டும் என விரும்பினேன்.இதுவரைக்கும் அத்தகைய காட்சி முழுமையாக காண்பிக்கப்படவில்லை.இந்தப்படம் அந்தவேலையைச் செய்யும்.ஈழத்தில் வீடுகள் எப்படி இருக்கின்றன? அந்த வீட்டின் குசினி ( கிச்சன்) எப்படி இருக்கிறது? அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை இந்தப்படம் உங்களுக்குச் சொல்லும்.
லயோலா கல்லூரியில் நான் விசுவல்கம்யூனிகேஷன் படிக்கும்போது ஈழத்தைப்பற்றி நான் எவ்வளவு கதைகளை சொன்னாலும் மற்றவர்களால் அதனை விசுவலைஸ் செய்து பார்க்க இயலாது.ஏனெனில் அவர்கள் அதனை விசுவலாக பார்த்ததில்லை.இந்தப்படம் அந்தவாழ்க்கையை உங்களுக்கு விசுவலாக எந்தவித சமரசமும் இல்லாமல் காட்சிப்படுத்தும்.
எங்கள் ஊரில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே நாங்கள் படமெடுத்திருக்கிறோம்.இங்கிருந்து படங்கள் வராத காலகட்டத்தில் குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும் தருணத்திலும் கூட நாங்கள் ஒரு விஹெச்எஸ் கேமராவில் படமெடுத்துக் கொண்டிருந்தோம்.படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று இறந்துவிடுவார்கள்.இருந்தாலும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்.‌அப்படி எடுக்கப்பட்ட படங்களை நாங்கள் 90 களில் பார்த்திருக்கிறோம்.அங்கிருந்து தொடங்கியதுதான் இதுபோன்றதொரு கதையை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம்.
போர் தொடங்கும்போது வாழ்க்கை படப்படப்பாக இருக்கும்,ஆனால் அதற்குள் இருக்கும் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் ஒரு பதற்றத்தையும் அதற்குள் நடைபெறும் ஒரு திருமணத்தைப் பற்றியும் இந்தப்படம் பேசுகிறது.
இலங்கையில் போர் நடந்தபோது பெங்களூருவில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்து இங்கு நடைபெற்ற மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டு அந்த மக்களுக்காக நிற்கவேண்டும் என்று வந்த ஒரு ஐடி கம்பெனி இளைஞன்,பின்னாளில் இயக்குநராகி,தயாரிப்பாளராகி,எனக்கு நண்பராகவும் மாறி இந்தப்படத்தை சாத்தியப்படுத்திய கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி.
பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியபோது அவர் ஒருமுறை என்னிடம் ‘உன்னுடைய முதல்படத்திலாவது நம்முடைய கதையைப் படமாக உருவாக்கிடு.என்னால் இறுதிவரை எடுக்கமுடியாமல் போய்விட்டது எனச் சொன்னார்.இன்று அதனை சாத்தியப்படுத்துவதற்கு உதவிய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு நன்றி.இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை ரூபா கொடுவாயூர் பேசுகையில்….

எமகாதகி படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் இரண்டாவது தமிழ்ப்படம் இது.முதல்படத்தைப் போல் இந்தப்படமும் எனக்கு ஸ்பெஷலானது.எனக்கு மட்டுமல்ல தமிழ்மக்கள் அனைவருக்கும் இந்தப்படம் ஸ்பெஷலானது.நமக்கு போரைப்பற்றி என்ன தெரியும் என்றால் போர் என்றால் ஆயுதம் இருக்கும்,துப்பாக்கி இருக்கும்,போராட்டம் இருக்கும் என தெரியும்.ஆனால் அதற்குள் மக்கள் இருப்பார்கள்.அவர்கள் ஒரு எமோஷனலான போரை எதிர்கொள்வார்கள்.அதைப்பற்றிப் பேச நினைத்த திரைப்படம்தான் நீளிரா.போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு நீண்டஇரவில் நடைபெறும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை.இரசிகர்களுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
இந்தவாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும்,இயக்குநருக்கும் நன்றி.நான் கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு இரசிகை.அவர் ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் அர்த்தமுள்ள படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.நீளிரா போன்ற படங்கள் மீது நம்பிக்கை வைத்து தயாரித்து வழங்கி இருக்கிறார்.அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப்படத்திற்குப் பிறகு இயக்குநர் சோமிதரனுக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைக்கும்.இந்தப்படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து எதுவும் தற்போது பகிர்ந்து கொள்ள இயலாது.ஆனால் இந்தப்படத்தில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.‌ இந்தப்படத்தில் நடித்திருப்பது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்.‌
நீளிரா திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.இந்தப்படம் பார்த்துவிட்டு வீட்டிற்குச் செல்லும் போதும் உங்கள் நினைவுகளில் இந்த நீளிரா இருக்கும்.ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்கத்திற்கு சென்று படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் என்றார்.

