இந்தியன் 2 படத்தை நிராகரித்த சத்யராஜ். ஏன்?
ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இப்போது இயக்குநர் ஷங்கர் அப்படத்தின் திரைக்கதையிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறாராம். அதன்படி ஒரு புதிய கதாபாத்திரம் படத்தில் இடம்பெறவிருக்கிறதாம்.
முதல்பாகத்தில் இடம்பெற்ற நெடுமுடி வேணு கதாபாத்திரத்திற்கு மேலான காவல்துறை உயரதிகாரி வேடம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.
அந்தவேடத்தில் சத்யராஜ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து அவரை அணுகியிருக்கிறார்கள்.
இதுவரை கமலும் சத்யராஜும் சேர்ந்து நடித்த காக்கிச்சட்டை, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் அவர்கள் எதிரும்புதிருமாகப் பேசிக்கொண்ட வசனங்களை வைத்துக் காட்சிகள் எழுதப்பட்டிருக்கின்றனவாம்.
இதனால் அவரை நடிக்கக் கேட்டிருக்கிறார்கள்.
திரைக்கதையைக் கேட்டுவிட்டு உடனே ஒப்புக்கொண்டாராம் சத்யராஜ்.
ஆனால் அதன்பின் அவர் கேட்ட சம்பளத்தால் அரண்டு போனதாம் படக்குழு.
அவருக்கு சுமார் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டதால் ஒரு நாளைக்கு ஒரு கோடி கொடுத்துவிடுங்கள் என்று கேட்டாராம் சத்யராஜ்.
படக்குழுவுக்குப் பேரரதிர்ச்சி. அதேசமயம் அவரைத் தவிர்த்து வேறு யார் நடித்தாலும் அந்த வேடம் பெரிதாகப் பேசப்படாது எனும் நிலை. இதனால் சம்பளத்தைக் குறைக்கச் சொல்லி மன்றாடியிருக்கிறார்கள்.
அதனால் கொஞ்சம் இறங்கிவந்த சத்யராஜ், மொத்தமாகப் பனிரெண்டு கோடி சம்பளம் கொடுங்கள் என்று கேட்டாராம்.
அதுவும் அதிகம் இன்னும் குறையுங்கள் என்று கேட்டதோடு ஐந்துகோடி சம்பளம் கொடுக்கிறோம் என்று படக்குழு சொல்லியிருக்கிறது.
அதற்கு உடன்பட மறுத்த சத்யராஜ்,இவ்வளவு பெரிய செலவில் படமெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக்கு இந்த சம்பளம் கொடுக்கக்கூடாதா? என்னால் இதற்குமேல் குறைக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்.
அதன்பின் இன்னும் ஒரு கோடி சேர்த்து ஆறுகோடி கொடுப்பதாக படக்குழு சொல்லியிருக்கிறது.
அதற்கு சத்யராஜ் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இந்தியன் 2 படத்தில் சத்யராஜ் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.











