சினிமா செய்திகள் நடிகர்

தடையை மீறிய தனுஷ் – தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த காலா திரைக்கு வரத் தயார் நிலையில் உள்ளது. ஏப்ரல் 27-ந் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, ‘காலா’ படம் திட்டமிட்டபடி திரைக்கு வருமா? என்ற கேள்வி எழுந்தது.

வேலை நிறுத்தம் முடிந்தபின், ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட படங்களைத் திரைக்குக் கொண்டு வந்த பின்னரே மற்ற படங்களை வெளியிட அனுமதிக்கப்படும் என்று சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனால் புதிய படங்கள் தணிக்கைச் சான்றிதழ் பெற தடையில்லாச் சான்று மற்றும் விளம்பர ஒப்புதல் கடிதம் இரண்டும் வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தனர்.

ஏப்ரல் 27 அன்று திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்தின் ‘காலா’ படத்துக்கும் இந்தச் சான்றிதழை வழங்க தயாரிப்பாளர்கள் சங்கம் மறுத்து வந்தது.

இந்த நிலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் (பிலிம் சேம்பர்) தனுஷின் தயாரிப்பு நிறுவனமும் உறுப்பினராக இருக்கிறது.

இதைப் பயன்படுத்தி, காலா படம் தணிக்கைச் சான்றிதழ் பெறத் தேவையான அனுமதிக் கடிதங்களை வர்த்தக சபையில் இருந்து தனுஷ் நிறுவனத்தின் பெயரில் பெறப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் காலா படத்தைத் திட்டமிட்டபடி வெளியிட முடியும்.

இதன்மூலம், தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுக்கு எதிராக தனுஷ் செயல்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

தமிழ்த்திரையுலகின் உச்சநட்சத்திரமான ரஜினி படமே இப்படிச் செய்திருப்பதும் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் இப்படி நடந்துகொண்டிருப்பதும் மற்ற தயாரிப்பாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

Related Posts