விஜய் தொலைக்காட்சியை வாங்குகிறது சன்குழுமம்?
விஜய் தொலைக்காட்சியை ஸ்டார் குழுமம் வாங்கியவுடன் அது ஸ்டார் விஜய் ஆனது. அதன்பின் அதை உலக அளவில் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தியது.
விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் இணையதளம் ஆகியனவற்றை நடத்திவரும் டிஸ்னி நிறுவனம், இப்போது விஜய் தொலைக்காட்சியை விற்கும் முடிவுக்கு வந்திருக்கிறது.
ஹாட்ஸ்டார் தளத்தை மட்டும் வைத்துக் கொண்டு தொலைக்காட்சியை விற்பனை செய்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்தச் செய்தியை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் விட்டார்கள்.
இதன் விளைவாக அந்தத் தொலைக்காட்சியை வாங்க, அம்பானியின் ஜியோ நிறுவனம்,சோனி நிறுவனம் மற்றும் டாடா நிறுவனம் ஆகிய மூன்று முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகச் சொல்லப்பட்டது.
இச்செய்திகள் வெளியாகி இரண்டும் மாதங்களுக்கும் மேலாகிறது. அதன்பின் யாரிடமிருந்தும் எவ்வித அறிவிப்பும் வரவில்லை.
இந்நிலையில், இப்போது புதிய தகவலொன்று சந்தையில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
அது என்னவெனில்?
விஜய் தொலைக்காட்சியை, தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமாகத் திகழும் சன் குழுமம் வாங்கவிருக்கிறது என்பதுதான் அந்தச் செய்தி.
அதுகுறித்து விசாரித்தால், சன் குழுமம் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருக்கிறது என்றும் விலை மற்றும் பல நிபந்தனைகள் ஒத்துவந்தால் மட்டுமே விஜய் தொலைக்காட்சியை வாங்கும் முடிவை கலாநிதிமாறன் எடுப்பார் என்கிறார்கள்.
அதேசமயம், மூன்று பெரிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டின என்பதற்கு அப்புறம் சன் குழுமம் வாங்கவிருக்கிறது என்று பேசப்படுவதால் நிச்சயம் சன் குழுமத்தின் கைகளுக்கு விஜய் போய்ச்சேர்ந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.
என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்?











