சினிமா செய்திகள்

நேரடியாகக் களமிறங்கிய வெற்றிமாறன் – கவின் பட வியப்பு

நடிகர் கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.அப்படம் ஜூலை 25 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

கிஸ் படத்தைத் தொடர்ந்து கவின் நடிக்கும் படம் மாஸ்க். இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்குகிறார்.

கவின் நாயகனாக நடிக்கும் மாஸ்க் படத்தில், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

மாஸ்க் படத்தின் பணிகள் பூஜையுடன் 2024 மே மாதம் 17 ஆம் தொடங்கியது.அம்மாத இறுதியிலேயே அப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது.

அதன்பின் விட்டுவிட்டு நடந்த அப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பரிலேயே முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று சொல்லப்பட்டது.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த பிறகு, தயாரிப்பாளர் என்கிற முறையில் படத்தைப் பார்த்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.அவர் பார்த்துவிட்டு படத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் அதற்காக மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.அதோடு எந்தெந்த மாதிரியான காட்சிகள் எடுக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

அவர் சொன்னபடி, பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தி சொன்ன காட்சிகளையும் படமாக்கிவிட்டார்களாம்.அதன்பின் எடுத்தவற்றையெல்லாம் சேர்த்து மறுபடி படம் பார்த்திருக்கிறார் வெற்றிமாறன்.

எல்லாம் சரியாக வந்துவிட்டது என்று அவர் பாராட்டுவார் என நினைத்த படக்குழுவுக்கு ஏமாற்றம்.இதுபோதாது இன்னும் சில விசயங்களைச் சேர்க்க வேண்டும் என்று வெற்றிமாறன் சொல்லிவிட்டாராம்.

இப்போது அவர் சொல்லியிருப்பவற்றைச் சேர்க்க ஐந்து முதல் பத்துநாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதாம்.இதனால் இயக்குநர் விகர்ணன் அசோக்,நாயகன் கவின் உள்ளிட்ட படக்குழுவினர் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்களாம்.முதன்முறை பார்த்தபோதே மொத்தமாகச் சொல்லியிருந்தால் எல்லாவற்றையும் படமாக்கியிருக்கலாம் அப்போது இதுபோதும் என்று சொல்லிவிட்டு இப்போது மீண்டும் படப்பிடிப்பு நடத்துங்கள் என்று சொல்கிறார்.மீண்டும் எடுத்துக் கொண்டு வந்த பிறகும் மேலும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று சொன்னால் என்ன செய்வது? என்றெல்லாம் தங்களுக்குள் புலம்பிக் கொண்டிருந்தார்களாம்.

அதனால்,மீண்டும் நடத்த வேண்டிய படப்பிடிப்பை நானே செய்கிறேன் என்று களமிறங்கிவிட்டாராம் வெற்றிமாறன். அதன்படி சில நாட்கள் அவரே படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று படப்பிடிப்பை நடத்தத் தொடங்கிவிட்டாராம். இடையில் சிம்பு படத்தின் விளம்பரப்படப்பிடிப்பு இருந்ததால் தடைபட்டிருந்த மாஸ்க் படப்பிடிப்பை மீண்டும் சில நாட்கள் அவர் நடத்தவிருக்கிறாராம்.

படத்தில் நாயகியாக நடிக்கும் ஆண்ட்ரியவின் வேண்டுகோளுக்காக வெற்றிமாறன் நேரடியாகக் களமிறங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

யார் என்ன செய்தால் என்ன? படம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் இறுதி இலக்கு.

Related Posts