நடிகை சதா எடுத்த துணிச்சலான முடிவு

அறம் வெற்றிப் படத்தின் கதை பிடித்ததால் அதை நயன்தாராவே தயாரித்தார்.படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது.
அவரைப் போல நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து டார்ச் லைட் என்கிற படத்தை எடுத்து வருகிற இயக்குநர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார்.
பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக ‘டார்ச் லைட்’ படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை இயக்குபவர் விஜய்யை வைத்து தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜீத்.
இப்படம் வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்கள் பற்றிப் பேசுகிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்த பெண்கள் பற்றிய கதை இது .
பெண்களைப் போகப் பொருளாக்கி அவர்களை தங்கள் இச்சையைத் தீர்க்கும் ஒரு நுகர்பொருளாக்கிடும் சமூக அவலத்தையும் அதன் பின்னணியில் இயங்கும் இழிவான ஆண்களையும் இப்படம் தோலுரிக்கிறது.
இது ஒரு பீரியட் பிலிம். 90 களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகிறது . படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கியிருக்கிறார்கள். நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்துள்ளார்.
நான் பல நடிகைகளிடம் இந்தக் கதையைக் கூறிய போது பாலியல் தொழிலாளியாக நடிக்க வேண்டுமே என்று பலரும் மறுத்து விட்டனர்.இப்படி 4O பேரிடம் சொல்லியிருப்பேன். கடைசியில் சதாவிடம் கூறினேன். கதையைக் கேட்டு முடித்ததும் கண்ணீர் விட்டார். வீடியோப் பதிவுகளை எல்லாம் பார்த்து விட்டுக் கலங்கினார். தான் நடிக்கச் சம்மதம் என்றார். இப்படம் சதா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். நிச்சயம் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தரும். அதே போல நடிகை ரித்விகாவும் கதை கேட்டு கலங்கிக் கண்ணீர் விட்டார். நிச்சயம் இப்படம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும். பெண்களின் கண்ணீர்க் கதைகள் பெண்களிடம் போய்ச் சேர வேண்டும் என்கிறார் இயக்குநர் அப்துல் மஜீத்.
படத்தின் பிரதான பாத்திரத்தை சதா ஏற்க ரித்விகா, புதுமுகம் உதயா, இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா ரங்கநாதன் மற்றும் பலர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாலியல்தொழிலாளியாக நடிப்பது மட்டுமின்றி தயாரிப்புத்துறையிலும் காலடி வைக்கும் சதாவின் துணிச்சலை திரையுலகம் வியந்து பார்க்கிறது.