சினிமா செய்திகள்

தன் முடிவை தானே மீறிய விஜய்சேதுபதி – வியப்பூட்டும் காரணம்

விஜய்சேதுபதி இப்போது ஆறுமுககுமார் இயக்கத்தில் ஏஸ், மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன.இப்போது அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இவற்றிற்கடுத்து விஜய்சேதுபதி நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.அதேநேரம், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இன்னொரு புதிய படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அண்மையில் பிரபல சர்ச்சை இயக்குநர் ராம்கோபால்வர்மா,சென்னை வந்து விஜய்சேதுபதியைச் சந்தித்துவிட்டுச் சென்றார்.அப்போதே அவருடைய இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

இப்போது அது உறுதியாகியிருக்கிறது.

ராம்கோபால்வர்மா,இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிடும் வண்ணம் ஒரு கதையைப் பிடித்து அதைப் படமாக்க எண்ணியிருக்கிறார். அதில் நாயகனாக நடிப்பதற்காக இந்தியின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜய்தேவ்கனை அணுகியிருக்கிறார்.

ராம்கோபால்வர்மா கேட்ட தேதிகளில் அவர் வேறு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்திருக்கிறார். அதனால் அவரை வைத்துப் படம் இயக்கவியலாத நிலை.எனவே மும்பையிலிருந்து நேராகச் சென்னை வந்து விட்டார். விஜய்சேதுபதியை அவருடைய அலுவலகத்துகே சென்று சந்தித்துப் பேசி அவருடைய சம்மதத்தைப் பெற்றுவிட்டார்.

ராம்கோபால்வர்மா இயக்கத்தில் அஜய்தேவ்கன் நடித்த படம் கம்பெனி.2002 ஆம் ஆண்டு அப்படம் வெளியானது.அந்தப்படம் வெளியான நேரத்தில் துபாயில் வேலை செய்துகொண்டிருந்த விஜய்சேதுபதி,திரையரங்கில் அப்படத்தைப் பார்த்து வியந்து இரசித்திருக்கிறார்.

22 ஆண்டுகளுக்குப் பிறகு அதே இயக்குநர் அதே கதாநாயகனுக்கான கதையில் விஜய்சேதுபதியை நடிக்கக் கேட்டிருக்கிறார்.அதனாலேயே,இனிமேல் தமிழ்ப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்கிற தன்னுடைய முடிவை தானே மீறி, மறுபேச்சுப் பேசாமல் ஒப்புக்கொண்டாராம்.

ராம்கோபால்வர்மா படத்தில் நடிப்பது ஒரு பெருமை அந்தப்படம் இந்தியா முழுமைக்குமான படமாக உருவாவது இன்னொரு பெருமை இவற்றோடு அந்தப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் இந்தி நடிகர் நானாபடேகர் நடிக்கவிருக்கிறார்.அவருடன் சேர்ந்து நடிப்பது மிகப்பெரும் பெருமை என்று மகிழ்ந்திருக்கிறாராம் விஜய்சேதுபதி.

மிக விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் உடனடியாகவே படப்பிடிப்பையும் தொடங்கிவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

Related Posts