பெரியபடங்களோடு சிறியபடங்களிலும் நடிப்பது ஏன்? – சந்தோஷ் பிரதாப் விளக்கம்
அறிமுக இயக்குநர் எஸ்.லதா,கதை,திரைக்கதை,வசனம்,பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் மரகதமலை.இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க,நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார்.இவர்களுடன் தம்பிராமையா,ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன்,குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன்,மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய,பி.சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.பா.விஜய்,கே.டி.சேஷா பாடல்கள் எழுதியுள்ளனர்.
புலி,பாம்பு,யானை,கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கியப்பங்கு வகித்துள்ளன.மேலும், தமிழ்சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.
எல்.ஜி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை, கோடைக்கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன், ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா மார்ச் 6 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
இயக்குநர் ஆர்.கண்ணன் பேசியதாவது…..
பத்திரிகை நண்பர்களுக்கும் இங்கு கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் என் வணக்கங்கள்.இயக்குநர் லதா மேடம் இன்று பல பெண்களுக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன்.தனது கனவை விட்டுவிடாமல் “மரகதமலை” என்ற கதையை எழுதி இயக்கியிருக்கிறார்.
இன்றைய சூழலில் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது எளிதான விஷயம் அல்ல.அதற்கிடையில் தைரியமாக இந்தமுயற்சியை எடுத்த லதா மேடத்திற்கு பாராட்டுகள்.சம்மர் ஹாலிடே முன்னிட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாக உள்ள “மரகதமலை” திரைப்படம் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் இரசிக்கும் ஒரு நல்லபடமாக வெற்றி பெறவேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.நடிகர் சந்தோஷ் மற்றும் முழு படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள். நன்றி என்றார்.
நடிகர் ஜெகன் பேசியதாவது…..
என்னுடைய குருமார்கள்,தலைவர்கள்,நண்பர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்.
இந்தப்படத்தில் நிறைய அன்பும் உண்மையான ஆர்வமும் இருக்கிறது.சந்தோஷ் இந்தப்படத்தின் ஹீரோ.அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி.மேலும் தம்பிராமையா போன்ற சிறந்த நடிகர்களுடன் நடித்த அனுபவமும் மிகவும் சிறப்பானது.குழந்தைகள் கூட இதில் நடித்திருக்கிறார்கள்.சம்மர் விடுமுறைக்கு வெளியாகும் இந்தப்படம் குழந்தைகளும் குடும்பங்களும் இரசிக்கும் ஒரு நல்லபடமாக இருக்கும் என்று நம்புகிறேன்.அனைவருக்கும் நன்றி என்றார்.
தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் ராஜா பேசியதாவது…..
இங்கு கலந்து கொண்டுள்ள திரைத்துறை ஜாம்பவான்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் என் மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.சமீபத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வெற்றிகரமாக முடிந்து புதிய பொறுப்பை ஏற்றுள்ள நிலையில்,எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
“மரகதமலை” படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு பெண்மணி என்பது மிகவும் பாராட்டத்தக்க விசயம்.இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களைப் பார்த்தபோது அதில் நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் இருப்பது தெரிகிறது.இன்றைய சூழலில் ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது மிகவும் கடினமான ஒன்றாகி விட்டது.திரைத்துறை தற்போது பல சவால்களைச் சந்தித்து வருகிறது. சாட்டிலைட், டிஜிட்டல், ஓடிடி போன்ற உரிமைகள் கூட எளிதாக கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.பல திரைப்படங்கள் தயாராக இருந்தும் வெளியீடு இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.இத்தகைய சூழலில் சிறு முதலீட்டில் உருவாகும் படங்களுக்கு ஊடகங்களும் திரைத்துறையும் ஆதரவு அளிக்கவேண்டும்.
இந்தப்படம் முன்கூட்டியே சென்சார் செய்யப்பட்டு வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு பெண்மணி இத்தனை முயற்சியுடன் இந்தப்படத்தை உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.“மரகதமலை” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு நல்ல வருவாய் தரவேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என்றார்.
நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது…..
இன்றைய சூழலில் ஒரு படத்தை வெளியிடுவது மிகவும் கடினமாகியுள்ளது.பல படங்கள் தயாராக இருந்தும் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன.ஓடிடி, டிஜிட்டல் போன்ற விஷயங்களும் பல சவால்களை சந்தித்து வருகிறது.இந்த நிலைமை விரைவில் நல்லதிற்கு மாறவேண்டும் என்று நம்புகிறேன்.
