சினிமா செய்திகள்

லவ்வர் பட வியாபாரம் – படக்குழு உற்சாகம்

கடந்த ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ்த் திரையுலகுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது குட்நைட்.

அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாராகியுள்ள அடுத்தபடம் லவ்வர்.

புது இயக்குநர் அறிமுகமாகிறார்.பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் புதியபடத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மாடர்ன்லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். கண்ணாரவி முக்கியவேடத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்துக்கு இசை ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா,படத்தொகுப்பு பரத் விக்ரமன், கலை ராஜ்கமல் பாடல்கள் மோகன்ராஜன்.

தற்காலக் காதல் அதில் நடக்கும் நிகழ்வுகள் ஆகியன குறித்த விவாதத்தை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லக்கூடிய படமாக இது தயாராகியுள்ளதாம்.

இப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படம் தெலுங்கில் ட்ரூலவ்வர் என்கிற பெயரில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி இப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் இணைய ஒளிபரப்பு உரிமையை முன்னணி நிறுவனமொன்ரு பெற்றிருக்கிறதாம்.

அதற்காக அந்நிறுவனம் கொடுத்திருக்கும் தொகை சுமார் நான்கரை கோடி என்று சொல்லப்படுகிறது.

தெலுங்கு வியாபாரம், தமிழ்நாடு முன் தொகை, ஒளிபரப்பு வியாபாரம் ஆகியனவற்றிலேயே பொருளியல் பாதுகாப்பைப் பெற்றிருக்கிறார்களாம்.

அதனால் படம் சம்பந்தப்பட்ட அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இந்தப்படம் இன்றைய இளம்தலைமுறையினரின் சரி மற்றும் தவறுகளை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டும் வகையில் இருப்பதால் திரையரங்குகளிலும் பெரிய வரவேற்பைப் பெறும் என்று மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறார்கள்.

இதுபோன்ற படங்கள் பெரும் வெற்றி அப்படக்குழுவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைத்துறைக்குமே நம்பிக்கையளிக்கும் என்பதால் அவர்கள் எண்ணம் பலிக்கட்டும்.

Related Posts