October 25, 2025
Uncategorized விமர்சனம்

ட்யூட் – திரைப்பட விமர்சனம்

காதல் போயின் சாதலா…
இன்னொரு காதல் இல்லையா…
தாவணி போனால் சல்வார் உள்ளதடா…

என்றார் வைரமுத்து.

இந்தக் கருத்தை ஆமோதிக்கும் விதமாகச் சில படங்கள் வந்திருக்கின்றன.அவற்றிலிருந்து இன்னும் ஒருபடி மேலே போய் கதை சொல்லியிருக்கும் படம் ட்யூட்.

நாயகன் பிரதீப் ரங்கநாதனைக் காதலிப்பதாக அவருடைய மாமா மகள் நாயகி மமிதா பைஜு சொல்கிறார்.அதை நிராகரிக்கிறார் நாயகன்.சில கால இடைவெளியில் பிரதீப்புக்கும் மமிதா மீது காதல் வருகிறது.மமிதாவின் அப்பா அமைச்சர் சரத்குமார் அதற்கு உடனடியாக சம்மதம் தெரிவிக்கிறார்.இருவருக்கும் திருமணம் நடக்கிறது. சுபம்.

இப்படி முடித்தால் இதெல்லாம் ஒரு கதையா? என்று கேட்டுவிடுவீர்கள்.அதனால், பிரதீப் தன் காதலை நிராகரித்ததும் மனம் உடைந்து மாண்டுவிடாமல் இன்னொருவரைக் காதலிக்கிறார் மமிதா.ஈருடல் ஓருயிர் உருவாக்குமளவுக்கு அந்தக் காதல் வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கும்போதுதான் பிரதீப் உள்ளே வருகிறார். மமிதாவுடன் கல்யாணம் நடக்கிறது.மனதில் ஒருவர் மணவறையில் ஒருவர்.அந்தப் பெண் தவிக்கிறார்.அதை உணர்ந்த நாயகன் என்ன செய்கிறார்? என்பதுதான் படம்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாக வலம் வந்திருக்கிறார் பிரதீப்.ஆட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறதே என்று நினைக்கும்போதே அதைவிடப் பெரும்சுமையைச் சுமக்கிறார்.இரண்டுவிதமான நடிப்புகளிலும் தேர்ச்சி பெற்று தான் ஒரு வெற்றிகரமான நடிகர் என நிறுவியிருக்கிறார்.

மிக கனம் பொருந்திய இந்த வேடத்துக்கு மிகப் பொருத்தமான தேர்வாக நாயகி மமிதா பைஜு இருக்கிறார்.அழகு, இளமை, துள்ளல் வேடத்துக்கேற்ற நடிப்பு என எல்லாவற்றிலும் கவர்கிறார்.

நாட்டுக்கு அமைச்சர், நாயகியின் பழமைவாத அப்பா வேடமேற்றிருக்கிறார் சரத்குமார்.அவருடைய நேர்மறை பிம்பத்துக்கு எதிர்மறை வேடம் என்றாலும் நடிப்பில் நிறைவு காட்டியிருக்கிறார்.

ரோகிணி, திராவிட் செல்வம், ஹிருது ஆகியோரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசையில் கூடுதல் கவனம் வேண்டும்.

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் காட்சிகளிலும் இளமைத்துள்ளல்.

எழுதி இயக்கியிருக்கும் கீர்த்திஸ்வரன்,முதல்படத்திலேயே ஆழமான விசயத்தைத் தொட்டிருக்கிறார். இளம்பெண்களின் வழக்குரைஞராக நின்று ஒரு வாதத்தை முன்வைத்திருக்கிறார்.அதைத் திரைமொழியில் சொல்வதிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.நாயகன் பிரதீப்பும் நாயகி மமிதாவும் அவர் சிந்தனைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

– எழிலன்

Related Posts