சம்பளம் வரவில்லை செலவு செய்த பணமும் வரவில்லை – ஆர்யா தவிப்பு
முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இதானி உட்பட பலர் நடிக்கும் படம் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம்.
இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார்.
இந்தப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. அதன்பின் அந்நிறுவனத்துடன் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்தது.
அக்டோபர் 9 ஆம் தேதியன்று இப்படத்துக்கு பூசை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.
இப்படம் குறித்து ஜீ ஸ்டுடியோவின் சவுத் மூவிஸ் தலைவர் அக்ஷய் கெஜ்ரிவால் கூறுகையில்…,
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் எங்களது அடுத்த திரைப்படத்தில் ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஆர்யா தொடர்ந்து மாறுபட்ட பாத்திரங்களில் வித்தியாசமான படங்கள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் இயக்குநர் முத்தையா அனைத்துத் தரப்பு இரசிகர்களின் நாடித்துடிப்பை நன்கு புரிந்து கொண்டவர். இவர்கள் கூட்டணி பார்வையாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்தை வழங்கும் என்பது உறுதி. சிறந்த உள்ளடக்கங்கள் கொண்ட, பல அற்புதமான படங்களை வழங்கிய ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.நாங்கள் அனைவரும் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தைத் தரும் நல்ல படைப்பை வழங்குவோம் என்று நம்புகிறோம் என்று கூறியிருந்தார்.
ஆனால், இப்போது அந்நிறுவனம் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
படப்பிடிப்புக்கு உண்டான செலவைக்கூட அந்நிறுவனம் கொடுக்கவில்லையாம். அதனால் தன் சொந்தப்பணத்தைப் போட்டு படப்பிடிப்புச் செலவுகளை ஆர்யாவே செய்தார் என்றும் கூறப்படுகிறது.
இப்போது படப்பிடிப்புக்குப் பின்பான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இப்போதும் ஜீ நிறுவனத்திடமிருந்து பணம் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
இப்படத்துக்குப் பெரிய சம்பளம் பேசினார்கள் அதை நம்பி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஆர்யா, இப்போது சம்பளமும் வராமல் செலவு செய்த தொகையும் வராமல் தவித்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆர்யா, ஜீ நிறுவனம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாமா? என ஆலோசித்து வருகிறாராம்.











