விமர்சனம்

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் – திரைப்பட விமர்சனம்

ஒரு பெண்ணுக்காக அடித்துக் கொள்ளும் கதை என்று முன்னுரை வாசித்துவிட்டுத் தொடங்குகிறது படம்.

சொத்துக்காக தன்னை அடையத் துடிக்கும் மாமன்களிடமிருந்து ஒதுங்கி வாழ்கிறார் நாயகி சித்தி இதானி. அதோடு நாயகன் ஆர்யாவைச் சந்திக்க முனைகிறார். அது தெரிந்து ஆர்யாவே அவரைத் தேடி வருகிறார். அப்புறம் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம்.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு உள்ளாடை தெரிய அடித்து விளையாடியிருக்கிறார் ஆர்யா. அடித்துக் கொள்ளும் கதை என்று சொன்னதோடு நில்லாமல் படம் நெடுக அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏராளமான சண்டைக்காட்சிகள். அனல் அரசு வுக்குக் கொடுத்த சம்பளத்துக்குக் குறைவில்லாமல் வேலை செய்திருக்கிறார்.

ஆக்‌ஷன் படமென்றால் அதிக சண்டைக்காட்சிகள் என்கிற தவறான புரிதலால் இந்தக் கோளாறு. இன்றைக்கும் என்றைக்கும் இரசித்துப் பார்க்கக்கூடிய படமாக இருக்கும் ரஜினியின் பாட்ஷா வில் ஒரேயொரு சண்டைக்காட்சிதான் என்பதை முத்தையாவுக்குச் சொல்லுங்கள்.

நாயகி சித்தி இதானி வரும் காட்சிகள் ஆறுதல். மண் மணம் மாறாத பெண்ணாக வலம் வருகிறார்.

முஸ்லிம் பின்னணியில் நடித்துள்ள பிரபு,சிறப்புத் தோற்றத்தில் வரும் பாக்யராஜ் ஆகியோர் அளவாக நடித்து பலமாக இருக்கிறார்கள்.நகைச்சுவைக்கென வரும் விக்னேஷ் காந்த், சிங்கம்புலி ஆகியோர் சோதிக்கிறார்கள். ஹேமா தயாள் நன்று.

மதுசூதன ராவ், ஆடுகளம் நரேன், தமிழ், அவினாஷ், ஆர்.கே விஜயமுருகன் ஆகியோரில் தமிழ் கவனிக்க வைக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை சண்டைக்காட்சிகளில் பலமாகவும் மற்ற காட்சிகளில் பலவீனமாகவும் இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தன் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார். காட்சிகளில் புழுதி பறக்கிறது.

படத்தொகுப்பாளர் வெங்கட்ராஜன், சண்டைக்காட்சிகளைச் சரியாகக் கொடுத்துவிட வேண்டும் என்று மட்டும் யோசித்திருப்பார் போலும்.

கிராமத்துக்கதை, ஆக்ரோசமான நாயகன், அழகான நாயகி ஆகியனவற்றோடு பாசமான காட்சிகளைச் சேர்த்துக் கொடுத்து கவனம் ஈர்த்து வரும் முத்தையா, இந்தப்படத்தில் சாதி கடந்து மதம் தாண்டிய மனிதநேயம் பேசுகிறார். ஆனால், அவரே அமைத்த சண்டை இரைச்சல்களில் அவை கேட்காமல் போயிருப்பதுதான் கடும்சோகம்.

– வேலன்

Related Posts