தஞ்சாவூர் ஜிவி ஸ்டுடியோசிட்டி வளாகத்தை வாங்கினார் அருள்பதி – விவரங்கள்
நடிகர்திலகம் சிவாஜிகணேசன், தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் சுமார் 1 ஏக்கர் 15 சென்ட் பரப்பளவு நிலத்தில் இரட்டைத் திரையரங்குகள் கட்டினார்.
ஒரு திரையரங்குக்கு சாந்தி என தன்னுடைய மகளின் பெயரையும், மற்றொரு திரையரங்குக்கு தன்னுடைய மனைவி கமலாவின் பெயரையும் சூட்டினார்.
1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி திறப்பு விழா நடந்தது. அப்போதைய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் (பின்னாளில் குடியரசுத்தலைவர் ஆனவர்) தலைமை தாங்கினார்.அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர், சாந்தி-கமலா இரட்டைத் திரையரங்கைத் திறந்துவைத்தார்.
சாந்தி-கமலா இரட்டைத் திரையரங்கை 1995 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரர் திரையுலகில் ஜி.வி. என்று அறியப்பட்ட ஜி.வெங்கடேசுவரன் வாங்கினார். அதுவரை இரட்டை அரங்கமாக இருந்த திரையரங்கு புனரமைக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு முதல் 5 திரையரங்குகளாக மாற்றப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு திரையரங்குக்கு சிவாஜி பெயரிடப்பட்டது. அதன்படி சாந்தி, கமலா, சிவாஜி, ஜி.வி., ஜி.வி. கோல்டு என 5 திரையரங்குகள் அடங்கிய அந்த வளாகம் ‘ஜி.வி.ஸ்டூடியோ சிட்டி’ என்ற பெயர் மாற்றத்துடன் இயங்கத் தொடங்கியது.
ஜீவியிடமிருந்த இந்தத் திரையரங்க வளாகம் ஐசரிகணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கைவசம் சென்றது.
அவரிடமிருந்து அந்த அரங்குகளைக் குத்தகைக்கு எடுத்து நடத்திவந்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ். அண்மையில் குத்தகைக் காலம் நிறைவடைந்தது. ஆனால், மேலும் அதைத் தொடர விரும்பாமல் விட்டுவிட்டார் ஹாரிஸ்ஜெயராஜ்.
இப்போது,ஐசரிகணேஷிடமிருந்து அந்த வளாகத்தை மொத்தமாக விலைக்கு வாங்கியிருக்கிறார் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் அருள்பதி.
அதன் விலை மொத்தம் நாற்பத்தைந்து கோடி என்று சொல்லப்படுகிறது. வளாகத்தை வாங்கியவுடன் மேலும் பத்துகோடி செலவில் அதை மேம்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்களாம்.
திரையரங்க வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் இறங்கி தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அருள்பதி இவ்வளவு முதலீடு செய்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதோடு இவர் போன்ற திரைப்படக்காதலர்கள் இருக்கும் வரை திரைத்துறையை ஒன்றும் செய்யமுடியாது என்றும் புகழ்கின்றனர்.










