அச்சத்தில் ஜனநாயகன் படக்குழு – காரணம் என்ன?
எச்.வினோத் இயக்கும் ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
அனிருத் இசையமைப்பாளராகவும், சத்யா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். பெங்களூருவைச் சேர்ந்த கே.வி.என் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தப்படத்தின் முதல்பாடல் நவம்பர் எட்டாம் தேதி வெளியாகும் என திடீரென இன்று மாலை படக்குழு அறிவித்திருக்கிறது.
இந்த திடீர் அறிவிப்புக்குக் காரணம் இருக்கிறதாம்.
அது என்ன?
தெலுங்கு நடிகர் பிரபாஸ், ‘த ராஜா சாப்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். மாருதி இயக்கியுள்ள அப்படம், தெலுங்கு மட்டுமின்றி, தமிழ் மற்றும் இந்தியில் ஒருசேர உருவாகிறது. இதில் சஞ்சய் தத், பொமன் இரானி, மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால் இதன் வெளியீடு தள்ளிப் போவதாக பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் அப்படத்தைத் தயாரிக்கும் பீப்பிள் மீடியா நிறுவனத்தின் டி.ஜி.விஸ்வபிரசாத், இதை மறுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், “2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும். அது ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதனால் இப்படம் பற்றி வரும் வதந்திகளை நம்பவேண்டாம். விரைவில் விளம்பர நிகழ்வுகள் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு நேற்று வந்ததிலிருந்து ஜ்னநாயகன் பட வெளியீடு தொடர்பாக பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்டன.ஏனெனில்,2026 சனவரி 14 அன்று வெளியாகவிருக்கும் பராசக்தி படத்தின் பாடல் வெளியீட்டு அறிவிப்பு வந்து பாடலும் வெளியாகியிருக்கிறது.அப்படத்துக்கு ஐந்து நாட்கள் முன்பாகவே வெளியாகும் என்று சொல்லப்படும் ஜனநாயகன் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.
அதேதேதியில் பிரபாஸ் படம் வெளியாவது உறுதியாகிவிட்டதால், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில் ஜனநாயகன் படம் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால் அந்தப்பகுதிகள் வியாபாரம் நடக்காமல் இருக்கிறதாம்.எப்பையும் வியாபாரம் நடக்கும்.ஆனால், தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்க்கும் தொகை கிடைக்காது.அந்த அச்சம் காரணமாக ஜனநாயகன் வெளியீட்டைத் தள்ளி வைக்கவிருக்கிறார்கள்.அதனால்தான் அப்படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை என்கிற தகவல் காட்டுத்தீ போல் பரவியது.
அதைத் தடுத்து நிறுத்தவே, அவசர அவசரமாக முதல்பாடல் வெளியீடு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம், பிரபாஸ் படத்தால் மேற்சொன்ன பாதிப்பு நிச்சயம் என்பதால் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனமும் விஜய் உள்ளிட்ட படக்குழுவினரும் அச்சத்தில் இருக்கிறார்களாம்.











