விஜய் படத்துக்கு சன் தொலைக்காட்சி ஆதரவு – விவரம்
விஜய் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜனநாயகன். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.இப்படத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
அனிருத் இசையமைப்பாளராகவும், சத்யா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். பெங்களூருவைச் சேர்ந்த கே.வி.என் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
இப்படம் தொடங்கும்போதே இப்படத்தின் வெளியீடு இவ்வாண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ஆயுதபூசையையொட்டி இப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
ஆனால், இணைய ஒளிபரப்பு உரிமை வியாபாரத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக இந்தப்படத்தின் வெளியீடு சில மாதங்கள் தள்ளிப்போனது.
2026 ஆம் ஆண்டு தைப்பொங்கலையொட்டி சனவரி மாதம் 9 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.இதுகுறித்த அறிவிப்பை மார்ச் 24 அன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
இந்நிலையில், இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமையை அமேசான் நிறுவனம் பெற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.அந்நிறுவனம் இப்பட ஒளிபரப்பு உரிமைக்காக அந்நிறுவனம் சுமார் 120 கோடி கொடுக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதோடு,இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.அதற்காக படநிறுவனம் சுமார் எழுபதுகோடி விலை சொல்லியிருக்கிறது.
அவ்வளவு விலை கொடுக்க தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வரவில்லையாம்.இதனால் சன் தொலைக்காட்சியை அணுகியிருக்கிறார்கள்.
அந்நிறுவனம் சுமார் ஐம்பத்தைந்து கோடி கொடுக்க முன்வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.இதை படநிறுவனமும் ஏற்றுக்கொண்டதாம்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டதெனவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்றும் சொல்கிறார்கள்.
விஜய் அரசியல்கட்சி தொடங்கி ஆளும் திமுகவை எதிர்த்துப் பேசிக் கொண்டிருக்கிறார்.ஆனால் அவருடைய படத்தை திமுக ஆதரவு தொலைக்காட்சிதான் வாங்கி வெளியிட முன்வந்திருக்கிறது என திரைப்பட வட்டாரங்களில் பேச்சு உலவுகிறது.
இந்தப்படத்தை அந்தத் தொலைக்காட்சிக்குக் கொடுக்க வேண்டாம் என்று விஜய் சொல்லவில்லை சொல்லவும் முடியாது என்பதால் படநிறுவனம் இந்த வியாபாரத்தைப் பேசி முடித்திருக்கிறது என்கிறார்கள்.
அதேநேரம் சன் தொலைக்காட்சி விஜய் படத்துக்கு ஆதரவு கொடுத்தால் அது திரைப்பட ரீதியாக அவருக்குப் பலன் தரலாம் ஆனால் அரசியல் ரீதியாக அது பெரும் பலவீனத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள்.











