விமர்சனம்

துரிதம் – திரைப்பட விமர்சனம்

பயணத்தைக் கதைக்களமாகக் கொண்டு அவ்வப்போது வெளியாகும் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது துரிதம்.

நாயகனுக்கு வாடகைமகிழுந்து ஓட்டுநர் வேடம். நாயகி அவருடைய வாகனத்தில் பயணிப்பவர். நாயகி மீது நாயகனுக்கு ஒருதலைக் காதல். இந்தச் சூழலில் இருவரும் ஒரு நீண்ட துள்ளுந்துப் பயணம் மேற்கொள்கிறார்கள். அப்போது நாயகி கடத்தப்படுகிறார்.

அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைத் துரிதமாயச் சொல்லியிருக்கிறது படம்.

வாடகை மகிழுந்து ஓட்டுநர் வேடம்தானே என்று அலட்சியம் காட்டாமல் அதற்காக மெனக்கெட்டு நடித்திருக்கிறார் நாயகன் ஜெகன். அதிரடி காட்டவும் தெரிந்திருக்கிறது. அன்புக்கு ஏங்கவும் தெரிந்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் ஈடனுக்கும் கனமான கதாபாத்திரம். அதற்குத்தக நடித்துக் கவனம் ஈர்க்கிறார்.அப்பாவுக்கும் அவருக்குமான காட்சிகள் பல அர்ததங்களைச் சொல்கின்றன.

சிரிக்க வைப்பதற்காக பாலசரவணன் வருகிறார். அங்கங்கே சிரிக்கவும் வைக்கிறார்.

நாயகியின் தோழிகளாக வரும் வைஷாலி,ஶ்ரீநிகிலா,ஐஸ்வர்யா ஆகியோர் திரையை மட்டுமின்றி மனதையும் நிறைக்கிறார்கள்.

ஏ.வெங்கடேஷ், பூ இராமு,வில்லனாக நடித்திருக்கும் ராம்ஸ் ஆகியோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.

வாசன் மற்றும் அன்பு டென்னிஸ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். திரைக்கதையில் பயணத்துக்கு முக்கியப்பங்கு என்பதால் காட்சிகளும் முதன்மை பெறுகின்றன.

நாகூரான், சரவணன் ஆகிய இருவர் படத்தைத் தொகுத்திருக்கிறார்கள். தலைப்பின் பொருளைப் படத்திலும் காட்ட முயன்றிருக்கிறார்கள்.

நரேஷின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் தாழ்வில்லை.

இயக்கியிருக்கும் சீனிவாசன், சாதியச் சிக்கல் எனும் கனமான விசயத்தை பயணம் எனும் எளிய வாகனத்தில் ஏற்றி வலம் வந்திருக்கிறார்.

துரிதம் – வேகமும் விவேகமும்

– குமார்

Related Posts