பார்க்கிங் படக்குழுவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட எம்.எஸ்.பாஸ்கர்
ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்திருக்கும் படம் பார்க்கிங்.அறிமுக இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்க, முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் இராம இராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். என்.கே.ராகுல் கலை இயக்குநராகப் பணியாற்ற, தினேஷ் காசி மற்றும் பீனிக்ஸ் பிரபு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.
இப்படம் நாளை வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இன்னொரு நாயகன் என்றும் சொல்லலாம் வில்லன் என்றும் சொல்லலாம் எனும் அளவுக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் ஓர் பகிரங்கக் கடிதம் வெளியிட்டிருக்கிறார்.
அதில்….
30/11/2023.
————
காலை வணக்கம்! ‘பார்க்கிங்’ ஓர் அருமையான படைப்பு! ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு! மிகச்சிறந்த இயக்கம்! தொய்வில்லாத கதையோட்டம்!
தெளிவான வசனங்கள், இடையிடையே இயல்பான, எல்லை மீறாத, ஆபாசம் துளியுமற்ற நகைச்சுவை அனைத்தும் அற்புதம்.
எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும் கிடைத்தது என்பது நூறு சதம் சத்தியம்!
படமாக்கும் போது நம்மிடையே எத்தனையோ விவாதங்கள் நடந்திருக்கலாம். அது கதை மீதும், எனக்களித்த வேடத்தின் மீதும், நம் அனைவரது உடல் நலத்தின் மீதும் உள்ள அக்கரையினால் மட்டும்தான் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக ஒரு விநாடி கூட என்னை தவறாக எண்ணக்கூடாது!
ஒருவேளை அறிந்தோ, அறியாமலோ பணியின் போது என்னால் யார் மனமாவது எள் முனையளவு வேதனைப்பட்டிருப்பினும் அதற்காக நான் இதயபூர்வமாக, இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
எனது வேண்டுகோள் என்னவென்றால்… அடுத்தடுத்த படங்கள் செய்யும் போதும் இதே பணிவையும், பண்பையும் நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே! ஒவ்வொரு படமும் நம் முதல் படம் என்ற எண்ணத்தோடே நாம் பணியாற்ற வேண்டும்.
இது என் 37 வருட திரைப்பயணத்தில் பல சாதனையாளர்களையும் , முன்னோர்களையும் பார்த்தும், அவர்களைப்பற்றி பலரிடம் கேட்டும் தெரிந்து கொண்டது.
துணிவே துணை!
பணிவே பலம்!
கவியரசர் கூறிய
“நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.”
என்ற வைர வரிகள் நம் மனங்களை விட்டு ஒரு கணமும் நீங்கலாகாது!
எனக்கு இந்த பொன்னான வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர்கள், திரு.சுதன் அவர்கள்,
திரு.சினீஷ் அவர்கள், இயக்குனர் திரு.ராம்குமார் அவர்கள், எனது அன்பு மகன் நாயகன் திரு.ஹரீஷ் அவர்கள், எனது அன்பு மகள் நாயகி செல்வி.இந்துஜா அவர்கள்,
திருமதி.ரமா அவர்கள், எனது அன்பு மகள் செல்வி. ப்ரார்த்தனா அவர்கள்,
அன்புத்தம்பிகள் தயாரிப்பு நிர்வாகிகள் திரு.முருகேசன் அவர்கள், திரு.ப்ரேம் அவர்கள், திரு.வினு அவர்கள்,
மற்ற நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர், மற்ற தொழில் நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வணங்குகிறேன்.
-அன்பன் எம்.எஸ்.பாஸ்கர். (நடிகர்)
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











