அட்லீ இயக்கும் அடுத்த படம் – உலாவரும் புதியதகவல்
இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் 2023 செப்டம்பர் ஏழாம் தேதி வெளியானது.
அப்படம் வெளியாகி ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட பிறகும் அட்லீயின் அடுத்தபடம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
ஆனாலும் அட்லீ இயக்கும் அடுத்தபடம் குறித்த பல செய்திகள் உலாவந்து கொண்டேயிருக்கின்றன.
ஜவான் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கும் புதியபடத்தில் விஜய் நாயகனாக நடிக்கவிருக்கிறார் என்றொரு செய்தி.
அட்லீயின் அடுத்தபடத்தில் விஜய் மட்டுமில்லை இந்திநடிகர் ஷாருக்கானும் இருக்கிறார் என்றொரு செய்தியும் இருக்கிறது.
இவை மட்டுமின்றி, அட்லீ அடுத்து தெலுங்கு நடிகர் அல்லுஅர்ஜூனைக் கதாநாயகனாக வைத்துப் படம் இயக்கவிருக்கிறார் என்றொரு செய்தியும் உலவிக்கொண்டிருக்கிறது.
ஜவான் படம் நடந்துகொண்டிருந்தபோதே, அல்லுஅர்ஜூன் படத்தை அட்லீ இயக்குவது குறித்த பேச்சுகள் நடந்ததென்றும்,அந்தப்படத்தை அல்லுஅர்ஜுனின் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறதென்றும் சொல்லப்பட்டது. அப்போது அட்லீயின் கேட்ட சம்பளம் மிக அதிகம் என்று அல்லுஅர்ஜூன் கருதியதால் அப்பேச்சு தடைபட்டதென்றும் ஒரு தகவல் உண்டு.
இந்நிலையில் இப்போது திரையுலகில் அட்லீ இயக்கும் அடுத்தபடம் பற்றிய புதியதகவல் ஒன்று உலவிக்கொண்டிருக்கிறது.
அதன்படி, அட்லீயின் அடுத்த படத்தில் அல்லுஅர்ஜூன் கதாநாயகன் என்பதில் மாற்றமில்லை.
ஆனால் அந்தப்படத்தைத் தயாரிப்பது யார்? என்பதில் கருத்துவேறுபாடு இருந்தது. அல்லுஅர்ஜுனின் நிறுவனம்தான் அந்தப்படத்தைத் தயாரிக்கவேண்டும் என்பது கதாநாயகனின் எண்ணம்.
அதேசமயம், சன்பிக்சர்ஸ் நிறுவனத்தில் முன் தொகை வாங்கியிருக்கிறார் அட்லீ. இதனால் அந்த நிறுவனத்துக்குத்தான் அடுத்த படத்தை இயக்கவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார் அட்லீ என்று சொல்லப்பட்டது.
இந்தச்சிக்கல் காரணமாகத்தான் அட்லீயின் அடுத்தபடம் குறித்த செய்தி எதுவும் வெளிவரவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில் இச்சிக்கலுக்குத் தீர்வு எட்டப்பட்டுவிட்டதாம்.
அட்லீ அல்லுஅர்ஜூன் ஆகிய இருவரும் இணையும் படம் என்றால் அது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டுமொழிகளிலும் நேரடிப்படம் என்றே கருதப்படும். எனவே, தெலுங்கில் அப்படத்தின் உரிமை அல்லுஅர்ஜுன் நிறுவனத்துக்கு என்றும் அப்படத்தின் ஓட்டுமொத்த தமிழ் உரிமை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு என்றும் முடிவாகிவிட்டது என்கிறார்கள்.
இதனால், அல்லுஅர்ஜூன் தற்போது நடிக்கும் புஷ்பா 2 படத்தின் வேலைகள் நிறைவடைந்தவுடன் அட்லீ இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்தத் தகவல் இப்போது பேசப்படும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்தான். இது மாற்றத்திற்குட்பட்டது. மாற்றம் என்றால் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்றும் சொல்கிறார்கள்.
என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்?










