காதல் தோல்வி ரியோராஜ் – ஜோ படத்தின் கதை
அறிமுக இயக்குநர் ஹரிகரன் ராம்.எஸ் எழுதி இயக்கியிருக்கும் படம் ஜோ.இப்படத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடித்திருக்கிறார்.அவருக்கு இணையராக அறிமுக நடிகை மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிக்கா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சார்லி, அன்புநாதன், ஏகன், கெவின் ஃபெல்சன், வி.கே.விக்னேஷ் கண்ணா, விஜே ராகேஷ், இளங்கோ குமனன், ஜெயக்குமார், எம்.ஜே.ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்துக்கு,சித்து குமார் இசையமைக்க, ராகுல் கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வருண்.கே.ஜி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.அருளானந்தம் தயாரித்திருக்கிறார்.
இயக்குநர் ஹரிகரன் ராம் படம் பற்றிக் கூறியதாவது…..
நான் ஹிப் ஹாப் ஆதியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறேன்.அதோடு, ரியோ அண்ணா நடித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறேன். நாயகனின் 10 வருட வாழ்க்கைப் பயணம் தான் இந்தப் படத்தின் கதை. 17 வயது முதல் 25 வயது வரையிலான நாயகனின் வாழ்க்கையை இரசிக்கும்படியான காதல் கதையாகக் கொடுத்திருக்கிறேன். இரண்டு நாயகிகள், இருவரும் ஒரே மனநிலையில் இருப்பவர்கள். அதாவது, இந்த உலகத்தில் தனது தந்தை மட்டுமே தங்களுக்குப் பாதுகாப்பை அளிக்க முடியும், அவரைப் போல் இருக்கும் ஒரு ஆண் தான் தங்களது வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என்று எண்ணுகிறவர்கள், இவர்கள் இருவருடைய வாழ்க்கையிலும் நாயகன் நுழைகிறார். முதல் நாயகியுடனான காதல் சில காரணங்களுக்காகத் தோல்வியில் முடிகிறது. இரண்டாவது நாயகிக்கு வேறு ஒரு கனவு, வேறு ஒரு ஆசை இருக்கிறது. அவரை காதலித்துத் திருமணம் செய்யும் நாயகன், அவருடைய ஆசையைப் புரிந்துகொண்டு அதை நிறைவேற்றினாரா?, இல்லையா? என்பது தான் கதை.
காதல் கதைக்கு இசை மிக முக்கியம், அதன்படி இசை ரீதியாக இந்தப் படத்தை வேறு ஒரு தளத்திற்கு சித்துகுமார் கொண்டு சென்றுவிட்டார். படத்தின் பாடல்கள் அனைத்தும் இரசிகர்களைத் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கும் இரகமாக இருப்பதோடு, அவர்களின் மனதை உலுக்கும் விதமாகவும் இருக்கும். படத்திற்கு இசை மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. படம் பார்க்கும் போது நீங்களும் அதை உணர்வீர்கள் என்றார்.
நாயகன் ரியோ ராஜ் கூறியதாவது…..
எனக்கு இது மூன்றாவது படம். எனக்கு வேறு ஒரு ஆசை இருந்தது, நண்பர்கள் குழுவாகச் சேர்ந்து படம் பண்ணும் போது அது எப்படி இருக்கும் என்று ஆசைப்பட்டேன், அதனால் தான் இந்தப் படம் பண்ணினோம். என்னுடைய முதல் படத்திலேயே அதன் வெற்றியை நான் உணர்ந்தேன், அதனால் தான் அதுபோல் தொடர்ந்து படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். இயக்குநர் ஹரிஹரன் ராம் இந்தக் கதையை என்னிடம் சொல்லும் போது நான் நடிப்பதாக இல்லை. ஒரு காதல் கதை இருக்கிறது சொல்கிறேன் என்று சொல்லித் தான் என்னிடம் சொன்னார். கதையைக் கேட்டதும் அவரிடம் உள்ள உரிமையில், இதை இப்படிப் பண்ணலாம், அப்படிப் பண்ணலாம் என்று யோசனை சொல்ல ஆரம்பித்து விட்டேன். அப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது.
இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் புதியவர்கள் அல்லது வளர்ந்து வருபவர்கள். அதனால் எல்லோருக்கும் இது புதிய அனுபவமாக இருந்தது.அருளானந்தம் சார் தான் இந்தப் படத்தை நாம் பண்ணலாம் என்று சொல்லித் தொடங்கினார். இந்தக் கதைக்கும், படத்துக்கும் எவ்வளவு தேவையோ அதைச் செலவு செய்தார். இந்தப் படத்திற்காக நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் செய்தார்.
இது சிறப்பான காதல் கதையைக் கொண்ட படமாக வந்திருக்கிறது. படத்தில் பார்க்கிற கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் நிச்சயம் அனைவரது வாழ்க்கையிலும் நடந்திருக்கும். உங்கள் வாழ்க்கையில் அல்லது உங்கள் நெருங்கியவர்களின் வாழ்க்கையில் நடந்தவைகளாகத் தான் இருக்கும். இதைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வதோடு, தங்களுடன் படத்தைத் தொடர்புபடுத்திக் கொள்வார்கள், அந்த வகையில் படம் இயல்பான காதல் கதையாக வந்திருக்கிறது. இந்தப் படத்தைத் தொடங்கினோம்,முடித்தோம் என்று இல்லாமல், எங்களுடைய நெருக்கமானவர்கள், நண்பர்கள் உட்படப் பலருக்குப் படத்தைப் போட்டுக் காட்டினோம். அவர்கள் அனைவரும் சொன்னது படம் ரியலாக இருப்பதோடு, உணர்வுப்பூர்வமாக இருக்கிறது, படம் ரொம்ப பிடித்திருக்கிறது என்று சொன்னார்கள்.
நான் முதல் முறையாக தாடி வைத்து இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். இதற்காக ஒன்றரை வருடம் தாடி வளர்த்தேன். தொலைக்காட்சிகளில் நிறைய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தேன்.தாடி வளர்த்ததால் அந்த வேலையையும் என்னால் செய்ய முடியவில்லை. காரணம், படத்தின் கதைக்குத் தாடி ரொம்ப முக்கியம் என்பதால் அதை எடுக்காமல் வளர்த்து வந்தேன். காதல் தோல்வி என்றாலே தாடி வளர்க்க வேண்டுமா? என்று கேட்கிறார்கள். தாடி என்பது காதல் தோல்விக்கானது மட்டும் அல்ல, ஒருவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் காதல் தோல்வியில் இருந்து அவனால் மீள முடியாத சூழலை வெளிக்காட்டுவதாகும். எப்படி இருந்தாலும், காதலில் தோல்வியடைந்தவர்கள் அல்லது அதில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிப்பவர்கள் நிச்சயம் தாடி வளர்த்துக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த இயல்பு நிலையை வெளிக்காட்டும் வகையில் தான் நான் தாடி வளர்த்தேன்.
இயக்குநர் ஹரிஹரன் ராமுக்கு இது தான் முதல் படம், ஆனால் படத்தைப் பார்த்தால் அவரை முதல் பட இயக்குநர் என்று சொல்ல மாட்டோம். இதைப் பலர் சொல்லியிருந்தாலும், இந்த இடத்தில் நானும் இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். இயக்குநர் ஹரிஹரன் ராமின் இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் இரசிகர்களிடம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்
இவ்வாறு அவர் கூறினார்.












