கவின் நடிக்கும் புதியபடம் – விவரங்கள்
நடிகர் கவின் நடிப்பில் அண்மையில் வெளியான டாடா படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
அதனால் அவரைத் தேடி நிறையப்படங்கள வரத்தொடங்கியுள்ளன.
அவர் தன்னுடைய சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தியபோதும் அந்தச் சம்பளத்தைக் கொடுத்து அவரை நடிக்க வைக்கப் பல நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அவர் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டாலும் அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் பற்றி உலாவரும் தகவல் என்ன?
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநர் நெல்சன் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் நெருங்கிய நண்பர்.
அவர் இப்போது இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார். அவர் இயக்கும் படத்தில்தான் கவின் நடிக்கவிருக்கிறாராம்.
அந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பது ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என்கிறார்கள்.
டாடா படத்துக்கு முன்பே கவின் ஓரிரு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு முன்தொகையும் வாங்கியிருக்கிறார்.
அவற்றை முந்திக்கொண்டது நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.
அதற்குக் காரணம், டாடா படத்துக்குப் பிறகு கவின் பிம்பத்தில் பெரும் மாற்றம். இனிமேல் அதற்கேற்ற கதைகளில் நடித்தாக வேண்டும் என்கிற நிலை. அதனால் முன்பு ஒப்புக்கொண்ட படங்களை அப்படியே தொடங்காமல் அதில் பல மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது ஒன்று.
இன்னொன்று, நடன இயக்குநர் சதீஷ் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ஆதரவு முழுமையாக இருப்பது அப்படத்துக்குப் பெரும்பலம் என்பது.
இந்தக் காரணங்களால் முதலில் அந்தப்படத்தில் நடிக்கவிருக்கிறார் கவின் என்கிறார்கள்.
இவை வெளிப்படையாக சொல்லப்படும் காரணம் என்றால் வெளியில் சொல்லப்படாத காரணம் புதியசம்பளம்தான் என்றும் சொல்லப்படுகிறது.
சம்பந்தப்படவர்களுக்கே வெளிச்சம்.