இசையமைப்பாளர் கே பேசுகையில்….

இந்தப்படத்தில் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி.அர்த்தமுள்ள திரைப்படத்தில் நானும் பங்களித்திருப்பதில் சந்தோஷம். இயக்குநருக்கும்,தயாரிப்பாளருக்கும் வாழ்த்துகள்.நீளிரா ஒரு அர்த்தமுள்ள படைப்பாக இருக்கும்.மறக்க முடியாத படமாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன்.உங்களுடைய ஆதரவிற்கு நன்றி என்றார்.

நடிகர் சனந்த் பேசுகையில்….

நான் சென்னையில் பிறந்து சென்னையிலேயே வளர்ந்த பையன்.எனக்கு இந்தப்படத்தில் இருந்த வாழ்வியல் முற்றிலும் புதிதாக இருந்தது.இயக்குநர் சோமிதரன் நிறைய டாக்குமென்ட்ரி திரைப்படங்களையும் வேறு சில வீடியோக்களையும் காண்பித்தார்.அங்குள்ள மக்களின் வாழ்வியலைப் பற்றியும் சொன்னார்.அதனைக் கேட்டுத்தான் இப்படத்தில் நடித்தேன்.நான் இதற்குமுன் போர் சம்பந்தமாக குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறேன்.இந்தப்படத்தில் பணியாற்றும்போதுதான் நிறைய மக்களைச் சந்திக்க முடிந்தது.நிறைய மக்களிடம் பேசினேன்.அவர்களுடைய கதைகளைக் கேட்டேன்.அவர்களிடம் ஈழத்தைப்பற்றி நிறைய கதைகள் உள்ளன.அதை கேட்கும்போது இன்னும் நிறைய ஈழம் சம்பந்தமான திரைப்படங்கள் வெளியாகவேண்டும் என நினைக்கிறேன்.விரைவில் நிறையபடங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.
இந்தப்படத்தை வெளியிடுபவர்களுக்கும்,வழங்குபவர்களுக்கும் என்னுடன் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் நவீன் சந்திரா பேசுகையில்….

மகிழ்ச்சியாக இருக்கிறது.நான் பல வகையான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் இந்தப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.எனக்கு மட்டுமல்ல இந்தக்குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்தப்படம் ஸ்பெஷலானது.இந்தப்படத்தின் தயாரிப்புப் பணிகளும் எனக்குப் பிடித்திருந்தது.மேடைக் கலைஞர்கள்,குறும்படங்களில் நடித்தவர்கள்,புதுமுகங்கள்,இலண்டன்,கனடா ஆகிய இடங்களில் இருந்து நடிக்கவந்தவர்கள்…இவர்களுடன் இணைந்து பணியாற்றியது புதியஅனுபவமாக இருந்தது.
இந்தப்படத்தில் நான் ஒரு கேப்டனாக நடித்திருக்கிறேன்.இதைத்தவிர என்னுடைய கதாபாத்திரத்தைப் பற்றி விரிவாக எதையும் சொல்ல இயலாது.ஆனால் படம் பார்த்தால் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.இந்தப்படத்திற்காக அஸ்ஸாம்,மும்பை,மகாராஷ்டிரா,தமிழ்நாடு என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நடிகர்களை கவனமுடன் இயக்குநர் தேர்வு செய்தார்.
