ரஜினியின் அரசியல் நுழைவுக்குக் காரணம் இவர்தான்
கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிப் பேசப்பட்டு வந்தது. ஆனால் ரஜினி பிடிகொடுக்கவே இல்லை. இப்போதுதான் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
இவ்வளவு வருடங்கள் அரசியலில் ஈடுபடத் துணியாத ரஜினி, இப்போது துணிந்ததற்குக் காரணம் ஜெயலலிதா மறைவு மற்றும் கருணாநிதியின் அமைதி ஆகியன என்றும், பாஜகவின் தூண்டுதலால்தான் அவர் கட்சி ஆரம்பிக்கிறார் என்றும் சொல்லப்பட்டுவருகிறது.
இந்நிலையில், ரஜினி அரசியல்கட்சி தொடங்குவதற்கு இதுதான் காரணமென்று திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறுகிறார்.
அண்மையில் அவருடைய பட நிகழ்ச்சியொன்றில் பேசுகையில்,
ரஜினிகாந்த் சார் அரசியலில் வருவார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உறுதியாக நினைத்தேன். ரஜினி சார் இரஞ்சித்துடன் இணைந்து கபாலி படம் முடித்தபிறகு அரசியலுக்கு வருவார் என்று எண்ணியிருந்தேன். வரவில்லை. தற்போது இரஞ்சித்துடன் இரண்டாவது படம் செய்து முடித்தவுடன் அறிவித்திருக்கிறார்.
இது தான் இரஞ்சித்தின் பலம். இரஞ்சித் தன்னுடன் யார் பழகினாலும் அவர்களுக்கும் அரசியலின் முக்கியத்துவத்தைப் பேசி உணர்த்திவிடுவார். என்னைப் பொறுத்தவரை ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இரஞ்சித்தின் பங்களிப்பு இருக்கிறது என்று உறுதியாக நினைக்கிறேன். ஏனெனில் இரஞ்சித் தான் வாழும் இந்த சமூகத்தின் மீது பெரிதும் நம்பிக்கை கொண்டவர்
என்று பேசினார்.
அந்த மேடையில் பா.ரஞ்சித்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.











