பேரன்பும் பெருங்கோபமும் – விமர்சனம்
நூறு சட்டங்கள் ஆயிரம் கட்டுப்பாடுகள் போட்டாலும் சாதிவெறி கொண்டு செய்யும் ஆணவப் படுகொலைகளுக்குப் பஞ்சமில்லை என்பதுதான் எதார்த்தம்.அதற்கெதிராக சமுதாயத்தில் பல்வேறு தரப்பினர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.திரையில் அதைத் தொடர்ந்திருக்கும் படம் பேரன்பும் பெருங்கோபமும்.
மருத்துவமனையொன்றில் நடக்கும் குழந்தை கடத்தல் நிகழ்வில் அங்கு மருத்துவப் பணியாளராகப் பணியாற்றும் நாயகன் விஜித்பச்சான் கைது செய்யப்படுகிறார்.அவர் யார்?
சாதி மீறி காதலித்த குற்றத்துக்காகக் காதலன் கொலை செய்யப்படுகிறார் காதலி மனநோயாளி ஆக்கப்படுகிறார்.ஒட்டுமொத்த ஊரும் ஒப்புக்கொண்டு நடக்கும் அக்கொலைபாதகச் செயலால் அந்த ஊரைவிட்டு வெளியேறி வெளியூரில் படித்து வேலை வாங்கி கிறித்துவ மதத்தைச் சேர்ந்த நாயகியைக் காதலித்து கரம்பிடித்து ஊருக்குத் திரும்பியவர்.
அவருக்கும் இந்தக் கடத்தலுக்கும் என்ன தொடர்பு? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் விஜித்பச்சான் ஐம்பது வயதுக்காரராக அறிமுகம் ஆகிறார்.அதன்பின் அவருடைய இளமைப்பருவக் காட்சிகள் வருகின்றன.இரண்டு பருவங்களிலும் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்கும் திறன் படைத்தவன் என்பதையும் உணர்த்தியிருக்கிறார்.
நாயகி ஷாலி நல்ல தேர்வு.இயற்கை அழகும் இயல்பான நடிப்பும் அவருக்குக் கைவந்திருக்கிறது.
பவா செல்லதுரை, மைம்கோபி, அருள்தாஸ், தீபா,கீதா கைலாசம், சுபத்ரா ராபர்ட், லோகு,சாய் வினோத் உட்பட படத்தில் நிறைய நடிகர்கள்.அனைவரும் அவரவர் வேடமுணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இளையராஜா இசையில் பாடல்களில் கிராமத்து மணம்.பின்னணி இசை பெரும் பலம்.
ஜேபி.தினேஷ்குமார் ஒளிப்பதிவில் காட்சிகளில் நேர்த்தியும் தெளிவும் இருப்பது காண்பதை இலகுவாக்குகிறது.
ராமரின் படத்தொகுப்பில் தாழ்வில்லை.
எழுதி இயக்கியிருக்கிறார் சிவபிரகாஷ்.சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் ஆணவக்கொலைகளுக்கு எதிராகக் களமிறங்கியிருக்கிறார்.அதோடு சமகால அரசியல் விமர்சனங்களையும் வெளிப்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார்.
கதைக்கேற்ற பெயர் பெயருக்கேற்ற கதையா எனப் பட்டிமன்றம் நடத்துமளவுக்கு இரண்டும் பின்னிப் பிணைந்திருப்பது நலம்.
– கதிரோன்











