காலா படத்தை வெளியிடத் தடை ? – ரஜினி அதிர்ச்சி
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து தனுஷ் தயாரித்து இருக்கும் காலா படத்தை ஏப்ரல் 27-ந் தேதி திரையிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
திரையுலக வேலைநிறுத்தம் காரணமாக, இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட தேதியில் ‘காலா’ வெளியாவதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் காலா படம் இன்னும் தணிக்கை செய்யப்படவில்லை.
ஒரு திரைப்படம் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றால் தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கடிதம் வழங்க வேண்டும். இந்தக் கடிதம் கிடைத்த பிறகுதான் புதிய படங்கள் தணிக்கை செய்யப்படும்.
அதன்படி ‘காலா’ படத்திற்காக தயாரிப்பாளர் சங்க அனுமதி கடிதம் கேட்டு கடந்த மாதம் சங்கத்திற்கு கோரிக்கைக் கடிதம் கொடுக்கப்பட்டது.
ஆனால், தயாரிப்பாளர் சங்கம் இதுவரை ‘காலா’ பட தணிக்கைக்கான அனுமதிக் கடிதத்தைக் கொடுக்கவில்லை. அது பற்றிக் கேட்ட போது, வேலைநிறுத்தம் நடைபெறுவதால் கடிதம் கொடுக்க தாமதம் ஆவதாகக் கூறப்பட்டது.
இதனால், நாங்கள் ஏப்ரல் 27-ந் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துவிட்டோம். ஆனால் தணிக்கை செய்வதற்கான அனுமதிக் கடிதத்தைக் கொடுக்காமல், தயாரிப்பாளர் சங்கம் வேண்டும் என்றே தாமதம் செய்கிறது என்று தனுஷ் தரப்பு குற்றம் சாட்டியது.
இதற்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர் சங்கம், ‘வரிசைப்படிதான் தணிக்கை அனுமதி கடிதம் கொடுத்து வருகிறோம். அதன்படி ‘காலா’ படத்துக்கும் கொடுப்போம்’ என்று தெரிவித்து இருக்கிறது.
தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம் காரணமாக அனுமதி கடிதம் கேட்டவர்கள் அதை பெறுவதில் அக்கறை காட்டவில்லை. எனவே, வரிசைப்படி கடிதம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டு இருக்கலாம். மற்றபடி ‘காலா’ படத்துக்கு கடிதம் கொடுப்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
வேலைநிறுத்தம் காரணமாக படங்களின் வெளியீட்டுத்
தேதிகளில் மாற்றம் வரவிருக்கிறது. ஆனால் காலா அந்தக் கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கிறதென்றும் அதனால் காலா பற்றி பரபரப்பான அறிவிப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து வருமென்றும் சொல்லப்படுகிறது.
இதனால் ரஜினி அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.











