குலசாமி – திரைப்பட விமர்சனம்
காதல்கதை மற்றும் மென்மையான கதைகளில் நடித்துக் கொண்டிருந்த விமலை, கரடுமுரடான தோற்றத்தில் முழுக்க முழுக்க சண்டை நாயகனாக மாற்றி எடுக்கப்பட்டிருக்கும் படம் குலசாமி.
முகம் முழுவதும் தாடி மீசையுடன் அதிரடி செய்யும் நாயகன் வேடத்துக்காகத் தன்னைத் தயார் செய்திருக்கிறார் விமல். தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் வெளிப்படுத்துகிறார்.கனல்கண்ணன் அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகளுக்கு வலுச்சேர்த்திருக்கிறார்.
நாயகி தான்யாஹோப்புக்குப் பெரிதாக வேலையில்லை,அதேசமயம் இருக்கும் வேலையைச் சரியாகச் செய்துள்ளார்.
வினோதினி, போஸவெங்கட்,ஜனனி பாலு உட்பட படத்தில் நடித்திருக்கும் பலரும் பொருத்தமாக இருக்கிறார்கள்.
முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாங்கிட், காவல்துறை அதிகாரியாகவே வந்துபோகிறார்.
வைட்ஆங்கிள் ரவிசங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் இயல்பாக அமைந்திருக்கின்றன.
வி.எம்.மகாலிங்கத்தின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை, பின்னணி இசையில் தாழ்வில்லை.
கோபிகிருஷ்ணனின் படத்தொகுப்பு பலவீனம்.
இந்தப்படத்துக்கு வசனம் எழுதியிருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி.
நாட்டில் அடிக்கடி நடக்கும் பாலியல்வன்கொடுமை நிகழ்வுகள் அவற்றில் ஈடுபடும் கொடூரன்கள் பணபலம் மற்றும் அதிகாரபலத்தால் தப்பித்துவிடும் நிகழ்வுகள கண்டு கொதித்துப்போய் இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சரவணஷக்தி.
அவருடைய நல்லெண்ணத்தைத் திரைமொழியில் மொழிபெயர்ப்பதில் பின் தங்கியிருக்கிறார்.
சரியா? தவறா? என்கிற விவாதத்தைத் தாண்டி இப்படி ஒரு குலசாமி இருந்தால் நல்லது என நினைக்க வைத்திருக்கிறார்.
– அரசு











