சினிமா செய்திகள்

அஜீத்தின் பெருந்தன்மை – குட்பேட்அக்லியில் ஓர் ஆச்சரியம்

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்’குட் பேட் அக்லி’.இப்படத்தில் அஜீத்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ்,யோகிபாபு, பிரபு உட்பட பலர் நடித்துள்ளனர்.ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் தெலுங்குப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் குறுமுன்னோட்டம் முதலில் வெளியானது. அதன்பின் சில நாட்களுக்கு முன்பு ஓஜி சம்பவம் என்றொரு பாடலும் அண்மையில், காட் ப்ளஸ் யூ என்றொரு பாடலும் வெளியாகியிருக்கின்றன.அவ்விரண்டு பாடல்களும் அஜீத் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு பழைய பாடலைத் திரும்ப வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மம்முட்டி,நெப்போலியன்,சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் ரமணி இயக்கத்தில் வெளியான படம் எதிரும் புதிரும்.1999 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

அப்படத்தில் தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா என்கிற பெரும் வரவேற்புப் பெற்ற பாடல் உண்டு.வைரமுத்து எழுதிய அப்பாடலுக்கு நடன இயக்குநர் ராஜுசுந்தரமும் சிம்ரனும் நடனமாடியிருப்பார்கள்.

அந்தப்பாடலை குட்பேட்அக்லி படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்களாம்.

இப்படத்தில் இடம்பெறும் இப்பாடலில் அஜீத்தும் த்ரிஷாவும் நடனமாடப் போகிறார்களா? என்று கேட்டால் இல்லையாம்.

இந்தப்படத்தில் எதிர்மறை நாயகனாக அர்ஜூன் தாஸ் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அர்ஜூன் தாஸும் கண்ணடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை பிரியா வாரியரும் இப்பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்களாம்.

அஜீத் போன்ற முன்னணி நடிகரின் படத்தில் எதிர்மறை நாயகனுக்குப் பாடல் வைத்திருப்பதும் அதுவும் எளிதில் மக்களைச் சென்றடையக் கூடிய புகழ்பெற்ற பாடலில் அவர் நடனமாட அனுமதித்திருப்பதும் வியப்பூட்டக்கூடிய செய்தி.

இயக்குநர் இந்தமுடிவை எடுத்திருந்தாலும் அஜீத்துக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை.அவரும் இதற்கு சம்மதம் சொல்லியிருக்கிறார் என்பது அவருடைய தன்னம்பிக்கையையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது என விசயமறிந்தோர் சொல்கிறார்கள்.

Related Posts