சினிமா செய்திகள்

இந்தியன் 3 மற்றும் இரண்டு பெரிய படங்கள் – லைகா நிறுவனம் புத்தெழுச்சி

2008 ஆம் ஆண்டு வெளியான படம் பிரிவோம் சந்திப்போம்.கரு.பழனியப்பன் இயக்கத்தில் சேரன்,சினேகா உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்தை ஞானம் ஃபிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரித்திருந்தது.அது வேறு யாருமல்ல. லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் நிறுவனம்தான் அது.

2014 ஆம் ஆண்டு,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் மூலம் முழுமூச்சாகப் படத்தயாரிப்பில் இறங்கியது லைகா நிறுவனம்.

அப்போதிருந்து கமல்,ரஜினி,அஜீத்,சூர்யா,சிம்பு,நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்,ஷங்கர், மணிரத்னம்,சுந்தர்.சி,நெல்சன் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது அந்நிறுவனம்.

அந்நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான லால் சலாம், இந்தியன் 2, வேட்டையன் ஆகிய படங்களும் இவ்வாண்டு பிப்ரவரியில் வெளியான விடாமுயற்சி ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின.எல்லாப் படங்களும் பல நூறு கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 27 அன்று மோகன்லால் நடிப்பில் பிருதிவிராஜ் இயக்கத்தில் வெளியான எம்புரான் படத்தையும் அந்நிறுவனம் தயாரித்திருந்தது.பட வெளியீட்டுக்கு சில நாட்கள் முன்பாக அப்படத்திலிருந்து அந்நிறுவனம் விலகிக் கொண்டதாகச் சொல்லப்பட்டது.

அதனால்,லைகா நிறுவனம் இனிமேல் படத்தயாரிப்பில் ஈடுபடாது.அந்நிறுவனத்தை மூடவிருக்கிறார்கள் அதன் தொடக்கமாக அங்கு பணியாற்றிய பலரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள் என்று செய்திகள் வந்தன.

இதுதொடர்பாக,இலண்டனில் இருக்கும் லைகா நிறுவனத் தலைமை அலுவலகத்தில் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது….

எம்புரான் பட வெளியீட்டுக்கு முன்பே இலாபம் கிடைத்ததால் அதன் உரிமையை விற்பனை செய்தோம்.தொழில் செய்வதே அதற்காகத்தானே.

அடுத்து எங்கள் தயாரிப்பில் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் லாக் டவுன் மற்றும் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 3 ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

இப்போது, ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

கமலின் தக்லைஃப் வெளியீட்டுக்குப் பிறகு ஒரு பொருத்தமான தேதியில் இந்தியன் 3 படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்.

இவைதவிர இன்னும் இரண்டு பெரிய கதாநாயகர்களின் படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அதற்காக கதை திரைக்கதை ஆகியனவற்றை உறுதி செய்யும் வேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன.சரியாக அமைந்தவுடன் எந்தெந்த நாயகர்கள் என்பதை அறிவிக்கவிருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஒரு பக்கம் லைகா நிறுவனம் மூடப்படுகிறது என்று தவறான செய்திகள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில், அடுத்தடுத்த படங்கள் வெளியீடு மற்றும் புதியபடங்கள் உருவாக்கம் என்று புத்தெழுச்சியுடன் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது அந்நிறுவனம் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

நடக்கட்டும் நடக்கட்டும் நல்லபடியாக நடக்கட்டும்.

Related Posts