நான் ஒரு நடிகராக பெரிய படங்களோடு சேர்த்து சிறியபடங்களிலும் நடிப்பதற்குக் காரணம் புதிய இயக்குநர்கள் மற்றும் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.எனக்கும் ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தவர்கள் இருந்தார்கள்.அதுபோல் நானும் ஒரு விதையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
“மரகதமலை” போன்ற குழந்தைகளும் குடும்பங்களும் இரசிக்கும் படங்கள் இப்போது மிகவும் குறைந்து விட்டன.அதனால் இந்தப்படம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருவருக்கும் பிடிக்கும் ஒரு நல்லபடமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கண்ணன்,இயக்குநர் லதா மேடம்,படக்குழு மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி என்றார்.
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…..
இப்படத்தை எழுதி இயக்கிய லதா மேடம் மிகுந்த உழைப்புடன் ஒரு அழகான படத்தை உருவாக்கியிருக்கிறார்.குறிப்பாக மிருகங்கள், கிராபிக்ஸ் மற்றும் காட்சிகள் மிகவும் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளன.ஹீரோவும் ஹீரோயினும் நல்ல கெமிஸ்ட்ரியுடன் சிறப்பாக நடித்துள்ளனர்.ஒரு பெண்மணி இவ்வளவு சவால்களைக் கடந்து இந்தப்படத்தை உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் இரசிக்கும் வகையில் உருவாகியுள்ள “மரகதமலை” திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்.சினிமா எப்போதும் நல்லதாகவே இருக்கும்;நல்லபடங்களை எடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள்.சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது.ஆனால் அதை சங்கங்கள்தான் பேசித் தீர்க்கவேண்டும்.இங்கு இவர்கள் கஷ்டபட்டு படமெடுத்துள்ளார்கள்,அவர்களை அனைவரும் வாழ்த்துவோம் நன்றி என்றார்.
இயக்குநர் எஸ்.லதா பேசியதாவது…..
இங்கு கலந்து கொண்டுள்ள பத்திரிகை நண்பர்களுக்கும் மேடையில் இருக்கும் அனைவருக்கும் என் வணக்கம்.“மரகதமலை” படம் பழைய காலத்து ராஜா–ராணி கதைகள், மந்திரவாதிகள்,மிருகங்கள் போன்ற அம்சங்களுடன் ஒரு ஃபேண்டஸி கதை ஆக உருவாக்கப்பட்டுள்ளது.இப்படிப்பட்ட கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்தப்படத்தை எடுக்கவேண்டும் என்ற ஆசையுடன் கடினஉழைப்புடன் உருவாக்கியுள்ளோம்.
தடா ஃபால்ஸில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன.ஹீரோ மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார்.டான்ஸ்,ஃபைட் போன்ற காட்சிகளிலும் மிகச்சிறப்பாக நடித்தார்.ஹீரோயினும் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார்.ஜமீன்தார் மற்றும் அவரது மனைவியின் காட்சிகளும் மிகவும் அழகாக அமைந்துள்ளன.
மேலும் ஜெகன்,தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்.கிளைமாக்ஸ் பாடல் மற்றும் நடனக்காட்சியும் மிகவும் அழகாக உருவாகியுள்ளது.குழந்தைகளும் மிகவும் இயல்பாக நடித்துள்ளனர்.இந்தப்படத்துக்கு ஆதரவளித்த அனைத்துக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அனைவருக்கும் நன்றி என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…..
மகளிர்தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.மகளிர்தினத்தை முன்னிட்டு இயக்குநர் லதாவுக்கு வாழ்த்துகள்.கதை,திரைக்கதை, வசனம்,பாடல்கள் மற்றும் இயக்கம் என அனைத்தையும் லதா அவர்கள் உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது,சிறப்பான முயற்சி.
இந்தப்படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளன.இயக்குநர் ஆர்.கண்ணன் அவர்கள் இந்தப்படத்தை நிறைவு செய்ய முக்கிய ஆதரவாக இருந்தார்,முழு படக்குழுவும் ஒருங்கிணைந்து உழைத்திருக்கிறார்.அவருக்கு நன்றி.
தமிழ் சினிமா தற்போது சவால்களைச் சந்தித்தாலும்,நல்லபடங்கள் வந்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள்.சிறந்த கதையுடன் படங்களை உருவாக்கினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.தமிழ்சினிமாவில் ஒவ்வொரு மாதமும் நல்லபடம் வந்து ஜெயித்துக் கொண்டுதான் இருக்கிறது.“மரகதமலை” திரைப்படம் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் இரசிக்கும் ஒரு நல்லபடமாக வெற்றி பெறவேண்டும்.அனைவருக்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பேசினார்.










