கேப்டன் மில்லர் 2 கைவிடப்பட்டது?
பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.இதற்கு ஒப்புதல் வழங்கினார் இளையராஜா.
தன் வாழ்க்கையைப் படமாக எடுப்பதில் முதலில் இளையராஜா ஆர்வம் காட்டவில்லையாம்.அதன்பின் அவர் ஒப்புக்கொண்டதற்குக் காரணம் இருக்கிறதென்கிறார்கள். அவரிடம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீராம் என்பவருக்கு உதவி செய்யும் விதமாக இந்தப்படத்தை எடுக்க இளையராஜா ஒப்புதல் கொடுத்துள்ளாராம். கனெக்ட் மீடியா மற்றும் மெர்க்குரி மூவிஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கவிருக்கின்றன.
அந்நிறுவனங்கள், இப்படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக அறிவித்தனர்.அதோடு, இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
அதுதவிர வேறெதையும் சொல்லவில்லை. அவர்கள் சொல்லவில்லையென்றாலும் இந்தப்படத்தை இயக்குநர் பால்கி இயக்கவிருக்கிறார் என்று திரையுலக வட்டாரத்தில் செய்தி உலவியது.இந்தியில் படங்கள் இயக்கியபோதும் இளையராஜா தான் வேண்டும் என்று இருந்தவர் அவர்.அதோடு ஏற்கெனவே தனுஷை வைத்து ஷமிதாப் என்கிற படத்தை இயக்கியவர்.இப்படி இருவருடனும் நெருக்கமாக இருப்பவர் என்பதால் அவரையே இப்படத்தை இயக்க வைக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்களாம்.அவரும் மகிழ்வுடன் பணிகளைத் தொடங்கியிருக்கிறார். ஆனால் திரைக்கதை உருவாக்கத்தில் ஏற்பட்ட கருத்து மாறுபாடு காரணமாக பால்கி இயக்குவதில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாம்.
இப்போது இயக்குநர் அருண்மாதேஸ்வரனை இப்படத்துக்கு இயக்குநராக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.அவர், இப்படத்துக்காகப் போடப்பட்ட அலுவலகத்தில் அமர்ந்து படத்தின் முன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளாராம்.
அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த கேப்டன்மில்லர் திரைப்படம் பொங்கல்நாளில் வெளியானது.சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான அப்படம் உருவாகும்போதே முதல்பாகத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம்பாகம் உருவாகும் என்று சொல்லப்பட்டது.
இப்போது அருண்மாதேஸ்வரன் இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருப்பதால் கேப்டன்மில்லர் 2 படம் வராது என்கிற கருத்து பரவிக்கொண்டிருக்கிறது.
தனுஷ் இப்போது சேகர்கம்முலா இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அதைத் தொடர்ந்து ஓர் இந்திப்படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.
இவற்றை முடித்துவிட்டு இளையராஜா வாழ்க்கைக் கதையில் அவர் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
இப்படி தனுஷ் வரிசையாகப் படங்கள் வைத்திருப்பதாலும் அருண்மாதேஸ்வரனை இங்கு அழைத்து வந்திருப்பதாலும் கேப்டன்மில்லர் 2 பட வேலைகள் நடக்காது.இதனால் அப்படம் கைவிடப்பட்டுவிட்டது என்று சொல்லப்படுகிறது.











