திரைப்பட விளம்பரத்திற்காக உயிர்பலி? – அல்லுஅர்ஜுன் மீது குற்றச்சாட்டு
2021 ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து ‘புஷ்பா-2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரானது.அப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில்,நேற்றிரவே ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் திரையிடப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர் படம் பார்ப்பதாகத் தகவல் பரவியது.
இதனால் அந்தத் திரையரங்கு முன்பு ஏராளமான இரசிகர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. ஆயிரக்கணக்கான இரசிகர் கூட்டத்தைக் கலைக்க காவல்துறை தடியடி நடத்தியது.
இதில் கணவன், மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வந்த ஒரு குடும்பம் நெரிசலில் சிக்கியது. ஒரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் சுயநினைவை இழந்து விழுந்தனர். அவர்களில் ஒருவர் ரேவதி (39).அவர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல், உடற்கூறாய்வு அறைக்கு மாற்றப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் மகனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் அக்குழந்தைக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வின் போது நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது.
இந்நிகழ்வு சமுதாய ஆர்வலர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு திரைப்படத்தின் விளம்பரத்துக்காகச் செய்யப்படும் செயல் உயிரைப் பறிக்கும் அளவுக்குப் போயிருக்கிறது.
இன்று படம் வெளியிடப்படவிருக்கும் நிலையில் ஒருநாள் முன்னதாக நேற்றிரவே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வாங்கினார்.அதோடு, அதிகாரப்பூர்வமாக எண்ணூறு முதல் மூவாயிரம் வரை நுழைவுச் சீட்டு விற்பனை செய்தனர்.இவற்றோடு இப்போது உயிர் பலியாகவும் காரணமாக இருந்திருக்கிறது புஷ்பா 2 படக்குழு.
பொதுவாக பெரிய கதாநாயகர்கள் தங்கள் படம் வெளியாகும் போது பெரும் கூட்டம் கூடியதாகக் காட்டுவதற்காக பெரும்பணம் செல்வழித்து செயற்கையாகப் பெருங்கூட்டத்தைக் கூட்டுவார்கள்.நேற்று அவரே அங்கு படம் பார்த்ததால் மேலும் அதிகக் கூட்டத்தைக் கூட்டிவிட்டார்கள்.
இந்தப்படத்தின் நாயகன் அப்படிச் செய்ததாலேயே இப்படி ஒரு சோக நிகழ்வு அரங்கேறியிருக்கிறதென சமுதாய ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.