படப்பிடிப்பின்போது நடிகர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை..சந்தோஷமாக இருந்தது.நான் இதுவரை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தில் ஐந்துபடங்களில் நடித்துவிட்டேன்.அது என்னுடைய சொந்தப்படத் தயாரிப்பு நிறுவனம் போன்றது.இங்கு என்ன சிறப்பு என்றால்,இங்கு சமத்துவம் இருக்கும்.அனைவரும் சினிமா மீது பற்றுக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.அதிலும் அர்த்தமுள்ள படைப்பை உருவாக்கவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
நான் நடித்த காட்சிகளை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நிச்சயமாகப் பார்ப்பார்,அப்போது நான் நன்றாக நடித்திருக்கிறேனா? இல்லையா? என்ற பயம் எனக்குள் இருந்துகொண்டே இருக்கும்.நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
திரைப்படங்கள்,இணையத் தொடர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் தொடர்பு கொண்டு இப்படத்தின் கதையைப் பற்றி விவரித்தார்.இயக்குநர் சோமிதரனிடம் கதையைக் கேட்கிறேன் என்று சொன்னேன்.கதையைக் கேட்டபிறகுதான் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானத்தின் கதைத்தேர்வு குறித்து வியந்தேன்.அவர் சரியான கதையை தேர்வு செய்திருக்கிறார்.இதற்காகவே நான் பெருமிதம் கொள்கிறேன்.
இந்தப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில்….

நாங்கள் தயாரிக்கும் 18 ஆவது திரைப்படம் இது.ஆறாவது திரைப்படம் தயாரிக்கும்போது நண்பர் ஒருவர் நீங்கள் நன்றாகப் பேசுகிறீர்கள். ஆனால் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள்.அதை தமிழில் பேசலாமே என ஆலோசனை சொன்னார்.அதன்பிறகு என்னை மாற்றிக்கொண்டு தமிழில் பேசிவருகிறேன்.ஆனால் ஆங்கிலத்தில் பேசவேண்டியதிருக்கிறது.ஏனெனில் அப்போதுதான் பிசினஸ் செய்யமுடியும்.
நீளிரா மிகவும் ஸ்பெஷலான படம்.பெருமைக்குரிய படம்.இந்தப்படத்தை தயாரித்ததற்காக நாங்கள் தைரியமாக காலரை தூக்கிவிட்டுக் கொள்வோம்.
2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து இங்கு திரும்பி வந்தேன்.அங்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன்.வாழ்க்கையில் எப்போதும் சந்தோசமாகத்தான் இருக்கிறேன்.கார்த்திக் சுப்புராஜ் ‘பீட்சா’ படத்தை இயக்கி ஒரேநாளில் புகழ்பெற்றார்.அதன்பிறகுதான் நண்பர்களுடன் சேர்ந்து ஒருநாள் இயக்குநர் சோமிதரனைச் சந்தித்தேன்.அவரை இதுவரை நான் இயக்குநராகப் பார்த்ததில்லை.பார்க்கவும் முடியாது. அவரும் என்னைத் தயாரிப்பாளராகப் பார்த்ததில்லை.பார்க்கவும் முடியாது.ஏனென்றால் நாங்கள் நல்லநண்பர்கள்.‌
அவருடைய படத்தை நாங்கள் தயாரிப்போம் என்று நினைக்கவில்லை.அவரும் எங்களிடத்தில் கதையைச் சொல்வார் என்று நினைக்கவில்லை.இது ஒரு மிகப்பெரிய நீண்டபயணம்.சோமிதரன் அருமையானதொரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
முதலில் இதுபோன்ற ஒருகதையைத் தேர்வு செய்து படமாக உருவாக்கவேண்டும் என்று கார்த்திக் சொன்னார்.அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்.
சனந்த் சொன்னதுபோல் நானும் மதுரையில் பிறந்து மதுரையிலேயே வளர்ந்தவன்.இந்தப்படத்தில் சொல்லப்படுவதைப்போல் நாங்கள் எதையும் கேட்கவில்லை.அறியவும் இல்லை.தெரியாது.நான் ஒரு இந்திய பிரஜையாக எப்படி வாழ்வேன் என்றால் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும்வரை எனக்கு விருப்பமானவர்களுடன் நேரத்தைச் செலவழிப்பேன்.இதுதான் என் உலகம்.உலகத்தில் வேறு என்ன நடந்தாலும் அதைப்பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்வதில் விருப்பமில்லாத நபர்.ஏனெனில் நான் ஒரு யூனிக்கான இதயம் கொண்ட நபர்.காலையில் எழுந்தவுடன் செய்திகள் பார்க்கும்போது நல்லவிசயமாக இருந்தால் பரவாயில்லை,ஆனால் நெகட்டிவ் ஆகவே இருந்தால் அது என் வாழ்க்கையைப் பாதிக்கிறது.அந்தநாளை என்னால் இயல்பாக எதிர்கொள்ள முடியவில்லை.நான் என்னை எந்த அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள இயலுமோ அந்தஅளவில்தான் பேசவேண்டும்.பார்க்கவேண்டும் என நானே வரையறை வகுத்துக் கொண்டேன்.
