December 19, 2025
சினிமா செய்திகள் நடிகை

பாலியல் சீண்டல் பற்றி அமலாபால் பரபரப்பு அறிக்கை

 

சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் ரீதியான அணுகுமுறையில் பேசியதாக நடிகை அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி புகார் அளித்தார். இதனால் அழகேசனை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று தனியார் நிறுவனத்தைச் சார்ந்த பல்லாவரம் பாஸ்கர் என்பவரும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அமலாபால் இன்று  (12.02.2018) வெளியிட்ட அறிவிப்பில்,

கடந்த ஜனவரி 31-ம் தேதியன்று நான் சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது அங்கு நுழைந்த நபர் ஒருவர் இந்த நிகழ்வு பற்றி என்னிடம் முக்கியமான ஒன்று பேச வேண்டியிருக்கிறது என்று கூறினார். மேலும் மலேசியாவில் நடைபெறும் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஸ்பெஷல் டின்னர் இருக்கிறது என்றும் கூறினார்.

நான் அவரிடம் அது என்ன ஸ்பெஷல் டின்னர் என்று கேட்டேன். அவர் உடனே தோள்களைக் குலுக்கி விட்டு, ‘டோன்ட் பி எ ஃபூல், நீ ஒன்றும் குழந்தையல்ல’ என்றார். அவர் இப்படிக் கூறும்போது நாங்கள் இருவர் மட்டும்தான் இருந்தோம், சுற்றி ஒருவரும் இல்லை, இதனையடுத்து நான் அதிர்ச்சியடைந்தேன். அவர் அருவருக்கத்தக்க விதத்தில் பேசினார்.

இது குறித்து எனது ‘பாசிட்டிவ்’ ஆன பதிலுக்காக காத்திருப்பதாகக் கூறி ஸ்டூடியோவுக்கு வெளியே சென்றுவிட்டார். நான் என் நலம் விரும்பிகளையும் பிற ஊழியர்களையும் உதவிக்கு அழைத்தேன். அவரை இவர்கள் பிடிக்க சுமார் 30 நிமிடங்கள் ஆயிற்று. ஏதோ வர்த்தகப் பேச்சு வார்த்தையின் ஒரு சகஜமான தினம் போல் அவர் பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் நின்று கொண்டிருந்தார்.

எங்கள் ஆட்கள் அவரை நெருங்குவதைப் பார்த்த பிறகு, ‘அவர் விரும்பவில்லை எனில் வேண்டாம் என்று கூறலாம், இது என்ன பிக் டீல்’ என்று கூறியபடியே தப்பிக்க முயன்றார். எங்கள் ஆட்கள் அவரை நெருங்கியவுடன் அவர்களைத் தள்ளிவிட்டு தப்பிக்கப் பார்த்தார், ஆனால் இவர்கள் அவரைப் பிடித்து ஸ்டூடியோவில் அடைத்து வைத்தனர். அப்போதுதான் எனக்கு அவரைப் பற்றிய முழு விவரம் தெரியவந்தது, அவர் பாலியல் விவகாரக் கும்பல் ஒன்றின் உறுப்பினர் என்றும் எனது சமீபத்திய தொலைபேசி எண்ணையும் தன் செல்பேசியில் சேமித்து வைத்துள்ளார் என்றும் என்னைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரித்துள்ளார் என்றும் என்னைப் பற்றி மட்டுமல்ல மலேசியா நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைத்து நடிகைகளின் விவரங்களையும் திரட்டியுள்ளார் என்றும் எனக்குத் தெரியவந்தது. போலீஸ் வந்த பிறகு இந்த நபரை நாங்கள் ஒப்படைத்தோம். நானும் தி.நகர் போலீஸ் நிலையத்துக்கு எஃப்.ஐ.ஆர். புகார் பதிய விரைந்தேன்.

போலீஸ் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்ததற்கும் அவர்கள் இந்தக் கும்பல் பற்றிய அனைத்து ஆதாரங்களையும் திரட்டியதோடு இது தொடர்பாக மேலும் 2 பேரைக் கைதும் செய்துள்ளனர், இதற்காக நான் போலீஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சந்தேகத்துக்குரிய நபர்கள் சிலருக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் வெளிவரும் அனைத்துப் பெயர்களையும் பொதுமக்கள் அறியும் வண்ணம் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்று என்ன நடந்தது என்று தெரியாமலும் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தெரியாமலும் சில ஊடகங்கள் என் மேலாளரைப் பற்றி அவதூறு தகவல்களை வெளியிட்டு வருகின்றன. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்குத் தடையாக நான் இருக்க விரும்பவில்லை, அதனால்தான் இதுவரையிலான கண்டுபிடிப்புகள் குறித்து நான் மவுனம் காக்கிறேன். ஆனால் இதற்காக இது போன்ற மலிவான செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு போடாமல் விடமாட்டேன்.

சென்னை போலீஸார் விசாரணையில் என் மேலாளர் பிரதீப் குமாருக்கோ என் குழு உறுப்பினர் எவருக்குமோ எந்த ஒரு தவறான நடவடிக்கையிலும் தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது என்பதை அறிவிப்பதற்காகவும் இந்த அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்

இவ்வாறு அமலாபால் தெரிவித்துள்ளார்.

Related Posts