விமர்சனம்

சப்தம் – திரைப்பட விமர்சனம்

ஈரம் படத்தில் தண்ணீரில் பேய் இருக்கிறதெனச் சொல்லி வெற்றி பெற்ற இயக்குநர் அறிவழகன் ஒலியில் பேய் என்று சொல்லி பயமுறுத்த முனைந்திருக்கும் படம் சப்தம்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் மூன்று மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதனால், அந்தக் கல்லூரியில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகத் தகவல் பரவுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சம் கொள்கிறார்கள்.இதனால்,கல்லூரி நிர்வாகம், அமானுஷ்யங்கள் பற்றிய ஆய்வு செய்யும் நாயகன் ஆதியை மும்பையில் இருந்து வரவைக்கிறது.அவர் வந்து என்ன கண்டுபிடிக்கிறார்? என்பதுதான் திரைக்கதை.

அமைதியான மற்றும் அழுத்தமான ஆராய்ச்சியாளர் வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் நாயகன் ஆதி.நாயகியை ஓர் சக்தி பின் தொடர்வதைக் கண்டுபிடிக்கும் நேரம் உட்பட பல நேரங்களில் அக்காட்சிகளின் உணர்வுகளைத் தம் உடல்மொழியாலேயே நமக்குக் கடத்திவிடுகிறார்.

நாயகியாக லட்சுமிமேனன் நடித்திருக்கிறார்.அவரைச் சுற்றிப் பல விசயங்கள் நடக்கும் அது தெரியாமல் அதேநேரம் அதன் விளைவுகளி அனுபவிக்கும் வேடம்.அதில் நன்றாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

நகைச்சுவைக்காக ரெடின் கிங்ஸ்லியை நடிக்க வைத்திருக்கிறார்கள்.சில இடங்களில் சிரிக்க வைத்து பல இடங்களில் சோதிக்கிறார்.

சிம்ரன், லைலா, எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, விவேக் பிரசன்னா, ராஜீவ்மேனன் என நிறையப்பேர் படத்தில் இருக்கிறார்கள்.அவரவர் தகுதிக்கேற்ற வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதற்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அருண்பத்மநாபன் இப்படத்தின் திரைக்கதையை உணர்ந்து அதற்கேற்ற வண்ணங்கள் ஒளியமைப்புகள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி காட்சிகளை இரசிக்க வைத்திருக்கிறார்.

படத்தின் மையமே ஒலி என்பதால் இசையமைப்பாளர் தமன் மற்றும் ஒலிக்கலவையாளர்கள் உழைப்பு அதிகம் தேவை.அவர்களும் தேவைக்கேற்பப் பணியாற்றியிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

அமானுஷ்ய சக்தி என்று தொடங்கி 42 ஆன்மாக்கள் என நீண்டு செல்லும் திரைக்கதையை வைத்துக் கொண்டு மருத்துவத்துறை சார்ந்து நடக்கும் சில விசயங்களைப் பேசியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன்.

கண்களுக்கு மட்டுமின்றி காதுகளுக்கும் புதிய அனுபவங்களைக் கொடுக்க முயன்றிருக்கிறார்.

– இளையவன்

Related Posts