இந்த மனநிலையில் இருந்தபோது ஒருநாள் கார்த்திக் என்னிடம் ஒருநிமிட குறும்படம் ஒன்றைக் காட்டினார்.அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம்.அது எனக்குப் பிடித்திருந்தது.ஆனால் ஏன்? எதற்கு? என்று புரியவில்லை.அப்புறம் கார்த்திக் அதைப்பற்றி எனக்கு விளக்கம் அளித்தார்.அதன்பிறகு எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத்தொடங்கியது.
சினிமா என்று வந்தபிறகு நம்மால் சில விசயங்களைச் சொல்லமுடியும் என்றபோது..அதனைச் சொல்லவேண்டும் என நினைத்தோம். அப்படித்தான் நாங்கள் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை உருவாக்கினோம்.இயக்குநர் சோமீதரன் இப்படி ஒரு கதையைச் சொன்னபோது அதைப் படமாகத் தயாரிக்கப் பெருமிதத்துடன் முன்வந்தோம்.
படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.அவர்கள் அனைவருக்கும் இந்தத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌
இயக்குநர் சோமீ நிறையப் பேசுவார்,ஒளிப்பதிவாளர் பிரதீபன் பேசவே மாட்டார்.இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற முதல்நாள் நாங்கள் நாகர்கோவிலுக்குச் சென்றிருந்தோம்.நான்-கார்த்திக் சுப்புராஜ்-கல்யாண்-பவன்-ராஜ்- என பலரும் சென்றிருந்தோம்.முதல்காட்சி மிகவும் எளிமையான காட்சி.சினிமாவைப் பற்றித் தெரியாதவர்கள்கூட அது மிக எளிமையான காட்சி என்று சொல்வார்கள்.ஆனால் அந்தக்காட்சி முதல்டேக் ஓகே ஆகவில்லை.இயக்குநர் ஒன்மோர் என்றார்.பிறகு மீண்டும் ஒன்மோர் என்று சொன்னார்.கிட்டத்தட்ட ஐந்துமுறைக்கு மேல் ஒன்மோர் சொல்லிக்கொண்டிருந்தார்.நாங்கள் அங்கு இருப்பதால் இயக்குநர் சோமீ பதட்டமடைகிறாரோ..! என நினைத்து அங்கிருந்து கிளம்பினோம்.பிறகு ஐந்துநிமிடம் கழித்து மீண்டும் அங்கு வந்தபோது அதேகாட்சி மீண்டும் அதே ஒன்மோர் என்று சென்று கொண்டிருந்தது.அப்போது கார்த்திக்கிடம் படத்தின் டைட்டில் நீளிராவைப் போல் இது நீண்டுகொண்டே போகும்போல் தெரிகிறது என்று சொன்னேன்.
ஆனால் இந்தப்படம் மிகவும் குறுகிய காலத்தில் அற்புதமாக உருவாக்கப்பட்ட படம்.தொழில்நுட்ப ரீதியாகவும் தரமான படமாக உருவாகி இருக்கிறது.குறிப்பாக இசை.இசையமைப்பாளர் கே இந்தப்படத்தில் மிகச்சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார்.இசைதான் ஒரு காட்சியை உயிர்ப்புள்ளதாக உணர்வுபூர்வமானதாக மாற்றுகிறது.நடிகர்களின் நடிப்புத்திறனை மேம்படுத்துவது இசைதான். இசையமைப்பாளர் கே உடன் தொடர்ந்து பணியாற்றவேண்டும் என விரும்புகிறேன்.
