அதோமுகம் – திரைப்பட விமர்சனம்
நவீன தொழில்நுட்பங்கள் மனிதகுலத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் அதேவேளையில் மனிதநேய வீழ்ச்சிக்கும் காரணமாகிறது.குறிப்பாக மனிதர்களுக்குள்ளான அடிப்படை குணமான நம்பிக்கை பெரிதும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இதற்குச் சான்றாக வந்திருக்கும் படம் அதோமுகம்.
நாயகன் எஸ்.பி.சித்தார்த், நாயகி சைதன்யாபிரதாப் ஆகிய இருவரும் காதல் மணம் புரிந்த இணையர். மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தரும் நோக்கில் நாயகன் செய்யும் செயல் அவருக்கே பேரரதிர்ச்சியூட்டுகிறது. அப்படி அவர் செய்த செயல் என்ன? அவற்றின் விளைவுகள் என்னென்ன? என்பதை உள்ளம் அதிரும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கும் படம்தான் இது.
நாயகனாக நடித்திருக்கும் எஸ்.பி.சித்தார்த் புதுமுகம். நடிகர் அருண்பாண்டியனின் சகோதரிமகன் என்கிற அடையாள அட்டையுடன் வந்திருக்கிறார்.அன்பான காதலர், அழகான கணவர், எல்லா நம்பிக்கைகளும் குலைந்து அதிர்ந்து நிற்கும் மனிதர் ஆகிய பல பரிமாணங்கள் கொண்ட கதாபாத்திரம். அதை நிறைவாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
நாயகி சைதன்யாவும் புதுமுகம்தான்.ஆபத்தான அழகி.அவருடைய கதாபாத்திர வடிவமைப்பு எல்லா நம்பிக்கைகளையும் சீர்குலைக்கிறது. அந்தக் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்து மேலும் பயமூட்டுகிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக்,அப்பாவாக நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ் ஆகியோரும் ஜே.எஸ்.கவி, பிபின் குமார், சரித்திரன் ஆகிய மற்றோரும் பொருத்தமாக இருக்கிறார்கள்.
சிறப்புத்தோற்றத்தில் வந்து வியப்பூட்டுகிறார் அருண்பாண்டியன்.
அருண்விஜயகுமாரின் ஒளிப்பதிவில் இயற்கை அழகுகள் மட்டுமின்றி கதாபாத்திரங்களின் அகவுணர்வுகளும் காட்சிகளில் வெளிப்படுகின்றன.
மணிகண்டன்முரளியின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. சரண்ராகவனின் பின்னணி இசை அளவு.
குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு நிறைவான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் சுனில்தேவ். அன்றாட உபயோகத்திலிருக்கும், அத்தியாவசியமாகிவிட்ட நவீன கைபேசிகளில் உள்ள பேராபத்தை எடுத்துச் சொல்லி, அடுத்தென்ன என்பதை யூகிக்கமுடியா வண்ணம் திரைக்கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார்.
இவர் இன்னொரு புதுமுக இயக்குநர் அல்ல. தமிழ்த்திரையுலகுக்கு நம்பிக்கையான புதுவரவு
– தனா











