மாண்புமிகு பறை – திரைப்பட விமர்சனம்
இசை என்பது மக்கள் மனங்களில் இசைந்திருக்கும் ஒழுங்கு செய்யப்பட்ட ஓசை.அவற்றில் பல்வேறு வகைகள் இருக்கலாம்.ஆனால் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.அப்படிப்பட்ட இசையுலகிலும் மற்ற இசை வாத்தியங்களுக்குக் கிடைக்கும் மரியாதையும்,புகழும் பறை இசைக்குக் கிடைப்பதில்லை.அதில் ஓர் அரசியல் இருக்கிறது.அதன் பின்னால் ஒரு வலி இருக்கிறது.அவற்றை உடைத்தெறிந்து உலா வரும் வலிமையும் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் படமாக வந்திருக்கிறது மாண்புமிகு பறை.
படத்தில், பறை இசைக்கலைஞர்களாக லியோ சிவகுமாரும், ஆரியனும் நடித்திருக்கிறார்கள்.அவர்கள்,ஆதிபறை என்ற பெயரில் இசைக் குழு ஒன்றை நடத்தி வருகிறார்கள்.அக்குழு மூலம் பறை இசையைச் சொல்லிக் கொடுத்து அந்தக் கலையை வளர்க்கும் முயற்சியிலும், அக்கலையின் பெருமையை உலகறியச் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
பறை இசையை மட்டும் இன்றி அந்த இசைக் கலைஞர்களையும் இழிவாகப் பார்க்கும் சிலரால் அவர்களுக்குச் சிக்கல் உருவாகிறது.அது என்ன மாதிரியான சிக்கல்? அதிலிருந்து மீண்டார்களா? இல்லையா? ஆகிய வினாக்களுக்கான விடையாக விரிந்திருக்கிறது படம்.
நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவக்குமார், பறை இசைக்கலைஞர் வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பதற்காக நிறைய மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.ஒருசில காட்சிகளில் மிக நேர்த்தியாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆரியனும் பறை இசைக்கலைஞர் வேடமேற்று அதற்குத் தக்க நடிக்க விழைந்திருக்கிறார்.
நாயகியாக காயத்ரி ரெமா நடித்திருக்கிறார்.ஏற்றுக் கொண்ட வேடத்தை முழுமையாக உள்வாங்கி உணர்ச்சிப்பூர்வமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் ஆகியோரும் குறைவின்றி நடித்து படத்துக்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறார்கள்.
ஆர்.கொளஞ்சிகுமாரின் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகளும் பறைஇசை அதிர்வுகளும் கண்களை நிறைத்து மனதிலும் நுழைகின்றன.
தேவாவின் இசையில் பாடல்கள் ஆட்டம்போட வைக்கின்றன.பின்னணி இசையில் பறையின் பெருமிதம்.
சி.எஸ்.பிரேம்குமாரின் படத்தொகுப்பு சீராக இருக்கிறது.
பறை இசையின் பின்னணியை,வலியை,பெருமையைச் சொல்லும் படைப்பாக இப்படத்தைக் கொடுக்க முனைந்திருக்கும் அறிமுக இயக்குநர் எஸ்.விஜய்சுகுமார்,படத்துக்கு வைத்திருக்கும் பெயர் மூலமே பாதிவெற்றி பெற்றிருக்கிறார்.படத்தில் மீதிவெற்றி கிடைத்திருக்கிறது.
– இளையவன்