நவீன் சந்திரா – சன் ஆப் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ.அவர் எங்களுடைய குடும்பத்தில் ஒருவர்.அவருடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இந்தப்படத்தைக் காண்பித்தவுடன் பேராதரவு வழங்கிய ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணாவிற்கும்,தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சார்ந்த அர்ச்சனா கல்பாத்தி,ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும் சிந்தன் அவர்களுக்கும், அயல்நாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் விதுர்ஸ் அவர்களுக்கும் நன்றி
இன்றைய ஜென் ஸீ இரசிகர்களைத் திரையரங்கத்திற்கு அழைத்து வருவதற்கு அரும்பாடு படவேண்டி இருக்கிறது.அவர்களுக்கும் இந்தப்படம் மிகவும் முக்கியமான படம்.உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இது மிகவும் முக்கியமான படம்.நாங்களும் இதுபோன்ற நல்ல திரைப்படங்களை உருவாக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.அது இரசிகர்களின் கைகளில் இருக்கிறது.அனைவரும் திரையரங்கத்திற்கு வருகைதந்து இந்தப்படத்தைக் கண்டு இரசிக்கவேண்டும் என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில்…..

முதலில் திரைப்படங்களை இயக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது.அதன்பிறகு திரைப்படங்களைத் தயாரிக்கவேண்டும் என்பதற்காக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தைத் தொடங்கினோம்.எப்படிப்பட்ட படங்களை தயாரிக்கவேண்டும் என்று நான் விரும்பினேனோ அப்படிப்பட்ட படங்களைத் தயாரிக்க முன்வந்தோம்.பொதுவாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் எல்லாப் படத்திற்கும் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் என்றுதான் இருக்கும்.படத்தின் தயாரிப்பாளராக கார்த்திகேயன் சந்தானம் இருப்பார்.ஆனால் முதன்முறையாக நானாக இப்படத்தின் தயாரிப்பாளர் பெயரில் என் பெயரும் இடம்பெற வேண்டும் என்று விரும்பிக்கேட்டேன்.அப்படி ஆசைப்பட்ட திரைப்படம் இது.‌
இந்தப்படத்திற்கு முன் இயக்குநர் சோமீ மிகப்பெரிய டாக்குமெண்ட்ரி இயக்குநர்.இலங்கையில் போர் நடக்கும்போது போரைப் பற்றிய ஆவணப்படத்தை இயக்கியவர்.‌அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட.அவருடைய கதையை அவரே எழுதி இருக்கிறார்.அவரிடம் இன்னும் நிறைய ஏராளமான கதைகள் உள்ளன.
எனக்கு ஈழம் சம்பந்தமாக ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு உண்டு.கார்த்திகேயன் சொன்னதுபோல் ‘காட்சிப் பிழை’ தான் என்னுடைய முதல் குறும்படம்.அதன் மூலமாகத்தான் நான் நாளைய இயக்குநரில் தேர்வானேன்.
பொதுவாக சின்னவயதாக இருக்கும்போது ஒரு ஏரோபிளேன் சென்றால்…அதைப் பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும்.மதுரையில் ஒரு ரிக்ஷாவில் சென்று கொண்டிருக்கும் பசங்களுக்கு ஏரோபிளேன் எப்படி மகிழ்ச்சியை அளிக்குமோ…ஒருவீட்டின் மொட்டைமாடியில் ஒரு பிள்ளைக்கு அம்மா சோறு ஊட்டிக்கொண்டிருக்கும்போது அவர்களுடைய பார்வையில் ஏரோபிளேனை காண்பித்து எப்படி சோறு ஊட்டுவார்களோ.. இப்படி பலருக்கு ஏரோபிளேன் பறப்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என்பதைக் காட்சிப்படுத்தினேன். அதேபோன்று ஏரோபிளேன் பறக்கும்போது ஈழத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும் என்பதுதான் அந்த குறும்படத்தில் நான் சொல்லி இருப்பேன்.
போரைப் பற்றிய நிறைய கிளாசிக்கல் ஃபிலிம் இருக்கிறது.1917 என்ற படத்தைப் போல் போருக்குள் ஆக்சன் படங்களும் இருக்கும். லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்று இயக்குநர் குறிப்பிட்டார்.
