ராட்சசன் போல் ஆர்யன் படமும் பெருவெற்றி பெறும் – விஷ்ணுவிஷால் பேட்டி
விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருக்கும் படம் ஆர்யன். பிரவீன்.கே இயக்கியிருக்கும் இப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடித்திருக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் மானசா செளத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் ஆகியோர் வழங்குகிறார்கள்.
அக்டோபர் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் ஓர் உரையாடல்.
1.ஆர்யன் படம் பற்றி..?
இது ஒரு சைக்கோ திரில்லர் வகைப்படம்.இந்த வகை என்றாலே ராட்சசன் படம்தான் நினைவுக்கு வரும், ஆனால் அந்தப்படம் போல் இது இருக்காது. சைக்கோ திரில்லர் படங்கள் என்றாலே பார்வையாளர்கள் மனதில் ஒரு கதை ஓடும். அந்தக் கதை இந்தப் படத்தில் இருக்காது. அதுதான் இந்தப்படத்தின் சிறப்பு. பொதுவாக என் படத்தில் எதாவது ஒரு ஸ்பெஷல் விசயங்கள் மறைக்கப்பட்டிருக்கும், படம் வெளியாகும் போதுதான் அது தெரியும்.
இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் நடிக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. அதே சமயம் இயக்குநர் சொல்லும் இந்த வழக்கு அல்லது குற்றம் உண்மையில் நடந்தால், காவல்துறை எப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்திருப்பார்கள்? என்று எனக்குத் தோன்றியது. அப்போது என் அப்பாவிடம் இதுபற்றிக் கேட்ட போது,அவர் அதிர்ச்சியாகி, அமைதியாகிவிட்டார். அப்போதுதான் இந்தவிசயம் புதிது என்பது புரிந்தது. காவல்துறை அதிகாரியையே யோசிக்க வைக்கிறது என்றால் இது எப்படிப்பட்டதாக இருக்கும்? என்று யோசித்தேன். தற்போது படம் பார்த்தவர்களும் அதையே உணர்கிறார்கள், நீங்களும் படம் பார்த்த பிறகு நான் சொன்னது சரி என்று நினைப்பீர்கள்.
2.இயக்குநர் செல்வராகவனை நடிக்க வைத்தது பற்றி..?
கதை பிடித்து இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.படத்தில் அவர் வில்லன் என்பதைச் சொல்லிவிட்டாலும், அவர் எப்படிப்பட்ட வில்லத்தனத்தைச் செய்கிறார்? என்பது தான் படத்தின் சிறப்பு. அது இதுவரை பார்த்திராத விசயமாக இருக்கும். மற்ற படங்களில் பார்க்கும் செல்வராகவனை இந்தப் படத்தில் பார்க்க மாட்டீர்கள்.
3.சைக்கோ த்ரில்லர் படத்தைக் குடும்பத்துடன் பார்க்கும் படம் என்று சொல்கிறீர்களே? எப்படி?
சைக்கோ திரில்லர் படம் என்றாலே இரசிகர்களைக் கவர்வதற்காக சில வன்மமான காட்சிகள் இருக்கும்.இரத்தம் தெறிக்கும்.என் படங்களைப் பொறுத்தவரை கதை கேட்கும் போதே இது திரையரங்கத்திற்கான படமா இல்லையா? என்பதை முடிவு செய்துவிடுவேன். ராட்சசன் படத்தில் கொலைகள் இருக்கும். ஆனால் வெட்டுவதையோ, இரத்தம் தெறிப்பதையோ காட்சிகளாகக் காட்டமாட்டோம். அதனால்தான் அந்தப் படத்தை குடும்ப இரசிகர்கள் பார்த்தார்கள். அதுபோல் தான் ஆர்யன் படத்திலும் பயமுறுத்தும் காட்சிகள் இருக்கும். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்று தொழில்நுட்ப ரீதியாக இரசிகர்களை மிரட்டுமே தவிர அந்தக் காட்சிகளில் வெட்டுவது, இரத்தம் தெறிப்பது, வன்மம் என எதுவுமே இருக்காது.எனவே, இந்தப்படத்தையும் நிச்சயம் குடும்பமாகப் பார்க்கலாம்.இது முழுக்க முழுக்க திரையரங்கத்திற்கான படம். அனைத்துத் தரப்பினருக்குமான படம். இதில் சொல்லப்பட்டிருக்கும் குற்றம் மற்றும் அதன் பின்னணி புதிதாக இருக்கும்.
4.படம் காலதாமதம் ஆனது ஏன் ?
இந்தப்படம் நிச்சயம் பண்ண வேண்டும் என்று இருந்தேன். அதேசமயம், சில படங்களுக்கு கொடுக்கப்பட்ட தேதிகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் இந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விட்டது. பிறகு பொறுத்தது போதும் என்ற நிலையில், இந்தப்படத்தை முடித்த பிறகே மற்ற படங்களின் வேலைகளைப் பார்க்கவேண்டும் என்று முடிவுசெய்து படப்பிடிப்பை முடித்து விட்டோம்.
5.தயாரிப்பாளராகப் பயணிப்பது கடினமாக இருக்கிறதா?
நான் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க சுமார் 27 வருடங்கள் ஆகிவிட்டன. அந்த இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் நான் விரும்பியது போல் சில படங்களில் நடிக்க வேண்டும். அதற்காகத்தான் தொடர்ந்து தயாரிப்பாளராகப் பயணிக்கிறேன். இதனால் எனது நேரம் மிசசமாகிறது. நேரம் விலை மதிக்க முடியாதது. நான் தயாரிப்பாளராக இருக்கும்போது அந்த நேரம் எனக்கு அதிகமாகக் கிடைக்கிறது.அதனால்தான் தொடர்ந்து தயாரிக்கிறேன். இப்போது நான் மட்டும் தனியாகத் தயாரிக்கவில்லை.சிலருடன் கூட்டணி வைத்தும் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறேன்.
6.நடிகர் அமீர்கான் இந்தப்படத்தில் ஆர்வம் காட்டினாரே.என்னாச்சு?
கட்டா குஸ்தி படம் தொடர்பாக அமீர்கான் சாரிடம் பேசியிருந்தேன்.அப்போது மும்பைக்கு வேறு ஒரு வேலையாகச் சென்றபோது அவரைச் சந்தித்தேன்.கட்டா குஸ்தி எப்படிப் போனது என்று விசாரித்தவர்,தற்போது என்ன படம் போய்க்கொண்டிருக்கிறது? என்று கேட்டார். நான் ஆர்யன் படம் பற்றிச் சொன்னேன். பிறகு அதன் ஒன்லைன் கேட்டார். அதைச் சொன்னேன்.அவருக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை உடனே,முழுக்கதை கேட்கலாமா? என்று கேட்டார். இயக்குநர் பிரவீனும் என்னுடன் இருந்ததால், சரி என்றேன். கதை சொன்னோம், அவருக்குப் பிடித்துவிட்டது. உடனே,இந்தப்படத்தை இந்தியிலும் எடுக்கலாம். வில்லனாக நான் நடிக்கிறேன். ஹீரோவாக நீங்க நடிங்க என்று கூறினார். ஆனால், சில காரணங்களினால் அது நடக்காமல் போய்விட்டது. ஆனால், அமீர்கான் சாரையே இந்தக் கதை கவர்ந்ததால் எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. இப்போது படம் முடிந்துவிட்டது.படத்தை பார்த்த பலரும் அமீர்கான் சாரைப் போல வியந்து பாராட்டுவதோடு வெற்றி நிச்சயம் என்றும் சொல்கிறார்கள்.
– சதீஷ்











