இந்தியன் 2 தொடர்பாக ஷங்கர் புதிய திட்டம் – லைகா மறுப்பு
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது.
ஆனால், சார்ந்தோர் அனைவரும் அதிரும்படி இன்னும் இருபதுநாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் இயக்குநர் ஷங்கர் சொல்லியிருக்கிறார்.
கமல்ஹாசன் தேதி உட்பட பல சிக்கல்கள் இருப்பதால் இதுவரை எடுத்ததை வைத்தே படத்தை முடிக்கும்படி ஷங்கருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு அவர் மனம் ஒப்பவில்லையாம்.
அதனால்,இதுவரை எடுத்த காட்சிகளை வைத்து தொகுத்துப் பார்த்ததில் ஒரு விசயம் தெரிகிறது. இன்னும் சுமார் நாற்பது நாட்கள் வரை குறிப்பிட்ட சில விசயங்களைப் படமாக்கினால், இதையே இரண்டு படங்களாக மாற்றிவிடலாம், அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஷங்கர் கூறியிருக்கிறார்.
திட்டமிட்டதைவிடப் பலமடங்கு செலவாகிவிட்ட வருத்தத்தில் இருக்கும் தயாரிப்பு நிறுவனம், இன்னும் கொஞ்சம் செலவு செய்தால் இரண்டு படங்கள் கிடைத்துவிடும் என்பதால் மகிழ்ச்சியாக ஒப்புக்கொள்வார்கள் என்பது இயக்குநர் ஷங்கரின் எண்ணமாக இருந்திருக்கிறது.
ஆனால், படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் இதை ஏற்றுக்கொள்ளவில்லையாம்.
எங்களுக்கு இன்னொரு படமெல்லாம் வேண்டாம், இந்தப்படத்தைச் சொன்னபடி முடித்துக் கொடுங்கள் அதுவே போதும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.
இந்தப்படத்தை முடிப்பதற்கே இன்னும் இருபதுநாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்று ஷங்கர் நினைப்பதால் சிக்கல் எழுந்திருக்கிறது.
படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும் என்று ஷங்கர் நினைக்கிறார். இனி படப்பிடிப்புக்கு இடமில்லை என்று தயாரிப்புத்தரப்பின் எண்ணம். இவ்விரண்டும் எதிரெதிராக இருப்பதால் சிக்கல் நீடிக்கிறதாம்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் பல மட்டங்களில் நடந்துவருவதாகச் சொல்கிறார்கள்.
என்ன முடிவாகப் போகிறதெனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.