‘தி பியானிஸ்ட் ‘படத்தில் இரண்டாம் உலகப்போர் குறித்து நமக்கு எதுவும் தெரியாது.அந்தக் காலகட்ட வாழ்க்கை பற்றி நமக்கு எதுவும் தெரியாது.ஒரு பியானோ பிளேயரை பற்றிய படம்.அதில் ஒருகாட்சி வரும்.அவரால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லமுடியாது.நீண்டநாட்கள் கழித்து அவர் ஒரு பியானோவை பார்ப்பார்.அவர் ஒரு இசைக்கலைஞர்.பியானோவை பார்த்தவுடன் அதை வாசிக்கவேண்டும் என்று துடிப்பார்.அதை வாசிக்கவேண்டும் என்று நினைப்பார்.அப்படி வாசித்தால் அந்த ஒலி வெளியில் கேட்டு குண்டு வீசக்கூடும்.இந்தநிலையில் அந்த இசைக்கலைஞர் பியானோ இசைக்கருவியைத் தொடாமல் அதை அற்புதமாக வாசிப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும்.‌அது எனக்கு ஒரு அற்புதமான உணர்வை வழங்கியது.போரைப் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியது.அந்த காலகட்டத்தில் மக்களின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை உணரவைத்தது.‌இதுபோன்ற படங்களைத் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
சோமீ குறிப்பிட்டதைப்போல் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து அந்த மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டேன்.ஈழமக்கள் மீது எனக்கு ஒரு எம்பதி இருந்தது.அதை கலை வழியாக கொண்டு வரவேண்டும் என்றும் விரும்பினேன். சினிமா ஆயுதங்களை விட வலிமையான கலைவடிவம் என்பதை உணர்ந்து இருக்கிறேன்.‌உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதுதான் கலைப்படைப்புகள்.வசூல் என்பதையெல்லாம் கடந்து இந்தச் சமூகத்திற்கு சில உண்மைக் கதைகளை அவசியம் சொல்லவேண்டும்.நாம் எல்லாம் பார்த்திடாத, கேட்டிராத கதைகளைச் சொல்லவேண்டும் என்பதுதான் சினிமா.இரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் சினிமா.அத்தகைய தருணத்தில் நான் சோமீயை சந்தித்தேன்.அவருடைய எல்லா ஆவணப்படங்களையும் பார்த்தேன்.பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.அவர் திரைப்படங்களை இயக்கவேண்டும் என்று நினைத்தபோது அவரிடம் இருந்து கதைகளைக் கேட்டோம்.
குறைந்த முதலீட்டில் நல்லகதை இருந்தால் சொல்லுங்கள்.தயாரிக்கிறோம்.ஏனென்றால் அது எங்களின் கனவு என்று அவரிடம் சொன்னேன்.ஈழத்தைப் பற்றிய கதையை இந்தியசினிமாவில் திரையரங்கத்திற்கு வருகைதந்து பார்க்கும் இரசிகர்களுக்காக உருவாக்கவேண்டும் என்று சொன்னேன்.அவர் நிறையக் கதைகளைச் சொல்லும்போது இந்த நீளிரா கதையையும் சொன்னார்.ஒரு திருமணம் – அதற்காக இரவில் நடைபெறும் சடங்குகள் – சம்பிரதாயங்கள் என்று சொன்னார்.அதைக் கேட்கும்போது மிகவும் எமோஷனலாக இருந்தது.அதேதருணத்தில் அது ஒரு திரில்லராகவும் இருந்தது.இதனை ஒரு சர்வைவல் திரில்லர் என்றும் சொல்லலாம்.
போரைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லை என்றாலும் இந்தப்படம் பார்க்கும்போது இது ஒரு அசலான திரில்லர் திரைப்படம் என்ற அனுபவத்தை வழங்கும்.
தற்போது ஈரானில் போர் நடந்துகொண்டிருக்கிறது.அதனால் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.அதனால் இங்கு ஒரு திருமணம் நிற்கிறது.அதனால் உலகத்தில் எங்கோ நடைபெறும் ஒரு போரின் தாக்கத்தை நம்மால் உணரமுடிகிறது.இந்தச்சூழலில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒருபகுதியில் திருமணம் எப்படி நடந்திருக்கும் என்பதை எம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள இயலும். அதுவும் இந்தப்படம் சுவாரசியங்களுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லப்பட்ட ஒரு கதையாக உருவாகி இருக்கிறது.குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.நடித்த நடிகைகள் நடிகர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தினை ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறோம்.தமிழ்இரசிகர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts