சினிமா செய்திகள்

வெளிப்படையாக துணிவு மறைமுகமாக வாரிசு – இதுதான் இப்போதைய பேச்சு

தெலுங்கு இயக்குநர் வம்சிபைடிபள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் வாரிசு.

இப்படம் 2023 பொங்கல்நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், எச்.வினோத் இயக்கத்தில் அஜீத், மஞ்சுவாரியர் உட்பட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் துணிவு.

இப்படமும் 2023 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

துணிவு படத்தைத் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட்ஜெயன்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது. இத்தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அவர் உரிமை பெற்றிருந்தாலும், திரையரங்குகளில் வெளியிடும் பொறுப்பை ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடமே கொடுக்கவிருக்கிறாராம்.

திருச்சி தவிர மற்ற விநியோகப்பகுதிகள் அனைத்திலும் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தினரே திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

அவர் ஏன் ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டும்?

ரெட்ஜெயண்ட் நிறுவனம் திரையரங்குகளிடம் எவ்வித முன் தொகையும் வாங்காமல் படத்தைக் கொடுக்கும் வழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள்.

லலித்குமார், வாரிசு படத்துக்கு திரையரங்குக்காரர்களிடம் முன் தொகை கேட்டால் பலர் பின்வாங்கிவிடுவார்கள். எனவே அதிக மற்றும் நல்ல திரையரங்குகள் கிடைக்காமல் போகும் ஆபத்து இருக்கிறது. எனவே படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடமே கொடுத்துவிட்டால்,அவர்கள் இரண்டு படங்களுக்கும் சம அளவில் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வார்கள்.

இதனாலேயே வாரிசு படத்தை ரெட்ஜெயன்ட் நிறுவனத்திடம் கொடுக்கும் முடிவை லலித்குமார் எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

ஆக வெளிப்படையாக துணிவு படத்தையும் மறைமுகமாக வாரிசு படத்தையும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது என்பதுதான் இப்போதைய சூடான பேச்சு.

Related Posts